காசு பார்க்க சூப்பர் வழி!
தினமும் காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறுமணிவரை அலுவலகம் சென்றால்தான் நாலு காசு பார்க்கமுடியும் என்கிற காலம் தற்போது மலையேறி விட்டது.ஒரு கணிப்பொறி, இணைய இணைப்பு இரண்டும் இருந்தால் போதும், இருக்கின்ற இடத்தில் இருந்து சுலபமாக பணம் பண்ணி விடலாம்.அப்படி,ஆன்லைனில் கொட்டிக்கிடக்கின்ற வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்கள் உங்களுக்காக…
எழுதியும் சம்பாதிக்கலாம்!
ஆன்லைனில் ப்ரீலான்ஸ் எழுத்தாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக, தமிழில் இருந்து ஆங்கிலம்,ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று மொழிபெயர்ப்பு எழுத்தாளர்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. எடுத்துக்காட்டாக, FIVERR, UPWORK மாதிரியான வெப்சைட்களின் உதவியோடு நிறைய ப்ரீலான்ஸ் வாய்ப்புகளைப் பெற முடியும்.
யூ-டியூபில் சானல்
நீங்களே சொந்தமாக யூ-டியூபில் சானல் ஒன்றைத் தொடங்கலாம். சுவையான விஷயங்கள், தகவல்கள், நிகழ்வுகளை அதில் அப்லோட் செய்யலாம்.குறிப்பாக கல்வி சம்பந்தமான தனித்துவமான விஷயங்களை அதில் பகிரலாம்.
இல்லையென்றால், குறிப்பிட்ட பாடங்களை டுட்டோரியல் போல,யூ-டியூப் மூலமாகவே சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் உங்களுக்கு எக்கச்சக்கமாக பணம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இணைய வாத்தியார்!
ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஹை-ஸ்பீட் இண்டர்நெட் ஆகிய இரண்டும் இருந்தால்போதும், ஆன்லைன் டியூட்டர் ஆகிவிடலாம். பள்ளிக் குழந்தைகள் முதல்,கல்லூரி மாணவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும்,ஆன்லைனில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம்.பள்ளிப் பாடங்கள் மட்டுமல்ல,இந்தி,பிரெஞ்ச் போன்ற மொழிகளைச் சொல்லிக் கொடுக்கலாம்.
அதுமட்டுமல்ல, பைபிள், நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற ஆன்மீக நூல்களைக் கற்றுக்கொள்ள நிறையப் பேர் விரும்புகிறார்கள். இந்தத் தேவைகளை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆன்லைன் டியூட்டராக மாறி சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.
இசையால் வசமாகா இதயம் எது?
வேலை காரணமாக,அமெரிக்கா,ஆப்பிரிக்கா என்று எங்கெங்கோ சென்று வாழும் நம் மக்கள் நம் பாரம்பரிய இசை முறைகளைக் கற்றுக்கொள்ள மிகவும் விரும்புகிறார்கள்.
நீங்கள் கர்நாடக இசை,ஹிந்துஸ்தானி என்று ஏதாவது ஒன்றில் புலமை பெற்றவரா?ஆம் என்றால்,ஆன்லைனில் சங்கீத குருவாகி விடுங்கள்.ஸ்கைப் மூலமாக மாணவர்களுக்குப் பாடம் எடுங்கள்.பணம் பாருங்கள்.
கணிப்பொறியில் கலைவண்ணம் செய்தால்…?
நீங்கள் ஒரு டிசைனரா?உங்கள் தாயாரிப்புகளை ஆன்லைனில் விற்க ஆசையா?அப்படியென்றால் CAFEPRESS போன்ற PRINT ON DEMAND வெப்சைட்கள் உங்களுக்கு கைகொடுக்கும்.
இந்த இணையதளத்தில் நீங்கள் ரிஜிஸ்டர் செய்த பிறகு அதில் உங்களுக்கென்று ஒரு ஆன்லைன் ஷாப்பை உருவாக்கி,அதில் நீங்கள் டிசைன் செய்த தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த முடியும்.
உங்களுக்கென்று நீங்கள் உருவாக்கிய அந்த ஆன்லைன் ஷாப்பில்,அந்த வெப்சைட்டில் இருக்கின்ற ஆன்லைன் டூல்களின் உதவியோடு,கைப்பைகள்,டி-ஷர்ட்,மற்றும் ஆடைகளை டிசைன் செய்தும் அதில் காட்சிப்படுத்தலாம்.
நீங்கள் டிசைன் செய்த தயாரிப்பை யாராவது வாங்க நினைத்தால்,சம்பந்தப்பட்ட அந்த வெப்சைட்,வாடிக்கையாளருக்கு நீங்கள் உருவாக்கிய டிசைனில் குறிப்பிட்ட பொருளைத் தயாரித்து கொடுக்கும்.உங்களுக்கு நீங்கள் உருவாக்கிய டிசைனுக்கான ராயல்டி கிடைக்கும்.
-சு.கவிதா.