சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராமின் வளர்ச்சி அபரிமிதமானது. பிரபலங்கள் தங்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவார்கள். இந்தப் படங்கள் அதன்பிறகு வைரலாகும். இவைதான் இன்ஸ்டாகிராமின் அதிகபட்ச பயன் என்று நம்மில் சிலர் நினைக்கக் கூடும். ஆனால் உண்மை நிலவரம் இதுவல்ல.
கிட்டத்தட்ட ஐநூறு மில்லியன் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். தினமும் 4.2 பில்லியன் பதிவுகள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுகின்றன. அதுமட்டுமல்ல, இன்ஸ்டாகிராமில் தங்களுடைய வாழ்க்கைக் கதைகளை பகிர்ந்துகொள்ளவும் வசதிகள் இருக்கின்றன.
இதுபோன்ற உத்வேகமூட்டும் வாழ்க்கைக் கதைகளைப் ரசித்துப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் இன்ஸ்டாகிராமில் அதிகம் என்பதால் தினம்தோறும் முன்னூறு மில்லியன் மக்கள் வாழ்க்கைக் கதைகளைப் பதிவிடுகிறார்கள்.
இப்படி படித்து உத்வேகமடைய மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்கவும் இன்ஸ்டாகிராம் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. அவை குறித்த அறிமுகம் உங்களுக்காக…
பின்தொடர்ந்தால் காசு!!!
உங்களுடைய இன்ஸ்டாகிராமில் உங்களை பின்பற்றுபவர்கள் அதாவது follow செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமா? அப்படியென்றால் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விளம்பரப்படுத்த உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது விளம்பரங்கள் வெளிவரும். அதற்கு ஏற்ற பணத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உங்களுக்குக் கொடுத்துவிடும்.
சரி…..தோராயமாக எத்தனை பேர் இன்ஸ்டாகிராமில் உங்களைப் பின்தொடர்ந்தால் உங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? நான்காயிரம், ஐயாயிரம் என்கிற எண்ணிக்கையில் ஆரம்பித்தால் கூடப் போதும் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிறுவனங்கள் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஆள்பிடித்தும் சம்பாதிக்கலாம்!
உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அப்படி ஒன்றும் நிறையப் பேர் பின்தொடரவில்லையா? கவலையை விடுங்கள். உங்களது இன்ஸ்டாகிராம் பக்கம் எந்த ஒரு குறிப்பிட்ட செய்தியை அதிகம் விவாதிக்கிறதோ அதைக் கவனியுங்கள்.
உதாரணத்திற்கு உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் உடல் நலம் குறித்த செய்திகளை அதிகம் பேசுகிறதா? அப்படியென்றால் பிட்னெஸ் சார்ந்த நிறுவனங்களைத் தேடுங்கள். அவர்களது நிறுவனத்தின் விளம்பரங்களை உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.
அப்படி நிறுவனங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா? உங்களுக்கும் பொருட்களைத் தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தித்தர நிறைய மார்க்கெட்டிங் நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. கிரேப்வைன்(GRAPEVINE), கிரவுட்டேப்(CROWD TAPE), பஸ்வெப்(BUZZWEB )போன்ற மார்க்கெட்டிங் நிறுவனங்கள் அவற்றில் முக்கியமானவை.
சொந்தத் தயாரிப்புகளையும் விற்றுக் காசாக்கலாம்
இன்ஸ்டாகிராமில் இருக்கும் எத்தனையோ நபர்கள் தங்களது சொந்தத் தயாரிப்புகளை இங்கே விற்றுக் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொருட்கள்,டிஜிட்டல் தயாரிப்புகள்,தேநீர் கோப்பைகள்,சட்டைகள்,மின்புத்தகங்கள்(E-BOOKS),வடிவமைப்பு மாதிரிகள்(DESIGN TEMPLATES) என்று உங்களின் எந்த ஒரு தயாரிப்பையும் இன்ஸ்டாகிராமில் விற்பனை செய்யலாம்.
நிலேஷ்ஜெயின்,அபிநந்தன் ஜெயின் ஆகிய இருவரும் இதற்கு சரியான உதாரணமாகத் திகழ்கிறார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து “மான்க்ஸ்டோரி”(MONKSTORY) என்கிற தாவரங்களால் மட்டுமே உருவாக்கப்படும் ஆடைகள்,கைப்பைகள்,ஷூ போன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.
பதினைந்து லட்சம் முதலீட்டில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த இவர்கள் தங்களது தயாரிப்புகளை இன்ஸ்டாகிராமில் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக,தற்போது ரூ.25 லட்சம் இவர்களுக்கு மாத வருமானமாகக் கிடைக்கிறது.
உதாரணங்களை சொல்லிவிட்டோம்.பிறகென்ன நண்பர்களே….இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி தொழிலில் பட்டையைக் கிளப்ப வேண்டியதுதானே!
-சு.கவிதா.