இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக தாக்கல் செய்துள்ளார். சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நீடிக்கும் வேளையில் இந்தியாவின் பொருளாதாரம் பிரகாசமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட் 2047 ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் அதாவது வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வழிகாட்டியாக இருக்கும் என்றார் அவர்.
வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ஆகியவற்றுக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளதாகத் தனது உரையில் கூறியிருக்கிறார் நிதியமைச்சர்.
2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்காக ரூ.1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டமும் இந்த நிதிநிலையறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது ஓராண்டுக்கு மாதம் ரூ.5000 வீதம் உதவித்தொகையை 1 கோடி தனியார் ஊழியர்கள் பெறுவர். இதற்கென தொழில் பழகுநர் மையங்கள் உருவாக்கப்பட உள்ளன.
4.1 கோடி இளைஞர்களுக்காக பிரதமரின் 5 அம்ச திட்டம் செயல்படுத்தப்படும். அதற்காக ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4 கோடி இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் திட்டம் கொண்டுவரப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது .அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி ரத்து செய்யப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த 1000 பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.25000 வரையில் கடனுதவி ஸ்கில் லோன் திட்டத்தின் வாயிலாக அளிக்கப்படும். உயர் கல்வி மாணவர்களுக்கான கல்விக் கடன் ரூ.10 லட்சம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவன மேம்பாட்டுக்கான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்நிய முதலீடுக்கான கொள்கைகள் எளிமையாக்கப்படும் எனவும், தொழில் துவங்குவதை எளிதாக்க ஜான்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் தனது உரையின்போது தெரிவித்தார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் எளிதில் கடன் வழங்கிட ஏதுவாக சிட்பி வங்கிக் கிளைகளை மேலும் 24 இடங்களில் நிறுவ முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் இவர்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதம்/பிணையமில்லாக் கடன் வரம்பு ரூ. 100 கோடியாக அதிகரிக்கப்பட உள்ளது.
அதேபோல, முத்ரா கடனுதவித்திட்டத்தில் வழங்கப்படும் அதிகபட்ச கடந்தொகை வரம்பு, ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீட்டுக்கான ஏஞ்சல் வரி முற்றிலும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. Fund of Funds for Startups (FFS) திட்டம்,Startup India Seed Fund Scheme(SISFS) திட்டம் , மற்றும் Credit Guarantee Scheme for Startups (CGSS) போன்ற பல்வேறு திட்டங்கள் தொழில் முனைவோருக்காக வர உள்ளன.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.