கேரளத்தைச் சேர்ந்த முதுபெரும் அரசியல்வாதியும் சுதந்திரப்போராட்ட வீரரும் முன்னாள் முதல்வருமான திரு.வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று காலமானது நாடு முழுவதிலும் அரசியல் உலகிலும் பொதுமக்கள் மத்தியிரும் பெரும் வேதனையை உருவாக்கியிருக்கிறது.
101 வயதாகும் அச்சுதானந்தன், தன் வாழ்நாள் முழுக்க எளிமையைக் கடைபிடித்தார். அவர் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களுள் அவரும் ஒருவர். அக்கட்சியின் நிறுவனர்களுள் அவர் மட்டுமே எஞ்சியிருந்த தலைவராக இருந்தார். அவரோடு, அது முடிவுபெற்றுவிட்டது.

ஆலப்புழா மாவட்டத்தின் புன்னப்புரா என்ற பகுதியில் பிறந்த அச்சுதானந்தன், முதுபெரும் இடதுசாரித்தோழரான கிருஷ்ணப்பிள்ளையின் தாக்கத்தால் இடதுசாரி அரசியலுக்குள் ஐக்கியமானவர். மன்னராட்சியை எதிர்த்து ‘புன்னப்புரா-வயலார்’ போராட்டத்தை இடதுசாரிகள் நடத்தியபோது அதில் முக்கியப்பங்கு வகித்தவர் இளம் வயது அச்சுதானந்தன். போராடி சிறை சென்றிருக்கிறார்.
தனது கட்சியில் படிப்படியாக முன்னேறி, மூன்றுமுறை மாநிலச்செயலாளாரகப் பொறுப்பேற்று செயல்பட்டார். மூன்றுமுறை எதிர்க்கட்சித்தலைவராகப் பணியாற்றிய அவர், 2006ல் முதல்வராகவும் பொறுப்பேற்றார். உட்கட்சி விமர்சனம், தடாலடி நடவடிக்கை, கொள்கையில் கறார் தன்மை ஆகியவற்றுக்காக அறியப்படும் அவர், நேர்மை அரசியலின் முகமாகவும் போற்றப்படுகிறார். உடல் நலக்குறைவால் காலமான அவரது உடல், திருவனந்தபுரத்திலிருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவுக்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
லட்சக்கணக்கான மக்களும் அவரது கட்சியினரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கின்றனர். இன்று கேரளம் தழுவிய பொது விடுமுறை விடப்பட்டு அனைத்து கடைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு மாமனிதனின் மறைவைக் கேரளமும் அறிவுசார் சமூகம் மரியாதையுடன் அனுசரிக்கின்றன. அவரது மார்க்சிஸ்ட் கட்சியின் முகநூல் பக்கத்தில் (இக்கட்டுரையின் முகப்புப்படம்) வி.எஸ். அவர்கள் விடை தருவதுபோல ஒரு ஓவியம் முகப்புப்படமாக வைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாழ்வில் நேர்மை, நிர்வாகத்திறமை, எளிமை வாழ்க்கை ஆகியவற்றை அரசியல் வாழ்வில் சாத்தியமாக்கிய திரு.வி.எஸ். அவர்களுக்கு முனைவு தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
-கா.சு.துரையரசு.





