தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் திரு.வெள்ளையன் அவர்களின் மறைவு வணிக உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெள்ளையன், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 76.
வணிகர் அமைப்பின் தலைவராக இருந்தபோதும் அவர் சுதேசி பொருளாதாரம், தமிழர் நலம், தமிழர் ஒற்றுமை ஆகியவற்றுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டு சிறு வணிகர்களின் தொழில்களை நசுக்க அனுமதிக்கக் கூடாது என்று முழங்கிவந்தார். பன்னாட்டு குளிர் பானங்களின் விற்பனையைத் தவிர்த்துவிட்டு உள்நாட்டு குளிர்பானங்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பதை ஒரு இயக்கமாகவே செய்துவந்தார்.
சில்லரை வர்த்தகத் துறையில் பெரும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஓங்கிக் குரல் கொடுத்து வந்தார் வெள்ளையன். அவரது இறப்பு, வணிகர் சங்கங்களுக்கு மட்டுமல்ல… தமிழ் இனத்துக்கே பேரிழப்பு ஆகும்.
அவரது இழப்புக்கு முனைவு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உற்றார், நலம் விரும்பிகளோடு தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொள்கிறது.
-முனைவு குழு.
(pic courtesy: Vanigar sanga peravai’s facebook page)