சென்னை, பிப்.26: கடந்த சில நாட்களாக தக்காளி, காலி பிளவர் ஆகிய காய்கறிகளின் வரத்து அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சி ஆகியிருக்கிறது. பழநி, ஒட்டன்சத்திரம் போன்ற தக்காளி உற்பத்தியின் முக்கிய பகுதிகளில் இதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது.
ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.10 தான். அதேபோல, ஒரு காலிபிளவரின் விலை ரூ.6. இந்த விலைக்கு மொத்த வணிகர்கள், மண்டிகளுக்குக் கொடுத்தால் விவசாயிகளுக்குக் கட்டுபடியே ஆகாது. எனவே, விளைச்சல் நிலத்திலேயே கால்நடைகளுக்கு அவற்றை மேய விடும் காட்சிகளை தொலைக்காட்சிகள் வேதனையுடன் ஒளிபரப்புகின்றன. பழநி சந்தையில் கடைகளின் முன்பே தக்காளி கொட்டிக்கிடக்கிறது. ஆடு, மாடுகள் அவற்றை மேய்கின்றன. அவை தக்காளி அல்ல. குடியானவர்களின் ரத்தம்.
ஏன் இந்த நிலை? அறிவியலும் தொழில்நுட்பமும் இவ்வளவு வளர்ந்தபிறகும் ஏன் விவசாயி தற்கொலைக்கு ஒப்பான இந்த கையறு நிலைக்குத்தள்ளப்படுகிறான்? மதிப்புகூட்டல் குறித்த பயிற்சியின்மை, காய்கறிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமலிருப்பது ஆகிய இரண்டும்தான் காரணம். தக்காளியின் விலை வீழும்போது குளிர்பதனக்கிடங்குகளில் சேமித்துவைத்து, விலை உயரும்போது விற்பனை செய்யலாம். அதேபோல தக்காளி ஜாம், ஊறுகாய், தக்காளி தூள், இயற்கை சாயம் என்று பல்வேறு பொருட்களை தக்காளியின்மூலம் தயாரிக்கலாம். உலகமெங்கும் நடக்கும் இது தமிழகத்தில் நடக்காமல் இருப்பதுதான் பெருங்கொடுமை.
இனியாவது தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு காய்கறிகளுக்கு அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்வதுடன் மாவட்டம்தோறும் மதிப்புக்கூட்டு பயிற்சிகளை இலவசமாகவே வழங்கும் ஏற்பாடுகளை செய்யவேண்டும். ஏற்றுமதிக்கும் முழு ஆதரவு தரவேண்டும். இல்லையேல் விவசாயம் நம் கண்ணெதிரே அழிவதை நாம் கைகட்டித்தான் வேடிக்கை பார்க்கவேண்டியிருக்கும்.
-கா.சு.துரையரசு.