தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். ஆம்… தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளை ‘காலனி’ என்ற சொல்லால் பல ஆண்டுகளாகக் குறித்துவருகிறோம். “ஊர் இங்கே இருக்கு….காலனி அந்தப்பக்கம்” என்றெல்லாம் முகவரி அடையாளம் சொல்வது நமது கலாச்சாரமாகிவிட்டது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த சக மனிதரை, அவரது சாதியைச் சொல்லி விளித்தால், அது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைச்சட்டத்தின் கீழான குற்றமாகிவிடும் என்பதால், “ அவர் காலனி ஆள்” என்றோ, “ அவங்க காலனிக்காரவுங்க” என்றோ பாதுகாப்பாக நம் சமூகம் சொல்லித் தப்பித்துவந்திருக்கிறது.
ஊர் ஒருபுறமும் பட்டியலின மக்களின் குடியிருப்புகள் மற்றொரு புறமுமாக பல்வேறு திட்டங்கள் கிராமங்களைச் சென்றடைந்ததே பெரிய அநீதி ஆகும். பட்டியலின குடியிருப்புகளுக்கு தனி மயானம், தனியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தனி சாலை, தனியாகக் கடைகள் என்று சொந்த ஊருக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் பட்டியலின மக்கள்.
இடதுசாரி அமைப்புகள், முற்போக்காளர்கள், அறிவுஜீவிகள், தலித்திய அமைப்புகள் என்று பலவும் பல ஆண்டுகளாக இந்த் இழிநிலைக்கு எதிராகக் குரல் எழுப்பி வந்தன. இந்நிலையில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியாரின் பெயரால் ‘சமத்துவ புரங்களை’ உருவாக்கினார். அங்கு சேரி இல்லை, காலனி இல்லை, மேலத்தெரு இல்லை, கீழத்தெரு இல்லை. இந்தியாவிலேயே அத்தகையை புதுமையை, சமூக நீதி மாதிரியை உருவாக்கியவர் கலைஞர்.
அவரது வழியில் அவரது மகனும் இன்றைய தமிழ்நாட்டின் முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின், இன்றைய சட்டமன்றக்கூட்டத்தின்போது, “பட்டியலின மக்களைத் தாழ்த்தும் காலனி என்ற சொல் இனி இருக்காது. அனைத்து அரசு ஆவணங்களிலிருந்தும் அது அகற்றப்படுகிறது” என்று வரலாற்றுப்புகழ்வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதன்மூலம் நூற்றாண்டுகால இழிவிலிருந்து தமிழ்க்குடிகளின் குடியிருப்புகள் விடுதலை பெறுகின்றன.
அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்கின்றன. இது உண்மையிலேயே தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மாபெரும் மைல்கல் ஆகும். இதனை முனைவு, தன் இரு கரம் கூப்பி வணங்கி, மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறது. வாழ்த்துகள் முதல்வரே!
சாதிய இழிவு சொல்லும் பெயர்களை நீக்குவது எப்படி தேவையோ, அதேபோல சாதியப் பெருமை பேசும் ஊர்ப்பெயர்கள், தெருப்பெயர்களையும் நீக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ‘நாயுடுபுரம், கவுண்டம்பாளையம், உடையார்பாளையம், மறவர்நாடு, சேர்வைக்காரன்பாளையம், செட்டியார் பட்டி, முத்துராஜபுரம், வன்னியம்பட்டி, முதலியார் குப்பம், ஆசாரிப்பள்ளம், நாடார் குளம், தேவர்பட்டி, சாலிய மங்கலம், நாயக்கன் கொட்டாய், சங்கரநாயன்கோட்டை, வேளாண் நல்லூர், செங்குந்த புரம் முதலிய நூற்றுக்கணக்கான ஊர்கள் ஜாதிப்பெயர்களுடன் திகழ்கின்றன. இவை தவிர, தேவர் தெரு, நாயக்கன் பாளையம், செட்டி தெரு, நாயுடு தெரு, வன்னியர் தெரு, பிராமணர் தெரு என்றெல்லாம் சாதிப்பெயர்களுடனும் தெருக்கள் இன்றும் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஆய்வு செய்து, சாத்தியமுள்ள அனைத்துப் பெயர்களையும் நீக்கவும், அதே ஊர்களுக்கான பழைமைச் சிறப்புள்ள பெயர்களைக் கண்டறிந்து சூட்டவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதனை தமிழ்நாடு முதல்வரிடம் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறது முனைவு.
-கா.சு.துரையரசு.