மாற்றுத்திறனாளிகளின் நலனில் தமிழகம், இந்தியாவுக்கே ஒரு எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையானதன்று. முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் செய்த முக்கியமான சாதனை என்றால் அது, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை உறுதி செய்யும் முன்னெடுப்புகள் என்று சொல்லலாம். ’ஊனமுற்றோர்’ என்ற சொல்லுக்கு மாற்றாக, ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற புதுச்சொல்லாடலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, ஒரே நாளில் 10 அரசாணைகளை வெளியிட்டு அவர்களின் உரிமைகளுக்கான புதிய கதவுகளைத் திறந்தது என்று புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனை மாற்றுத்திறனாளிகள் சமூகம் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறது.
தற்போது மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கியமான மைல் கல் என்பது, மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின்படியான ஆணையத்தைத் தனியாக உருவாக்கியதும், அதற்கு ஓய்வு பெற்ற ஆட்சிப்பணி அலுவலர் திரு.சுதன் அவர்களை ஆணையராக நியமித்ததும் ஆகும்.
அடுத்த கட்டமாக நேற்று நடந்ததுதான் சிகரம் வைத்தாற்போன்ற நிகழ்வு. டிசம்பர் 3 முதலிய மாற்றுத்திறனாளி அமைப்புகளின் வெகு நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் முதல்வர். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் அது. டிச.3 அமைப்பு, சென்னையில் 2018 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் மாநாட்டை நடத்தியது. அதில் அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்வில் ‘சென்னை பிரகடனம்’ என்ற ஒரு பிரகடனம் தயாரிக்கப்பட்டது. அதனை நான் தயாரித்தேன். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான குரலாக அது வரையப்பட்டது. அதில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சிப் பதவிகளில் 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’ என்ற பிரதான கோரிக்கையை வைத்தோம். அப்பிரகடனத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘உள்ளாட்சி பதவிகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் நியமன உறுப்பினர் முறை கொண்டு வரப்படும். இதற்கான சட்டத்திருத்தங்கள் உடனே நிறைவேற்றப்படும்’ என்று கூறியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் அவருக்கு நேரில் நன்றி தெரிவித்துப் பாராட்டியிருக்கின்றனர்.
இந்தியாவில் மிகச்சில மாநிலங்களில் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு போன்ற ஏற்பாடு உண்டு. அந்த வகையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.
அதேவேளையின் இன்னொரு கேள்வியும் எழுகிறது. நியமன உறுப்பினர் என்றாலே அந்தந்த உள்ளாட்சி மன்றங்களோ, அரசு அலுவலகங்களோ, அதிகாரம் படைத்தோரோ தங்களுக்கு வேண்டிய நபரை நியமிக்க வாய்ப்பு உண்டு அல்லவா… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளாட்சி பதவிகளில் அமர்வதே உண்மையான கண்ணியமும் அங்கீகாரமும் ஆகும். எனவே, தற்போதைய அறிவிப்பை முதல் கட்ட முன்னேற்றமாக மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ’மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு’ என்ற அறிவிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியருக்கான நியமன உறுப்பினர் பதவி முறை இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டுவிட்டது. அந்நிலை மாற்றுத்திறனாளிகளுக்கும் வந்துவிடக்கூடாது. அதுநேரக்கூடாது என்றால் இட ஒதுக்கீடுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். பின்னாட்களில் வரும் எந்த ஒரு அரசும் இட ஒதுக்கீட்டைப் பதம்பார்க்க முடியாது. நியமன ஒதுக்கீடுகளை எளிதாக நீக்கவோ, திருத்தவோ முடியும் என்பதையும் முனைவு கரிசனத்துடன் அரசின் பார்வைக்கு வைக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் போட்டியிட்டு வெல்வதற்கான ஜனநாயக வெளியை, தளத்தை உருவாக்கித்தரும் நாள் நெருங்கி வரட்டும். அதுவரை, தற்போதைய வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
தமிழக அரசுக்குப் பாராட்டுகள்….மாற்றுத்திறனாளிகள் சமூகத்துக்கு வாழ்த்துகள்!
-கா.சு.துரையரசு.
(Image by storyset on Freepik)