முன்னெப்போதையும்விட இப்போதெல்லாம் அடிக்கடி ‘நெட்வொர்க்கிங்’ என்ற சொல்லை அடிக்கடி கேட்கிறோம். அதேபோல ‘மீட் அப்’ என்ற சொல்லையும் கேட்கிறோம். தொழில் முனைவோருக்கு அடிப்படையான விஷயங்கள் இவையெல்லாம். நெட்வொர்க்கிங் என்றால் என்ன? அது ஏன் முக்கியம் என்று பேசுவோம்.
”வீட்டுக்குள்ளேயே அடைகாக்கும் கோழியாட்டம் உக்காந்துக்கிட்டிருக்காதே…வெளில போய் நாலு பேர்கிட்ட பேசிப் பழக வேண்டாமா?” என்று நமது பதின்பருவத்தில் நமது அம்மாமார் கடிந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோமில்லையா…அதுதான் நெட்வொர்க்கிங். நமது நட்பு வட்டத்தோடு நம்மைப் பிணைத்துக் கொள்வது. அதாவது ‘ஜோதியில் ஐக்கியமாவது’.
யாரோடெல்லாம் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வது என்பதிலிருந்து தொடங்கினால் இதன் பயன்கள் எளிதாகப் புலப்படும். எடுத்துக்காட்டாக இப்படிச் சொல்வோம். நீங்கள் ஒரு புதிய தொழில்முனைவோர் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எவருடைய தொடர்பெல்லாம் தேவைப்படும் என்று ஒரு பட்டியல் போடுவோம். இப்படி…
உங்கள் வாடிக்கையாளர்கள்…
உங்களுக்கு சரக்கை வழங்கும் உற்பத்தியாளர்கள்…
உங்கள் பொருளை மக்களிடம் எடுத்துச்செல்லும் மொத்த/சில்லரை வணிகர்கள்…
விற்பனை பிரதிநிதிகள்…
அரசுத்துறை அலுவலர்கள்…
உங்கள் துறை சார்ந்த வல்லுநர்கள்…
தொழிற்கூட்டமைப்புகள்…
‘அடடே… இவ்வளவு பேருடன் பழக வேண்டியிருக்கிறதா!’ என்று ஒரு வியப்பு ஏற்படுகிறது அல்லவா..உண்மைதான். நாம் நம்மை அறியாமலேயே இவ்வளவு பேருடன் பழகித்தான் ஒரு தொழிலைச் செய்கிறோம். நிலைமை இப்படி இருக்கும்போது, “நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். யாரிடமும் பேச்சுவார்த்தையே வைத்துக்கொள்ள மாட்டேன்” என்று நீங்கள் சொன்னால் உங்கள் தொழில் மிகச்சிறு வட்டத்துக்குள், ஒரு சுழலுக்குள் மாட்டிக்கொண்டுவிடுவீர்கள்.
ஒரு அலுவலகத்தில் ஊதியம் பெறும் ஊழியராக நீங்கள் வாழ்ந்தால் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துவிடலாம்தான். ஆனால், சொந்தத் தொழில் என்பது அப்படி அல்லவே… உங்களைச்சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு வைத்திருந்தால்தான் தொழிலில் சிறக்க முடியும்.
எப்படியெல்லாம் தொடர்புகளை மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
#முதலில் நீங்கள் உங்கள் பள்ளி, கல்லூரி நண்பர்களைத் தொடர்பில் வைத்திருங்கள். நீங்கள் அனைவரும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இருந்தால் அதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அங்கு உங்கள் வாடிக்கையாளரோ, பொருட்கள்/சேவைகள் வழங்குநரோ, தொழில் வழிகாட்டியோ இருக்கலாம்.

#நீங்கள் எந்தத்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்தத்துறை சார்ந்த இணையக்குழுக்களில் உறுப்பினராகலாம். வாட்ஸ் ஆப் குழு/முகநூல் குழு/கிளப் ஹௌஸ் ஆகியவற்றில் உறுப்பினராக ஆகலாம். நீங்கள் ஒரு வழக்குரைஞராக இருந்தால் வக்கீல் சர்ச்.காம், மை வக்கீல்ஸ்.காம் போன்ற தளங்களில் உறுப்பினராகலாம்.
நீங்கள் ஒரு பட்டயக் கணக்காயராக இருந்தால் சிஏகிளப் இந்தியா.காம் தளத்தில் சேரலாம். அங்கு உங்கள் துறைசார்ந்த விவாதங்களில் கலந்துகொண்டு துறைசார் அறிவை வளப்படுத்திக்கொள்ளலாம். உங்களது சேவைக்கான வாடிக்கையாளரை சந்திக்கவும் நேரத்தை ஒதுக்கி ஆலோசனை வழங்கவும் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

#இப்போது ஒரு நல்ல போக்கைப் பார்க்க முடிகிறது. புதிதாகத்தொழில் தொடங்குவோரும் ஏற்கனவே தொழில்துறையில் இருப்போரும் இணைந்து வணிகக்குழுக்களை உருவாக்கி வாரந்தோறும் சந்திப்புகளை நடத்துகின்றனர். ஒருவருக்கொருவர் பல்வேறு வகைகளில் உதவுகின்றனர். சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப ரீதியில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல உதவுதல், விற்பனை செய்ய உதவுதல் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற குழுக்களில் நீங்கள் இணைந்து செயல்படலாம்.
#புதிய தொழில்முனைவோர் சந்திப்புகளை (meet up) இளைஞர்கள் பலரும் சென்னை, மதுரை, கோவை முதலிய நகரங்களில் நடத்துகின்றனர். சிறிய அளவு தொகையை (பெரும்பாலும் ரூ.100) கட்டணமாக செலுத்தி, அறிவு, அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் சந்திப்புகள் இவை. இவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளலம்.
#உங்கள் செல்பேசியில் உள்ள எண்களைப் புதுப்பியுங்கள். நீண்டநாள் தொடர்பில் இல்லாத நண்பர்கள், தொழில்துறையினருக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்கள். ஒரு காபியுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்துங்கள்.மனிதர்கள் எப்போதும் இன்னொரு மனிதருக்கான தேவையுடன்தான் இருக்கின்றனர். அது மனம் சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, பொருள் சார்ந்த தேவைகளாக இருந்தாலும் சரி.
#தொடர்புகளை வலுப்படுத்த வேண்டுமென்றால் நேர்மறையான சிந்தனையும் மலர்ந்த முகமும் அவசியம். கடுகடுவென்று முகத்தை வைத்துக்கொண்டிருந்தால் யார் நம்மிடம் முகம் கொடுத்துப் பேசப் போகிறார்கள்? ‘மோப்பக் குழையும் அனிச்சம்’ என்று படித்த பரம்பரை அல்லவா நாம்…கனியிருப்பக் காய் கவர்வானேன்?
#வணிகத்தையும் சொந்த உறவுகளையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. தொழில் ரீதியிலான உறவுகளை சொந்த உறவுகள்போல நடத்துவதும் நிஜ உறவுகளிடம் தொழில்முறையாகப் பேசுவதும் தவறு.
மனிதன் ஒரு சமூக விலங்கு. அதிலும் குறிப்பாக, தொழில் முனைவோர் என்பவர் சர்வதேச சமூக விலங்கு என்பதை மறக்காதீர்கள்.
-ம.விஜயலட்சுமி.
(Lead image by Gerd Altmann from Pixabay)