மெகுல் சோக்ஷி என்ற பெயரை நினைவிருக்கிறதா நண்பர்களே?
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு, அதனைத் திரும்பச் செலுத்தாமல் தப்பியோடிய இருவரில் ஒருவர் சோக்ஷி.
இன்னொருவர், அவரது உறவினர் நிரவ் மோடி.
இவ்விருவரும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13, 400 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டனர். வைர வியாபாரியான நிரவ் மோடி, தற்போது லண்டனில் சிறையில் இருக்கிறார்.
மெகுல் சோக்ஷி, இந்தியாவைவிட்டுத் தப்பியோடி கரீபியன் நாடான ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்திருக்கிறார். ஆனால் உலகமெங்கும் இருந்து அவரைக்குறித்த செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால் ஆன்டிகுவா நாடும் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

தற்போது ஐ.நாவின் பொதுக்குழுக்கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்றுவருகிறது. அதில் கலந்துகொள்ள ஆன்டிகுவா பிரதமர் கேஸ்டன் பிரவுனிடம் மெகுல் சோக்ஷி குறித்துப் பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பிரவுன், “மெகுல் சோக்ஷி ஒரு தவறான ஆசாமி. அவரால் எங்கள் நாட்டுக்கு ஒரு பயனும் கிடையாது. அப்படிப்பட்டவருக்கு எங்கள் நாட்டில் இடமும் கிடையாது. சட்டப்படியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திவிட்டார். இங்கு உள்ள எல்லா மேல்முறையீடுகளையும் அவர் பயன்படுத்த வாய்ப்பளிக்கப்படும்.
அவர்மீது இந்தியாவில் கடுமையான மோசடிக்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவற்றை அவர் எதிர்கொண்டேயாக வேண்டும். எனவே விரைவில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உள்ளோம்” என்றார்.
இதற்கிடையில் தான் சிகிச்சைக்காகத்தான் ஆன்டிகுவா நாட்டுக்கு வந்திருப்பதாகவும், பயணம் செய்ய உடல் ஒத்துழைத்தால் இந்தியா திரும்ப இருப்பதாகவும் மெகுல் சோக்ஷி தெரிவித்திருக்கிறார்.
தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம்கூட அவரை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க இருப்பதாக அமலாக்கத்துறை சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருந்தது.
பொதுத்துறை வங்கிகளை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக் குடியுரிமை வாங்கிக்கொண்டு தப்பிவிடலாம் என்று நினைக்கும் தொழில் அதிபர்களுக்கு நிச்சயம் மெகுல் சோக்ஷி செய்தி ஒரு கெட்ட செய்திதான்.
அடுத்தபடியாக கிங் பிஷர் நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லய்யா எப்போது இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பி வைக்கப்படுவார் என்ற கேள்விகள் அனைவர் மனங்களிலும் தோன்றத் தொடங்கிவிட்டன. அவர் தற்போது லண்டனில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரக் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டோர் வெளிநாடுகளுக்குத் தப்பிவிடாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் என்ற அறிவிப்பை புலனாய்வு அமைப்புகள் விமான நிலையங்களுக்கு அளிக்கும். அதற்குள் இவர்கள் சுதாரித்துக்கொண்டு விடுகின்றனர்.
எனவே அதற்கான நடைமுறையிலும் விரைவுத்தன்மையைக் கொண்டு வந்துவிட்டால் ஏமாற்றுக்காரர்களை பொறி வைத்துப் பிடித்துவிடலாம் என்பதே பொதுமக்களின் கருத்து.