பெண்களுக்கு உதவித்தொகை இலவச பேருந்துப்பயணம்: மகாராஷ்டிர தேர்தலில் தமிழ் வாசனை

பெண்களுக்கு உதவித்தொகை இலவச பேருந்துப்பயணம்:  மகாராஷ்டிர தேர்தலில் தமிழ் வாசனை

மகாராஷ்டிர மாநில சட்ட சபைக்கான தேர்தல் இம்மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது இருப்பதால் ஆட்சியைப்பிடிக்க பா.ஜ.க. கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் முழு மூச்சில் பிரச்சாரம் செய்துவருகின்றன.

தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என்ற பட்டியலை தேர்தல் அறிக்கையாக இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, காங்கிரஸ் கூட்டணியான மஹா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.3000 ஐ மஹாலட்சுமி திட்டத்தின்கீழ் வழங்கப்போவதாக கார்கே தெரிவித்திருக்கிறார். அதேபோல, பெண்களுக்கு இலவசப் பேருந்துப்பயணத்தையும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.

படம்: நன்றி: பா.ஜ.க.வின் முகநூல் பக்கம்

பெண்களின் வாக்குகளைக்கவர பா.ஜ.க. கூட்டணியும் வாக்குறுதிகளை  வாரி வழங்கியிருக்கிறது. தாங்கள் வெற்றிபெற்றால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2100 வழங்கப்படும் என்று பா.ஜ.க. சொல்லியிருக்கிறது. மேலும் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அக்கட்சி சொல்லியிருக்கிறது.

இரு தரப்பும் வாரி வழங்கும் வாக்குறுதிகள் அனைத்தும் தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை நினைவுபடுத்துகின்றன என்பதுதான் ருசிகரமான செய்தியாக இருக்கிறது. ‘இலவசங்களைக் கொடுக்கலாமா?’ என்று தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை விமர்சனம் செய்த வட இந்திய கட்சிகள் இலவச பேருந்துப் பயணம், மாதந்தோறும் பெண்களுக்கு உதவித்தொகை, வேளாண் கடன் தள்ளுபடி, சாதிவாரிக்கணக்கெடுப்பு என்று பேசத்தொடங்கியிருப்பது தேசிய அரசியலில் முக்கியமான திருப்பம் ஆகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கட்சிதான் இலவ பேருந்துப்பயணம், மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகை, இலவச காப்பீட்டுத்திட்டம், வேலைதேடுவோருக்கான உதவித்தொகை ஆகியவற்றை கடந்த காலங்களில் அறிவித்தது.

அவற்றை வெற்றிகரமாக தற்போதைய தி.மு.க. அரசு செயல்படுத்தியும் வருகிறது. இதனை வட இந்தியாவும் பின்பற்றுவது சுவையான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இலவசங்கள் என்பவை உண்மையில் இலவசங்கள் அல்ல, மாறாக, அவை சமூக நலத்திட்டங்களே என்ற பார்வையைத் தமிழகம் கொண்டிருக்கிறது. தெற்கின் முழக்கம் வடக்கிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

-கா.சு.துரையரசு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *