சிறு, குறு, தொழில் முனைவோரா நீங்கள் ? ஒரு நிறுவனம் தொடங்க உகந்த நிலம் தேடுபவரா நீங்கள் ? அப்படியென்றால் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (சிப்காட்டின்) இந்த இணையதளத்தை நீங்கள் https://sipcot.tn.gov.in நிச்சயமாகப் பார்க்க வேண்டும்.
எந்த பிரச்சனையுமில்லாமல் புத்தொழில் நிறுவனங்கள் (start up) மற்றும் ஏற்கனவே தொழில் நடத்திவரும் நிறுவனங்களுக்கு வணிக மனை கிடைக்கும் பட்டியலில் முதல் இடம் தெலங்கானாவுக்கு. இரண்டாவது இடம் மஹாராஷ்டிராவுக்கு. மூன்றாவது இடம் தமிநாட்டுக்குத் தான். இதற்கு காரணம் சிப்காட் (SIPCOT- State Industries Promotion Corporation of Tamilnadu) எனும் நிலவங்கிதான்.
தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய கிட்டத்தட்ட 48000 ஏக்கர் பரப்பளவில் சுமார் 16 மாவட்டங்களாக – பர்கூர், செய்யார், கடலூர், கங்கைகொண்டான், கும்மிடிப்பூண்டி, ஓசூர், இருங்காட்டுக்கோட்டை, மப்பேடு, மானாமதுரை, நிலக்கோட்டை, ஒரகடம், பெருந்துறை, பிள்ளைப்பாக்கம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதூர், தேர்வாய் கண்டிகை, வல்லம் – வடகை ஆகிய 24 இடங்களில் தொழில்துறை வளாகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிப்காட்டின் தொழிற்பூங்காக்களில் நிலம் வாங்க sipcot land details என்று இணையதளத்தில் தட்டச்சு செய்தால் இது தொடர்பான எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், அங்குள்ள VIEW GIS MAP என்ற பொத்தானை அழுத்தினால் குறிப்பிட்ட தொழிற்பூங்காக்களில் ஒதுக்கப்பட்ட நிலம் நிறுவனத்தின் பெயருடன் பார்க்க முடியும். அதே போல, தற்போது ஒதுக்கப்படாத நிலவிவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்பம் , புதிய தொழில் முறை ஆலோசனைகளுடன் வரும் புது தலைமுறையினரை ஊக்குவிக்க தொழிற்சாலை மற்றும் நிறுவனம் தொடங்க நிலத்தை குறைவான விலைக்கு அளிப்பது மட்டுமல்லாமல் நிதியுதவியும் வழங்கி வருகிறது, 1971 உருவான சிப்காட்.
சிப்காட் தொழிற்பூங்காக்களில் வழங்கப்படும் நிலங்கள் சிறப்பு கொள்கைகளின் கீழ் வருவதால் மிக எளிதில் நிலச்செலவு மானியமும் கிடைத்துவிடுகிறது. இதற்கென்று , சிப்காட்டின் ஒரு சிறப்புக்குழு அரசாங்கத்தை அணுகி நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், ஊக்கத்தொகை அனைத்தையும் பெற்றுத் தர உதவுகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி தேடுவோர் தங்களின் உற்பத்திமுறை, சந்தை வாய்ப்பு என்று மற்றெல்லா தகவல்கள் அடங்கிய முன்மொழிவை இதை இணையத்தில் சமர்ப்பிக்கலாம். அத்தகைய விண்ணப்பங்களை சிப்காட் உயர்மட்ட குழு தேர்வு செய்து நிறுவனம் தொடங்க நிதியுதவியும் வழங்கி வருகிறது. வெறும் 60 நாட்களில் இந்த பணி நிறைவடைந்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட , பரிசீலிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட , தேர்வான விண்ணப்பங்களின் தகவல்களையும் இங்கே காணலாம்.
முழுக்க முழுக்க தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதால், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு சிப்காட் என்றும் ஒரு வரப்பிரசாதமே.
-ஸ்ரீஜா.
(Featured Image by ElasticComputeFarm from Pixabay)