கடல் அரிப்பைத்தடுக்க கொரிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனமான ஹ்யூபர்ட் என்விரோ கேர் சிஸ்டம்ஸ் (ஹெச்.இ.சி.எஸ்), கைகோர்த்திருக்கிறது. இந்நிறுவனங்கள் இணைந்து இந்தியா முழுவதிலும் கடல் அரிப்பு அபாயமுள்ள பகுதிகளில் அரிப்பைத்தடுக்கும் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தவிருக்கின்றன.
இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து, ‘உங்கள் கடற்கரையைப் பாதுகாப்போம்’ என்ற பெயரில் 4 மணி நேர கருத்தரங்கு ஒன்றை சென்னையில் இன்று நடத்தின. உலகமெங்கும் உருவெடுத்துள்ள புதிய பிரச்சனையான அதீத கடல் அரிப்பைத்தடுக்க கண்டறியப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அதில் விளக்கப்பட்டது.
கொரிய நிறுவனமான யுஜூ, கடல் மற்றும் துறைமுக கட்டுமானப்பணியில் வல்லுநத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்நிறுவனம், கடற்கரை அரிப்பைத் தடுப்பதற்கு டைசெல் எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து யுஜூ நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் சேங் கி கிம், விரிவாக விளக்கினார். அவர் பேசும்போது,
“கடல் அரிப்பு, உலகளாவிய அளவிலான பிரச்சனை ஆகும். பொதுவாக, கடல் அரிப்பைத்தடுக்க டிடிபி எனப்படும் காங்கிரீட் பாறைகளைக் கடற்கரையில் போட்டு வைத்தோ, அல்லது சிமெண்ட் பிளாக்குகளைக் கட்டுமானம் செய்தோ சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். இவற்றால் போதுமான அளவுக்கு கடல் அரிப்பைத்தடுக்க முடியாது. கிடைக்கும் பலன் குறைவானதாகவே இருக்கிறது. எனவேதான் டைசெல் எனப்படும் தொழில்நுட்பத்தை நாங்கள் கண்டறிந்தோம்.
இதன்படி வளைவான காங்கிரீட் தளங்கள் மேல் கீழ் துளைகளுடன் தயாரிக்கபப்பட்டு, கடற்கரைகளில் (நீர் உள்ள பகுதிகளில்தான்) நிறுவப்படும். கீழ்ப்பகுதிக்குள் செல்லும் நீர், அவ்வமைப்பின் வளைவு காரணமாக, மேலுள்ள துளைகள் வாயிலாக திரும்பவும் கடலுக்கே திருப்பி விடப்படும். இதேபோல மேலும் சில தொழில்நுட்பங்கள் உள்ளன. கடலில் மிதக்கும் காற்றாலைகளைப் பாதுகாக்க இதுபோல அரிப்பு தடுப்பு தொழில்நுட்ப தீர்வுகள் எங்களிடம் உள்ளன. காற்றாலை மின்சார காற்றாடிகள் மிதந்தாலும் நகர்ந்தாலும் கடல்நீரால் பாதிப்படையாது” என்றார்.
ஹெச்.இ.சி.எஸ் நிறுவனத்தின் தலைமைச்செயல் அலுவலர் மோசஸ் பேசுகையில், ” கடல் அரிப்பைத்தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன்மூலமாக மண் அரிப்பு தடுப்பு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கு இயைந்த, பல்லுயிர்ச்சூழலையும் பாதுகாக்கக்கூடிய புதிய தீர்வுகளையும் கொண்டுவர முடியும். இதன்மூலம் அலையாத்திக்காடுகள், பவளப்பாறைகள் என்று எல்லாவற்றுக்கும் நன்மை உண்டு. கடல் மட்டம் உயர்வதனால் ஏற்படும் விளைவுகளையும் நாம் கட்டுப்படுத்திவிடமுடியும்.
சுனாமி போன்ற நேர்வுகளின்போது இப்புதிய தொழில்நுட்பம் நன்றாகவே கைகொடுக்கும். ஆழிப்பேரலையின் தாக்கத்தை 50% ஆகக் குறைத்துவிடமுடியும். கேரளத்தின் வர்க்கலா போன்ற இடங்களில் உள்ள க்ளிஃப் அமைப்புகள், கடல் அரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. தற்போதைய தொழில்நுட்பத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்திவிட்டால் அவை நிச்சயம் பாதுகாக்கப்படும். இப்புதிய அமைப்புகள் சுமார் 100 ஆண்டுகள்வரை கடல் அரிப்பைத் தடுக்கும் தன்மை படைத்தவை. எங்களுக்கு மத்திய, மாநில அரசுகளும் தனியார் துறைமுகங்களும் வாடிக்கையாளர்களாக அமைவர்” என்றார்.
ஹெச்.இ.சி.எஸ் நிறுவனத்துக்கு யுஜூ நிறுவனம், இதுசார்ந்த தொழில்நுட்பங்களை வழங்கவிருக்கிறது. கடல் அரிப்பு தடுப்பு வசதிகளை உள்ளூர் பொருட்கள், ஊழியர்களைக்கொண்டு ஹெச்.இ.சி.எஸ் நிறுவனம் உருவாக்கி நிறுவும். அப்பணிகளை யுஜூ நிறுவனப் பொறியாளர்கள் மேற்பார்வை செய்வர். தங்களுக்குள் வருவாய் பகிர்வு குறித்த ஒப்பந்தம் இன்னும் இறுதியாகாவில்லை எனவும் தேவைப்பட்டால் எதிர்காலத்தில் புதிய கூட்டு நிறுவனம் ஒன்றைத்தொடங்கவும் வாய்ப்புண்டு என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இந்நிகழ்வில் தமிழ்நாடு பசுமை சூழல் நிறுவனத்தின் ஆலோசகர் ரமேஷ் ராமச்சந்திரன், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் தலைமைப்பொறியாளர் (ஓய்வு) ராஜா, சென்னை ஐஐடியின் கடல் சார் பொறியியல் துறையின் உதவிப்பேராசிரியர் கே.ஜி.விஜய், ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழுவின் ஆலோசகர் ஹெச்.கர்க்வால் முதலிய பலரும் கலந்துகொண்டனர். கல்வியாளர்கள், தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை, இதர துறை அலுவலர்களும் இதில் இடம்பெற்றனர்.
-அருண்மொழி.