லாட்டரி: கேரளாவால் எப்படி சாதிக்க முடிகிறது?

லாட்டரி: கேரளாவால் எப்படி சாதிக்க முடிகிறது?

அண்மையில் செய்தித்தாட்களில் இடம்பிடித்த முக்கியமான செய்தி ‘கேரள லாட்டரியின் திருவோணம் பம்பர் குலுக்கலில் வயநாட்டைச் சேர்ந்தவருக்கு ரூ.25 கோடி பரிசு’ என்பதுதான். இந்தியாவில் வாழும் மலையாளிகள்மட்டுமல்ல, வெளிநாடுகளில்  பணிபுரியும் மலையாளிகள் முதல் கேரளத்தின் அண்டை மாவட்டங்களான கன்னியாகுமரி, கோவைவாழ் தமிழர்களும் இந்தப் பரிசுச்சீட்டின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள நகம் கடித்துக்கொண்டு காத்திருந்தனர்.

பணிநிமித்தம் கேரளத்துக்குச் சென்று அங்கு வாங்கிய பரிசுச்சீட்டின்மூலம் கடந்த சில ஆண்டுகளில் கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த தமிழர்கள் முதல் பரிசை வென்றது, தலைப்புச் செய்தியானது.

பொதுவாக அதிர்ஷ்டத்தை மையமாகக் கொண்டு இயங்கும் துறையாகப் பரிசுச்சீட்டுத்துறை இருந்தாலும் கேரள பரிசுச்சீட்டுகள்மீதான நம்பிக்கைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்தத்துறை நிர்வகிக்கப்படுகிற விதம் அவ்வளவு நேர்த்தியானது. நாட்டிலேயே முதன்முறையாக 1968 ஜனவரி 26 அன்று ரூ.1 விலையில் லாட்டரிச்சீட்டை அறிமுகப்படுத்தியது கேரளம். இன்றுவரை அதனை சீராகத்தொடர்ந்து வருகிறது.

ஆண்டுமுழுக்க ஒவ்வொரு நாளும் (7 வாராந்திர சீட்டுகள்)  பரிசுச்ச்சீட்டு வெளியீடும் தினசரி குலுக்கலும் நடைபெறுகிறது.  ஓணம், விஷூ, ஆயுத பூஜை முதலான பல்வேறு முக்கிய நாட்களுக்கும் 6 சிறப்புப் பரிசுச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. பம்பர் சீட்டுகளின் முதல் பரிசுகள் கோடிகளில் இருக்கும். பரிசுச்சீட்டுகளின் விலை பொதுவாக ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கும். தினசரி சீட்டுகளின் விலை ரூ.40 முதல் ரூ.50வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

தினமும் குலுக்கல்

தினந்தோறும் மாலை சரியாக 3 மணிக்கு பகிரங்கமாக திருவனந்தபுரத்தில் உள்ள கார்கி பவனில் பரிசுச்சீட்டுக் குலுக்கல் நடைபெறுகிறது. அதனை நேரலையாகவும் பார்க்கலாம். உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், வழக்குரைஞர்கள், சமூகத்தில் நன்மதிப்பு பெற்றோர் ஆகியோரைக்கொண்ட குழு ஒன்று தினமும் உருவாக்கப்படுகிறது. அக்குழு, ஒவ்வொரு பரிசுச்சீட்டின் அமைப்பு முறைக்கும் ஏற்றபடி தனித்தனியாக பொத்தானை அழுத்தி, குலுக்கலை நடத்துகிறது.

குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொத்தானை அழுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட பரிசு விழுந்த எண்ணுக்கே வேறொரு பரிசு விழுந்தால் மறுகுலுக்கலும் நடத்தப்படுகிறது. ஓணம் பம்பர் முதலிய உயர் மதிப்பு பரிசுச்சீட்டுகளின் குலுக்கலை நிதியமைச்சர் திரு.பாலகோபால் முதலியோர் முன்னின்று நடத்தி, குலுக்கலின் நம்பகத்தன்மையை உறுதிசெய்கின்றனர். குலுக்கல் விபரங்களை நேரடியாக வாடிக்கையாளருக்குத் தருவதற்காக பாக்ய கேரளம் என்ற மொபைல் ஆப்-ஒன்றையும் கேரள பரிசுச்சீட்டுத்துறை இயக்கிவருகிறது.

நிதியமைச்சர் பாலகோபால் (படம்: நன்றி: கேரள பரிசுச்சீட்டுத்துறை)

பரிசு கிடைத்தவர்கள், ஒரு மாதத்துக்குள் கேரள பரிசுச்சீட்டுத்துறை அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் அணுகி பரிசைப் பெற்றுக்கொள்ளலாம். பரிசுச்சீட்டை, அதன் உரிமையாளர் கேரள மாநிலத்துக்குள் நேரடியாக வாங்கியிருக்க வேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை. போலிச் சீட்டுகளைத்தவிர்க்க, ஒவ்வொரு பரிசுச்சீட்டிலும் ஒரு க்யூ ஆர் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதனை க்ளிக் செய்து பரிசுச்சீட்டின் நம்பகத்தன்மையை உறுதிசெய்துகொள்ளலாம்.

அமைப்புமுறை:

இத்தகைய ஒழுங்கையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய வேண்டும் என்பதற்காக பரிசுச்சீட்டு இயக்ககம், ஒரு தெளிவான அமைப்பு முறையைப் பேணுகிறது.  திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் இதன் தலைமை அலுவலகம் இயங்குகிறது. எர்ணாகுளத்தில் இணைய இயக்குநர் அலுவலகம் செயல்படுகிறது. 14 மாவட்டங்களில் மாவட்ட அலுவலகங்களும்21 துணை அலுவலங்களும் செயல்பட்டுவருகின்றன.

இவை தவிர, பரிசுச்சீட்டின் செயல்பாடுகளைத் தணிக்கை செய்ய மண்டல துணை இயக்குநர் (தணிக்கை) செயல்படுகிறார். நிதித்துறையின்கீழ் பரிசுச்சீட்டுகள் இயக்ககம் செயல்பட்டாலும் கேரள வரிகள் துறையின் செயலாளரின் நிர்வாக ஆளுகையின்கீழ் இத்துறை நிர்வகிக்கப்படுகிறது. கேரளத்தில் வெளி மாநிலப் பரிசுச்சீட்டுகள் விற்பனையைத் தடுப்பதும் அவரது பணிகளில் ஒன்றாகும். அம்மாநிலத்தில் தனியார் லாட்டரிச்சீட்டுகளுக்கும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

முகவர், விற்பனையாளர் பாதுகாப்பு:

பரிசு பெற்றவர்கள்தவிர, விற்பனையாளர்களுக்கும் கணிசமான கழிவுத்தொகை (commission) கிடைக்கிறது. எனவே விற்பனையாளர்களைப் பாதுகாப்பதற்காக 2008ஆம் ஆண்டில் கேரள மாநில பரிசுச்சீட்டு முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நிதிய வாரியம் உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்களாக முகவர்களும் விற்பனையாளர்களும் அரசு அலுவலர்களும் இருக்கின்றனர்.  இதன் நிர்வாகத்தை மாவட்ட பரிசுச்சீட்டுத்துறை அலுவலர்கள் கவனிக்கின்றனர்.

பரிசுச்சீட்டு விற்பனைமூலம் கிடைக்கும் தொகையில் 1%ஐ மாநில அரசு, பரிசுச்சீட்டு முகவர்-விற்பனையாளர் வாரியத்துக்கு ஒதுக்கிவிடுகிறது. தற்போது இவ்வாரிய உறுப்பினர்கள் 50 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு மருத்துவ உதவி, மகளிருக்குப் பேறுகால உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உதவித்தொகை, கல்வியில் சிறந்து விளங்குவோருக்கு சிறப்பு உதவித்தொகை, எதிர்பாராமல் இறக்கும் உறுப்பினரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத்தொகை, உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் முதலிய பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால், ஒழுங்குபடுத்தப்பட்ட பெரிய வலைப்பின்னலாக பரிசுச்சீட்டு முகவர், விற்பனையாளர் சமூகம் கேரளத்தில் விரிவடைந்திருக்கிறது.

ஆக, எல்லா முனைகளிலும் பரிசுச்சீட்டுத்துறையைத் தொழில் நேர்த்தியுடன் நிர்வகிப்பதால் கேரளா, இவ்விஷயத்தில் தொடர்ந்துவெற்றி நடைபோடுகிறது.

(எச்சரிக்கை: லாட்டரிச்சீட்டு வாங்கும் பழக்கம் உங்களை அதற்கு அடிமையாக்கலாம். எனவே, நன்கு சிந்தித்து முடிவெடுக்கவும். அதேபோல, தமிழகத்தில் லாட்டரி விற்பது, வாங்குவது, இருப்புவைப்பது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் அதனை வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.)

-அருண்மொழி.

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *