சென்னை, ஏப்.19: கிராமப்புற கைவினைஞர்களுக்குக் கை கொடுக்கும் ‘கலைஞர் கைவினைத்திட்டம்’ இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதனை முறைப்படி தொடங்கிவைக்கிறார்.
இத்திட்டத்தின்படி 25 வகையான கைத்தொழில்களுக்கு உதவிகள் வழங்கப்படும். குலத்தொழில் அடிப்படையிலான விஸ்வகர்மா திட்டம்போல் அல்லாமல் விரும்பிய எவரும் தாங்கள் விரும்பும் கைவினைத்தொழில்களில் திறனை மேம்படுத்தி உயரவே இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டப் பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடனுதவி கிடைக்கும். 25% மானியமும் 5% வட்டி மானியமும் கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் இத்திட்டத்தின்மூலம் பயனடைவர். இத்திட்டத்தின் வாயிலாக 8991 கைவினைஞர்களுக்கு இவ்வாண்டில் ரூ.170 கோடி கடனுதவி வழங்கப்படும். இதன்மூலம் ரூ.34 கோடி மானியமும் வழங்கப்பட உள்ளது.
மண்பாண்டங்கள் செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, சுடுமண் வேலைகள், கட்டட வேலைகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான்கள் செய்தல், தையல், பொம்மைகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், மீன் வலை தயாரித்தல், நகை தயாரிப்பு உள்ளிட்ட 25 தொழில்களின் பட்டியலை மேற்கண்ட இணையதளத்தில் பெறலாம்.
www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்படும். வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும்.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.