சிறு தானியம், பெரும் தனம்!

பொதுவிநியோகக் கடைகளில் அரிசி கோதுமை போன்ற தானியங்கள் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக கம்பு,சோளம் முதலிய சிறுதானிய உணவு வகைகளையும் பொதுவிநியோகக் கடைகள் மூலமாக மத்தியஅரசு வழங்க வழங்கத் திட்டமிட்டுள்ளது.

pearl-millet-204105_640

 

இதற்கான ஆணை, அரசிதழ் அறிவிக்கையாக வெளிவன்ந்திருக்கிறது.  ஏழை எளிய மக்களுக்கும் இதன் மூலமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

இந்த சோளம்,கம்பு போன்ற சிறுதானியங்கள் தவிர கேழ்வரகு, தினை, வரகரிசி, சாமை போன்ற சிறுதானியங்களையும் மக்களுக்கு அரசு வழங்க உள்ளது.

 

நம்முடைய நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகம்பேர் இருக்கிறார்கள். பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளுக்கு குறைவான கிளைசெமிக் இன்டெக்ஸ் (LOW  GLYCEMIC  INDEX ) உணவுவகைகள்தான் சிறந்தவை. இந்த சிறுதானியங்களில் குறைவான கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் சிறுதானியங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

 

 

ஒருபக்கம் உடல் நலம் சார்ந்த சிறப்பான திட்டம் இது. இதில் தொழில் முனைவோருக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. தற்போது இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள், சிறுதானியங்கள் விற்பனை சூடுபிடித்துவருவது நீங்கள் அறிந்ததே.

 

ஆனால் இவற்றை நுகர்வோருக்கு/பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு பெரிதும் மெனக்கெட் வேண்டியதாக இருக்கிறது. காரணம், இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் போதுமானதாக இல்லை. எனவேதான்  சிறுதொழில் முனைவோர் ஒவ்வொருவரும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, விளம்பரப்படுத்த கணிசமான தொகையைச் செலவிடவேண்டியதாக இருக்கிறது.

 

millet-2337612_640

இந்த சமயத்தில் பொதுவிநியோகக் கடைகளிலும் சிறுதானியங்களை அறிமுகப்படுத்தி இருப்பது இவர்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமையும். இனி சிறு தானியங்களைப் பற்றிய விளம்பரப் பிரச்சாரத்தை தொழில்முனைவோர் செய்ய வேண்டியதில்லை. அரசே அதனைப்பார்த்துக்கொள்ளும்.

 

பொது விநியோகக்கடைகள்மூலம் ஒவ்வொரு வீட்டிலும் சிறுதானியம் உணவுப் பழக்கத்தில் ஐக்கியமாகிவிடும். தரமான பொருட்களை உற்பத்தி/விற்கும் பணியை மட்டும் தொழில்முனைவோர் செய்தால் போதும்.

 

அதேபோல இதுவரை ஆர்கானிக் கடைகளுக்கு மட்டுமே சிறுதானியங்களை விநியோகம் செய்துவந்த தொழில்முனைவோருக்கு வாய்ப்புகள் பெருக ஆரம்பிக்கும். இவர்களிடமிருந்து அரசு சிறுதானியங்களை கொள்முதல் செய்ய வாய்ப்பு இருப்பதால் வருமானம் அதிகரிக்கும்.

 

சிறுதொழில் முனைவோர் சிறுதானியங்கள்,சிறுதானிய உணவு வகைகள்,சிறுதானிய மாவு வகைகள் போன்றவற்றை கூடுதல் தரத்துடன் தயாரித்து விற்கலாம்.

 

அதிக நட்டம் ஏற்படுத்தாத தொழில்கள் இவை என்பதால் துணிச்சலுடன் சிறுதானியத் தொழிலில் களத்தில் இறங்கலாம். அதுமட்டுமல்ல, பெண்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வாயிலாக சிறுதானியத் தொழிலில் இறங்கினால் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்க முடியும்.

 

food-3212504_640

ஏனென்றால் எத்தனையோ அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் செயல்படும் உணவகங்களில் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் மிகத்திறமையுடன் உணவுத்தொழிலை, குறிப்பாக சிறுதானிய உணவுகள் சார்ந்த தொழிலை நடத்தி வருகிறார்கள்.

 

அதனால் கையைக் கடிக்காத வகையில் ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் சிறுதானியத் தொழிலைக் கையில் எடுங்கள். வெற்றிவாகை சூடுங்கள்.

-ஜெயலட்சுமி

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *