லிஃப்ட் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணித் தயாரிப்பாளராக விளங்குகிறது ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம்(JOHNSON LIFTS & ESCALATORS).
ஐம்பத்தியாறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்திய நிறுவனம், இல்லங்களுக்கான சிறிய லிப்ட்களில் ஆரம்பித்து வர்த்தகக் கட்டடங்கள், மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் லிப்ட் மற்றும் எலிவேட்டர்கள் அமைப்பதுவரை தன்னுடைய தொழிற்சேவையை பரந்து விரியச் செய்திருக்கிறது.
லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை சொந்தமாகவே தயாரிப்பதற்காக சென்னை உட்பட பல இடங்களில் இந்த நிறுவனம் தொழிற்சாலைகளையும் நிறுவி இருக்கிறது. 1966-ம் ஆண்டு சென்னையின் பாரம்பரிய உணவகங்களில் ஒன்றான நியூ உட்லேண்ட்ஸ் உணவகத்தில் இவர்களது முதல் லிப்ட் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல, கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஹெவி டியூட்டி எஸ்கலேட்டர்களைத் தயாரிக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்கிற பெருமையையும் இது பெற்றிருக்கிறது. இவ்வளவு ஏன், மக்கள் கூட்டம் அலைமோதும் பாடி சரவணா ஸ்டோர்ஸில் இயங்கும் நாற்பத்தியிரண்டு எஸ்கலேட்டர்களும் இவர்களால் தயாரிக்கப்பட்டு, நிறுவப்பட்டதுதானாம்!
இந்தியாவில் இந்த நிறுவனத்துக்கு 54 கிளைகள் இருக்கின்றன. சுமார் 10,000 ஊழியர்கள் இதில் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவைத் தவிர நேபாளம், இலங்கை, தான்சானியா, துபாய், மியன்மார் ஆகிய இடங்களிலும் கிளை பரப்பியிருக்கிறது ஜான்சன் லிஃப்ட்ஸ்.
சென்னையில் இன்று அந்நிறுவனம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜகன்னாதன், “மாறிவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாக நகர்ப்புறங்களில் எலிவேட்டர்கள் மற்றும் எஸ்கலேட்டர்கள் சார்ந்த தொழில் நவீனமடைந்துவருகிறது.
இதன் காரணமாக இந்தத் தொழிலில் கடும் போட்டி நிலவுகிறது. இத்தகைய கடுமையான போட்டிகளுக்கு இடையேயும் ஜான்சன் லிஃப்ட்ஸ் அதிநவீன தொழில் நுட்பம், நியாயமான விலை, தரம், காலதாமதம் இல்லாத விரைவான சேவை ஆகியவற்றின் காரணமாக சந்தையில் பெற்றுள்ள முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது” என்றார் பெருமிதத்துடன்.
“இந்தியாவில் சமீபகாலமாக மெட்ரோ ரயில் திட்டங்கள் பெருநகரங்களில் அறிமுகமாகிக்கொண்டே வருகின்றன. இவை தவிர விமான நிலையங்களின் விரிவாக்கம், ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படுவது, நகரின் முக்கியமான இடங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கப்படுவது போன்றவற்றின் காரணமாக அந்த இடங்களிலெல்லாம் ஹெவி டியூட்டி எஸ்கலேட்டர்களின் தேவை அதிகமாகிவிட்டது.
நாங்கள் 2019-ல் விற்பனையில் ரூ.2000 கோடியைத் தாண்டிவிட்டோம். 2021ம் ஆண்டிற்குள் ரூ.3000 கோடியைத் தொடுவதே எங்களது இலக்கு” என்றார் இந்நிறுவனத்தின் இயக்குநர் யோஹான் ஜான்.
இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு வட்டாரத் தலைவரான ஆல்பர்ட் திரவியம் பேசும்போது, “சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது கட்டத்துக்கு நாற்பத்தியொரு லிப்ட்கள், ஐம்பது எஸ்கலேட்டர்கள், மற்றும் பன்னிரண்டு மூவிங் வாக் ஆகியவற்றைத் தயாரித்து நிறுவும் ஒப்பந்தம் தங்களுக்குக் கிடைத்துள்ளது. ரூ.33 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை மிகக் கவனமாகவும் தரத்துடனும் செய்து முடித்து 2021-ம் ஆண்டு வழங்குவோம்” என்றார்.

இதுதவிர வண்ணாரப்பேட்டையிலலிருந்து விம்கோ நகர் வரையிலான ஒன்பது ரயில் நிலையங்களில் கூடுதலாகத் தேவைப்படும் முப்பத்தியிரண்டு எஸ்கலேட்டர்கள், முப்பத்தியொன்பது லிப்ட்களை அமைக்கும் ஒப்பந்தமும் இந்நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது.
லிப்ட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூடவே ஹெவி டியூட்டி எஸ்கலேட்டர்களின் தேவையும் அதிகமாகிவிட்டது என்பதால் இவற்றை மனதில் வைத்து ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் செங்காடு என்கிற இடத்தில் 1.4 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் முழுவதும் தானியங்கி மயமான லிப்டு உற்பத்தித் தொழிற்சாலையை அமைத்துள்ளது.
அதேபோல ஹெவி டியூட்டி எஸ்கலேட்டர்களுக்கான கூடுதல் லைன் ஒன்றும் ஓரகடம் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் லைன் ஆண்டு ஒன்றுக்கு ஐநூறு எஸ்கலேட்டர்களைத் தயாரிக்குமாம்.
– பாலாஜி