சென்னை, நவ.27: தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆயிரக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தொழில் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டோர், இதற்கு நிரந்தரத்தீர்வு வேண்டுமென்று கூறிவருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத்துறையில் கணிசமான சம்பளம், சமூகத்தில் உயர்மதிப்பு, அடுத்தடுத்து புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஆகியவை அத்துறையை நோக்கி இளைஞர்களி இழுக்கின்றன. அதேவேளையில் வெளிநாட்டிலுள்ள வாடிக்கையாளர்களை நம்பியே இந்த சேவைத்துறைகள் இயங்குவதால் பணிப்பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது.
ஐரோப்பாவில் தேள் கொட்டினால் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு நெறி கட்டும் என்பதே தொடர் வரலாறாக இருக்கிறது. அந்த வகையில் எப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடுகின்றன. இந்த சூழலை சமாளிக்க, கூடுதல் ஊழியர்களைப் பயிற்சிகொடுத்து சேமித்து வைக்கும் வழக்கமும் இத்துறையில் உண்டு.
தற்போது திரும்பவும் அந்த அலை அடித்திருக்கிறது. ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனம், 660 பேரைப் பணி நீக்கம் செய்வதாக அறிவித்ததை அடுத்து, ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு, ”20% வருவாய் வளர்ச்சியைக் கொண்ட நிறுவனம், தனது ஊழியர் எண்ணிக்கையில் 13%ஐக் குறைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இந்த விஷயத்தில் அமெரிக்க கலாச்சாரத்தை இங்கு இறக்குமதி செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதனையடுத்தும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பை அறிவித்திருக்கின்றன. அண்மையில் இண்டெல் நிறுவனம், 15 ஆயிரம்பேரை வேலையைவிட்டு அனுப்புவதாகச் சொல்லியிருந்தது. சிஸ்கோ நிறுவனம் 6 ஆயிரம் பேரையும் ஐ.பி.எம். நிறுவனம் 1000 பேரையும் ஆப்பிள், 100 பேரையும் வேலையிலிருந்து விலக்கியிருக்கின்றன. ஆகஸ்ட் நிலவரப்படி பல்வேறு நிறுவனங்கள் 1.24 லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்பியிருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இந்தியாவைப்பொறுத்தவரை அக்டோபர் நிலவரப்படி 30 ஆயிரம் ஐ.டி. ஊழியர்கள் வேலை இழந்திருக்கின்றனர். வருவாயில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, அதன் காரணமாக மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கை ஆகியவற்றைக் காரணமாக அந்நிறுவனங்கள் சொல்கின்றன.
வீட்டுக்கடன், தனி நபர் கடன், நுகர்பொருள் கடன்கள் போன்றவற்றில் சிக்கி மாதத் தவணைக்கு ஊதியத்தையே சார்ந்திருக்கும் ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நெருக்கடி ஆகும். லாபம் வரும்போது அதை ஊழியர்களிடம் பகிராத நிறுவனங்கள், நட்டம்/வருவாய்க்குறைவு ஏற்படும்போது அதைமட்டும் ஊழியர்கள்மீது சுமத்துவது சரியா என்ற கேள்வி வெகு நாட்களாக தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் எழுப்பப்பட்டுவருகிறது. தொழிலாளர் நலச்சட்டங்களை தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் நீட்டித்து பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
-ம.விஜயலட்சுமி.
(Image by Rosy / Bad Homburg / Germany from Pixabay)