வாசகர்கள் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்!
உண்மையில் மகளிர் தினம் என்பது வெறுமனே பெண்மையைப் போற்றிப்புகழும் நாள் அன்று. மாறாக, மகளிர் உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தின் விளைபொருள் அது. 1910 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் நடந்த உலக சோஷலிச மாநாட்டில் கிளாரா ஜெட்கின் என்பவர், மார்ச்-8 ஐ சர்வதேச மகளிர் நாளாகக் கடைபிடிக்கவேண்டும் என்று முதன்முறையாக கோரிக்கை விடுத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐ.நா சபையால் அந்நாள் (1975) அங்கீகரிக்கப்பட்டது. 1977ல் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முன்பே ரஷ்யப்புரட்சியின் தலைவர் லெனின், பெண்களின் சமூகப்பங்களிப்பையும் உரிமைப்போராட்டங்களையும் அங்கீகரித்து மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பெண்கள் அனைத்துத்துறைகளுக்குள்ளும் நுழையத் தொடங்கியிருக்கின்றனர். இட ஒதுக்கீடுகளும் கல்வியறிவும் பகுத்தறிவும் அவர்களின் பார்வையை விசாலப்படுத்தியிருக்கின்றன. வாய்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன. இருப்பினும் உயர் பதவிகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. மகளிர் தொழில்முனைவோரின் எண்ணிக்கையும் அவ்வாறே இருக்கிறது. இல்லத்தரசிகள் எனும் புதிய இனம் உருவாக்கப்பட்டு, உழைப்பு கடுமையாக சுரண்டப்படுவதுடன் உழைப்புக்கான அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறது.
அதேவேளையில் புரிதல் உள்ள ஆண் இனமும் உருவெடுக்கத்தொடங்கியிருக்கிறது. வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுதல், குழந்தை வளர்ப்பு பொறுப்பைப் பகிர்தல், பெண்களின் உடல் மற்றும் மனம் சார் சவால்களைப் புரிந்துகொள்ளுதல் என்று ஒரு நல்ல போக்கு உருவெடுத்திருக்கிறது. இதனை வாழ்த்தி வரவேற்போம்.
அதேவேளையில் தகரக்க வேண்டிய தடைகளும் அதிகம் உள்ளன. அரசு, தனியார் துறைகள், ஆன்மீக மையங்கள், அரசியல் என்று பல இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. ஆணுக்கு இணையான பங்களிப்பு அங்கெல்லாம் உறுதிசெய்யப்படவேண்டும். அதேபோல, பொதுவெளியிலும் இணைய வெளியிலும் பெண்களின் வளர்ச்சி பொறுக்காதவர்கள் பெண்களின்மீது ஒழுக்கத்தைக் குறிவைத்த தாக்குதல்களை நிகழ்த்துகின்றனர். இது சட்டம், பயிற்சி, விழிப்புணர்வு மூலம் தடுத்துநிறுத்தப்படவேண்டும்.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கென்று தனித்த பிரச்சனைகள் உள்ளன. அவற்றைக் களைய அரசுகளும் நன்னோக்கம் கொண்டோரும் முன்வரவேண்டும். பெண்ணியம் என்ற பெயரில் ஒரு திரிபுவாதம் முன்வைக்கப்படுகிறது. உண்மையான, முற்போக்கான பெண்ணியப்பார்வை கொண்டோரை சிறுமைப்படுத்தும் தந்திரம் அது. அதற்கு எதிராகவும் பெண்கள் போராட வேண்டியிருக்கிறது.
இவ்வாறு பெண்களின் உரிமைப்போராட்டம் இன்னும் வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் ஆண்களும் தோள்கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது.
(Image by freepik)