சென்னையைத்தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் ஆகும். இதன் தலைவராக சீனிவாசன் நெடுங்காலமாக இயங்கிவருகிறார். கிரிக்கெட் வாரியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பொறுப்புகளிலும் இருந்தவர் சீனிவாசன்.
தற்போது, தனது நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை ஆதித்யா பிர்லாவின் அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அவர் முடிவுசெய்திருக்கிறார். இதற்கு அல்ட்ராடெக் நிறுவனத்தின் இயக்குநரவை ஒப்புதல் அளித்துவிட்டது.
கடந்த மாதத்தில் 22.77% பங்குகளை அல்ட்ராடெக் நிறுவனம் பங்கு ஒன்று ரூ.268 என்ற விலையில் வாங்கியது. அடுத்தகட்டமாக 32.72% பங்குகள் வாங்கப்பட உள்ளன. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் 55.49% பங்குகள் அல்ட்ராடெக் நிறுவனத்தின் கையில் இருப்பதாகப் பொருள்.
அதாவது, பெரும்பான்மை பங்குகள். அதாவது, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் முழுமையாகக் கைமாறுகிறது. மேலும், நிறுவனரின் குடும்பத்திடம் இருக்கும் பங்குகளும் வாங்கப்பட உள்ளன. இது தவிர, சுமார் 8 கோடிக்கும் மேற்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகளைப் பொதுமக்களிடமிருந்து வாங்கவும் அல்ட்ராடெக் முடிவெடுத்திருக்கிறது.