ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து கடந்த பிப்ரவரியில் உருவாக்கிய இலவச இணைய வழிக்கல்வித் திட்டம்தான் ஸ்வயம் பிளஸ். இது தொடங்கியதிலிருந்து 75,000 க்கும் மேற்பட்ட மாணவர் 165 க்கும் மேற்பட்ட படிப்புகளைப் படித்துத் தேர்ச்சியாகியுள்ளனர். ஸ்வயம் மூலம் வழங்கப்படும் 33 படிப்புகளுக்கு கிரடிட்களை மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.
அண்மையில் வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய பாடங்களை வழங்க முன்னணி நிறுவனங்களுடன் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
திறன் மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட ஆன்லைன் படிப்புகள் மற்றும் இன்டர்ன்ஷிப்களை வழங்குவதற்காக பல துறைகளில் உள்ள முன்னணி தொழில் பங்குதாரர்களுடன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தகவல் தொழில்நுட்பம், சமூக அறிவியல், வங்கி மற்றும் நிதி, மென் திறன்கள், இசை, மேலாண்மை மற்றும் உணவு அறிவியல் போன்ற பல துறைகளிலுள்ள பல நிறுவனங்களின் இன்டர்ன்ஷிப்களையும் உள்ளடக்கியுள்ளன இந்த ஒப்பந்தங்கள்.
சென்னை ஐஐடியின் இயக்குநர் வி.காமகோடி இதுகுறித்துக் கூறுகையில், “வரும் ஆண்டுகளில் எல்லா தரப்பு மக்களும் எந்த படிப்பையும் மிக எளிதாக கற்க முன் வரவும் மற்றும் அதற்கான முன்னுரிமையை வழங்கும் முதற்படியாக இந்த திட்டங்கள் அமையும்” என்றிருக்கிறார்.