“நான்தான் நிறுவனர். இவங்க மேலாளர்கள்”-இணையத்தைக் கலக்கும் குட்டிச் சுட்டி தொழில் முனைவோர்.

“நான்தான் நிறுவனர். இவங்க மேலாளர்கள்”-இணையத்தைக் கலக்கும் குட்டிச் சுட்டி தொழில் முனைவோர்.

“நான் ஃபவுண்டர்”  “ நான் மேனேஜர் , நானும் மேனேஜர்” என்று  மூன்று குட்டீஸ்கள் கன்னடத்தில் பேசித் தங்களை  அறிமுகப்படுத்திக் கொண்டால் யாராக இருந்தாலும் சற்று நின்று கேட்கத் தான் செய்வார்கள். இப்படியொரு காணொளி தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.

பெங்களூருவில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் கார்ட்டூன், மொபைல் கேம் …என்று விளையாடப் போகாமல் அவர்களே செய்த காகிதப் பைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த கிளம்பிவிட்டார்கள் இந்த மூன்று சின்னஞ்சிறுசுகளான- சாரதா, நசிகேதன், சம்யுக்தா. பெரியவர்களே தொழில் தொடங்க பெரிய அளவில் முதலீடு  வேண்டுமே என்று மலைக்கும் வேளையில் நையா பைசா செலவின்றி  இச்சின்னஞ்சிறு தொழில்முனைவோர் தங்களது  காகிதப்பை தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிவிட்டனர்.  காகிதப்பைகளைத் தயாரிக்க பசை, கத்திரிக்கோல் என்று எதுவும்  எதுவும் பயன்படுத்தப்படுவதில்லையாம்!

இந்த சுட்டிகள்தான் இகோவாலா நிறுவனத்தின் நிர்வாகிகள்.

சரக்கு தயாராகிவிட்டது. அதனை சந்தைப்படுத்த வேண்டாமோ? அதானல்தான் இவர்கள் சாலையில் செல்லும்  யாரையும் விட்டுவைக்காமல் சந்தைப்படுத்தத் துரத்துகிறார்கல்.  எல்லோரிடமும் அவர்கள் ஒரு காகிதப் பையை மாதிரியாகக்  கொடுத்து… அட்டகாசமாகப் பேசத் தொடங்கிவிடுகின்றனர். பேச்சில் எந்த தயக்கமுமின்றி சரளமாக வருகிறது வணிக மொழி.

  “எங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் பெயர் ‘இகோ-வாலா’ என்று வாண்டுகள் சொல்கின்றனர். மேலே சொன்னபடி ஒவ்வொருவரும் நிறுவனத்தில் தாங்கள் என்னவாக இருக்கிறோம் என்பதையும் தொழில்முறை வணிகர்கலைப்போல சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்கின்றனர்.

அதுமட்டுமா… மாதம் ரூ.10 சந்தாவாக கட்டினால் போதுமாம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு காகிதப் பைகளை அவர்களே நேரடியாக வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப் போவார்களாம்…. இல்லம் தேடி சேவை !

“உங்கள் அலுவலகம் எங்குள்ளது?” என்று ஒரு  வாடிக்கையாளர் கேட்க , “இது வரை தீர்மானிக்கப்படவில்லை” சிங்கம் போல பதில் அளிக்கிறார் கம்பெனியின் நிறுவனர் அம்மணி.

 “ஏதாவது விழா, நிகழ்வு போன்றவைக்கு கூடுதல் காகித பைகள் தேவைப்பட்டால் எங்களை இந்த எண்ணில் அழைக்கலாம், நாங்களே கொண்டு வந்து தருவோம்,” என சொல்லிக்கொண்டே நிறுவனத்தின் பெயரும் தொலைபேசி எண் எழுதப்பட்டிருக்கும் ஒரு துண்டு சீட்டை நீட்டுகிறார்…. படு சீரியஸான பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு!

அவர்களின் இந்த முயற்சியையும், அவர்களின் ஸ்டார்ட் அப் – ‘இகோ வாலா’ மேலும் வளர்ச்சிபெற பலரும் வாழ்த்தி வருகிறார்கள். வயதோ, பணமோ எதைப் பற்றியும் கவலைப்பட அவசியமில்லை…. தொழில் தொடங்க கனவிருந்தால் மட்டும் போதும்… களத்தில் இறங்க வேண்டியது தான் பாஸ் ! சின்னஞ்சிறிசுகள் சொல்லித்தருகின்றனர். பாடத்தை எவர் கற்றுக்கொடுத்தால் என்ன….கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *