சென்னை, ஏப்.3: ஐம்பது நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் ‘ஃபயர்’ திரைப்படம் தமிழ் தயாரிப்பாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரையை பதித்துள்ளார் தயாரிப்பாளர், நடிகர் ஜெ.எஸ்.கே சதீஷ்குமார்.
‘தங்க மீன்கள்’ மூலம் ராம், ‘குற்றம் கடிதல்’ வாயிலாக பிரம்மா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் பாலாஜி தரணிதரன், ‘ரம்மி’ வாய்ப்பால் பாலகிருஷ்ணன் என பல்வேறு திறமைமிக்க இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியவரும், ஜெ எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் தேசிய விருது பெற்ற வெற்றிப் படங்களை தயாரித்தவருமான ஜெ எஸ் கே சதீஷ் குமார், ‘தரமணி’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘கபடதாரி’, ‘ஃபிரெண்ட்ஷிப்’, ‘அநீதி’, ‘வாழை’ என பல படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
பிப்ரவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியான் ‘ஃபயர்’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது. பெரிய நட்சத்திரங்கள், இயக்குநர்களின் படங்களின் ஆயுட்காலமே ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்கள் என ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் ‘ஃபயர்’ படத்தின் மாபெரும் வெற்றி தமிழ்த் திரையுலகத்தையே உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு சுமார் 80 படங்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் ‘டிராகன்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட வெகுசில திரைப்படங்களே லாபத்தை ஈட்டியுள்ளன. இந்நிலையில் பெரும்பாலும் புதுமுகங்கள் மற்றும் அறிமுக இயக்குநர் கூட்டணியில் உருவான ‘ஃபயர்’ இத்தகைய வெற்றியை ஈட்டியுள்ளது கதையையும் திறமைகளையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
-எல்.குணாளன்.