தொழில் முனைவோருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று பல தகுதிகளை பலரும் பட்டியல்கள் இடுகிறார்கள். வெற்றி பெற்றவர்கள் ஒரு பக்கம் என்றால், தோல்வி அடைந்தவர்கள் ஒரு பக்கம் பட்டியல் கொடுக்கிறார்கள். பல நேரங்களில் இரண்டு பட்டியல்களும் ஒன்று சேருகிற இடம் எது தெரியுமா? துணிவு என்கிற அடிப்படை தகுதியில்தான்.ஏ
-
ஏன் துணிவு என்பது ஒரு தொழில் முனைவோருக்கு முக்கியமானது? எதையும் மாற்றி சிந்திப்பது என்பதே துணிவின் ஒரு அடையாளம் என்று சொல்லலாம். உலகம் போகிற போக்கில் போகாமல் மாற்றிச் சிந்திப்பதற்கான துணிவு உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு புதுமையாளராகவோ, கண்டுபிடிப்பாளராகவோ, படைப்பாளியாகவோ மாறுகிறீர்கள், அதேபோலத்தான் தொழில்முனைவோராகவும் மாறுகிறீர்கள். ஆக மாற்றி சிந்திக்கிற துணிச்சல் நமக்கு வேண்டும். அதேபோல தோல்வியைக் குறித்த அச்சம் இல்லாமல் துணிச்சலாக யாரெல்லாம் ரிஸ்க் (இடரை) மேற்கொண்டு செயல்படுகிறார்களோ அவர்களுக்குத்தான் புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நான் இதைச் செய்தால் அப்படி நடந்து விடுமோ, அதைச் செய்தால் இப்படி நடந்து விடுமோ என்று அச்சப்பட்டு கொண்டே இருந்திருந்தால் நம் நாட்டில் ஒரு எல்&டி நிறுவனமோ , ஒரு டாட்டா குழுமமோ,ம் உருவாகி இருக்காது, டிவிஎஸ் குழுமமோ, முருகப்பா குழுமமோ உருவாகி இருக்காது. ஆக யாரெல்லாம் துணிச்சலாக இறங்கி களத்தில் பணியாற்றினார்களோ அவர்கள்தான் இன்று மிகப்பெரிய தொழிற் கூடங்களின் அமைப்புகளின் , தொழில் சாம்ராஜ்யங்களின் தலைவர்களாக மிளிர்கிறார்கள். தொழில் முனைவோருக்கு வருகிற அடிப்படையான பயம் ‘இது தோற்று விட்டால் என்ன செய்வேன்?’ என்பதுதான். உண்மையில், தொழில் முனைவோரிடம் பெரும்பாலும் இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலையில்தான் இருப்பார்கள். மிகப்பெரிய பணக்காரர்கள் கூட, இந்த ரிஸ்கை எடுத்தால் (இடரை மேற்கொண்டால்) நம் கையில் இருக்கும் பணம் தொலைந்து விடுமே சொத்துக்கள் அழிந்து விடுமே என்று அச்சப்படாமல் வேலை செய்கிற பொழுது, இழப்பதற்கு ஏதுமற்ற திறமையும் உழைப்பையும் முதலீடாக போட்டு அடுத்த கட்டத்துக்கு நகர விரும்புகிற ஒரு இளம் தொழில் முனைவோர் எதற்காக அச்சப்பட வேண்டும்?. ஒரு வேளை நீங்கள் அச்சப்பட்டே தான் தீர வேண்டும் என்றால் நீங்கள் அச்சப்படுவதற்கான நியாயமான காரணங்கள் சில உண்டு. அவை
-
1.அனுபவமின்மை
-
2. திட்டமின்மை
அனுபவம் என்பது மிக முக்கியம். நீங்கள் ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தால், அத்துறையில் பணியாற்றிய அனுபவமோ அல்லது குறைந்தபட்சம் தோற்ற அனுபவமாவது உங்களுக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை கற்றுக் கொள்வதற்காக நீங்கள் வெகு காலத்தை அல்லது பணத்தை செலவிட வேண்டி இருக்கும். அனுபவத்தின் விலையாக பணம் மட்டுமல்ல மனநலமும் பாதிக்கத்தான் செய்யும். எனவே அனுபவம் இல்லாமல், நீங்கள் வேலை செய்தால் நிச்சயமாக பயப்படுவதில் எந்த தவறும் கிடையாது. அதேபோல திட்டமிடாமை என்பதும் அச்சம் தரும் அம்சம்தான்.
திட்டமிடாமை என்பது தொழிலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அடுத்த ஓராண்டுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம், அடுத்த ஆறு மாதங்களுக்குள் என்ன செய்யப் போகிறோம், அடுத்த ஒரு மாதத்திற்குள் என்ன செய்யப் போகிறோம், இன்று என்ன செய்ய வேண்டும் என்று பெரிய அளவில் யோசித்து அதை நுண்ணிய அளவில் செயல்படுத்துவது தான் சரியாக திட்டமிடுவதின் விளக்கம். திட்டமிடும் பொழுது பல்வேறு அம்சங்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டும் நமது பலம், போட்டியாளர்களின் பலம் சந்தை நிலவரம் என்று பல்வேறு அம்சங்களையும் கணக்கில் கொண்டு தான் திட்டமிட வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டி நமக்கு தோல்வியோ சிக்கலோ வருகிற பொழுது என்ன செய்வது என்று பயம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். சாலையில் உங்கள் வாகனம் இறங்காத வரை உங்களுடைய இடம் என்பது உங்களுக்கு தெரியாது . இறங்கிய பிறகு எல்லா வாகனத்துக்கும் இருப்பது போல உங்களுக்கும் ஒரு இடம் உண்டு. இதை நீங்கள் பயன்படுத்தி உங்கள் வாகனத்தைச் செலுத்தலாம். அதேபோலத்தான் ஒரு தொழிலுக்குள் நுழைகிற பொழுது உங்களுக்கான இடம் என்பது நிச்சயம் இருக்கும். பிரச்சனைகள் வருகிற பொழுது அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் உங்களுக்குத் தெரிய வரும். அதற்கான ஆலோசகர்களும், நண்பர்களும், கூட்டாளிகளும், உங்களுக்கு காலப்போக்கில் வந்து சேர்வார்கள். எனவே, எப்பொழுது அச்சத்தை விடுகிறீர்களோ, எப்பொழுது துணிச்சலை வளர்த்துக் கொள்கிறீர்களோ, அப்பொழுது தான் உங்களால் தொழில் முனைவோருக்கான தகுதி கிடைத்து விட்டது என்று நிச்சயமாக கூறி விட முடியும்.