புதுதில்லி, செப்.3, 2025: பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வரும் எல்.ஐ.சி.  2025 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்தி 11,200 ஆக அறிவித்துள்ளது.

2022-23, 2023-24 அல்லது 2024-25 கல்வி ஆண்டுகளில் பத்தாம், பன்னிரண்டாம், டிப்ளோமா அல்லது அதற்கு சமமான தேர்வுகளில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான CGPA மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 2025-26 கல்வியாண்டில் முதல் ஆண்டில் சேர்க்கை பெற்றிருந்தால், இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

இளங்கலை பட்டப் படிப்பு தொடரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொது கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இதில் மருத்துவம், பொறியியல், பொதுப் பட்டங்கள், ஒருங்கிணைந்த பாடப் பிரிவுகள் மற்றும் அரசு அங்கீகரித்த கல்லூரிகள்/ கல்வி நிறுவனங்களில் தொழில் பயிற்சி (ITI) படிப்புகளும் அடங்கும்.

மேலும், பெண்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி:

  • 11ஆம் வகுப்பு / இன்டர்மீடியட் (10+2) கல்வி

  • 10ஆம் வகுப்பு முடித்த பின் 2 ஆண்டு டிப்ளோமா படிப்பு போன்ற துறைகளில் பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

தகுதித் தகவல்கள் மற்றும் திட்ட விவரங்கள் அறிய, https://licindia.in இணையதளத்தைப் பார்வையிடலாம். ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி 22.09.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.