கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் – கொடிசியா இன்று 55-வது நிறைவு ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. கோவை மாநகரின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் சூழலுக்கும் முக்கிய காரணமாக இருந்து பல புதுமையான வணிக வர்த்தக முயற்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் 1969-லிருந்து பல ஆக்கம் தரும் பணிகளை செய்து வருகிறது.
40 உறுப்பினர்களுடன் துவங்கிய இச்சங்கம் தற்போது 5000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு தொழில்முனைவோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல கருத்தரங்குகளும் பயிலரங்கங்களும் தொழில்துறை கண்காட்சிகளும் நடத்தி வருகிறது.
1986-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிறு தொழிலக சோதனை மற்றும் ஆய்வு மையம் நாட்டின் சிறந்த சோதனைக்கூடங்களில் ஒன்று.
1988- ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பன்னாட்டு கண்காட்சியை கொடிசியா நடத்தி வருகிறது. தொடக்கத்தில் பி.எஸ்.ஜி மைதானத்தில் நடந்துவந்த இந்த கண்காட்சிகள் 2000-ஆம் ஆண்டு முதல் விளாங்குறிச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் தான் நடைபெறுகின்றன.
155 நாட்களில் 1500 பணியாட்களைக்கொண்டு கட்டப்பட்ட இந்த வளாகத்தின் சாதனை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமா ஆசியாவின் மிகப்பெரிய தூண் இல்லாத மண்டபம் என்ற தனிச்சிறப்பை கொண்டுள்ள புது தில்லியில் அமைந்துள்ள பிரகதி மைதானத்திற்கு அடுத்ததாக தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிற்துறை வணிக கண்காட்சி கூடமாக கொடிசியா கண்காட்சி வளாகம் விளங்குகிறது .
கோவையின் தொழில் முனைவு கலாச்சாரத்துக்கும் தொழில் துறையின் தேவைகளுக்காகத் தோள் கொடுப்பது கொடிசியாதான். சிறு குறு நடுத்தர தொழில் துறையின் வளர்ச்சிக்கு 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து குரலும் கையும் கொடுக்கும் கொடிசியாவுக்கு முனைவு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.