இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் முடிவு ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்த்து வைத்திருக்கிறது பிரபலங்களின் வாரிசுகள் போட்டியிட்ட சூழலில் யாரும் சற்று எதிர்பாராத வகையில் தேசிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் (ஜனதா விமுக்தி பெரமுணா கட்சியைச் சேர்ந்தவர்) போட்டியிட்ட அநுரா குமார திசநாயக்க வெற்றி பெற்றிருக்கிறார். அவர் இலங்கையின் ஒன்பதாவது அதிபராக இன்று பதவி ஏற்றிருக்கிறார்.
ஒட்டு மொத்தமாக 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்த சூழ்நிலையில் தற்போதைய அதிபர் அனில் விக்ரம் சிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதேசா, அதேபோல ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்சே ஆகியோர் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி இருந்தனர். தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டாலும் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியது. 50 விழுக்காடு வாக்குகளைப் பெறுவதற்கு போட்டா போட்டி நிலவியது.
இவ்வாறு நடந்ததை அடுத்து இலங்கையின் தேர்தல் ஆணையம் இரண்டு மற்றும் மூன்றாவது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையை நடத்தத் தீர்மானித்தது. இருப்பினும் திசநாயக்க முதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது குடியரசுத் தலைவராக இளம் கம்யூனிஸ்ட் தலைவரான அநுரா குமார திசநாயக்க பதவியேற்கிறார்.
“இது ஒரு கூட்டு முயற்சிக்கான விளைவுதான். இனி சிங்களர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என்று அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்த ஒன்றுபட்ட இலங்கையே நமது இலக்காக இருக்கும். அதற்கான தொடக்கம் தான் இது என்று அவர் கூறியிருக்கிறார்.
உலகமெங்கும் உள்ள இடதுசாரிகளிடையே இது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடனடியாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதுடன் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தியிருக்கிறது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு இளம் இடதுசாரி தலைவர் ஜனாதிபதியாக பதவியேற்பது இதுவே முதல்முறை எனலாம். ஏற்கனவே பதவியில் இருந்த சிலர் இடதுசாரிப் பின்புறத்திலிருந்து வந்திருந்தாலும் அப்பாதையிலிருந்து தடம் மாறிச் சென்றதையும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் மறுக்கவில்லை.
அந்நாட்டின் அரசியல், பொருளாதார தளத்தில் சீனாவின் ஆதிக்கம் குறித்த கேள்விகள், இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்படுவது படகுகள் சிறைபிடிக்கப்படுவது, தாக்குதலுக்கு உள்ளாவது, மீன்களைப் பறிமுதல் செய்வது, விசாரணையின்றி தமிழ் மீனவர்கள் சிறையில் அடைபட்டுக்கிடப்பது, கச்சத்தீவைப் பயன்படுத்துவதற்கான தமிழக மீனவர்களின் உரிமைகள் முதலிய பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியவையாகத் தொடர்கின்றன.
இது போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் பேச்சு வார்த்தைகளின் மூலம் புதிய அதிபர் தீர்ப்பார் என்று நம்பலாம். கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்களை சந்தித்து வந்திருக்கும் இலங்கை இனியாவது அமைதி தழுவும் அழகிய தேசமாகத் திகழட்டும்.
அதுதான் ஒரு அண்டை நாடான இந்தியாவின் விருப்பமும் நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்களின் மீதான நமது அன்பின் வெளிப்பாடும் ஆகும்.
அதனைச் சாதித்துக் காட்டுங்கள் திசநாயக்க!