மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாட்களுக்கு முன்பு (செப்.11, 2024) கோவை வந்திருந்தார். சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஒரு கலந்துரையாடலுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒன்றிய நிதியமைச்சருடன் நேரடியாக உரையாடி, தங்கள் துறை சார்ந்த குறைகளைக்கூறி தீர்வு பெறலாம் என்று தொழில் துறையினர் பலரும் அச்சந்திப்பில் கூடியிருந்தனர்.
அப்போது எழுந்து பேசிய அன்னபூர்ணா உணவகக்குழுமத்தின் தலைவர் சீனிவாசன், ஒரே உணவகத்தில் பல்வேறு உணவுப்பொருட்களுக்கு வெவ்வேறு விதமான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பது நடைமுறை சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று நகைச்சுவைபடக்கூறினார். இதனைக்களைந்து, ஒரே மாதிரியான வரிவிதிப்பு இருந்தால் நல்லது என்று கோரிக்கையையும் வைத்தார். கலகலப்பான அந்த உரையாடலை அனைவரும் ரசித்தனர். அதுஒரு ஜனரஞ்சக மொழியில் விடுக்கப்பட்ட கோரிக்கை என்றே அமைச்சரும் சொல்லிவிட்டார்.
ஆனால், அடுத்து நடந்ததுதான் ரசிக்கும்படியாக இல்லை. தான் அந்தக் கூட்டத்தில் பேசியதால் ஒரு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்திவிட்டதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறும் திருமதி.நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்புக் கோருவதுபோன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவிவருகிறது (அதன் சொற்கள் துல்லியமாக இல்லை) . இதனைத்தொடர்ந்து சீனிவாசன், தன் நிலையை ஊடகங்களிடம் விளக்கவும் இல்லை.
அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்த கோவை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசனும் சந்திப்பை மறுக்கவில்லை. மாறாக, நிதியமைச்சரிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்ற தனது விருப்பத்தை சீனிவாசன் தெரிவித்ததை அடுத்தே, இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ.க. பிரமுகரான திரு.அண்ணாமலை, “அந்த வீடியோ, இரு நபர்களின் தனிப்பட்ட உரையாடல் நிகழ்வு. அதனை வெளியிட்டது தவறு. அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அன்ன்பூர்ணா குழுமத்தின் தலைவர் சீனிவாசனிடமும் தனது வருத்தத்தைப் பதிவு செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், விஷயம் மிகவும் எளிதாகக் கடந்துபோகிற தன்மையில் இல்லை. இது அரசியல் விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அதன் மூத்த தலைவரான திரு.மல்லிகார்ஜூன கார்கே அவர்களும் இது தவறான முன்னுதாரணம் என்று சொல்லியிருக்கிறார். பல்வேறு அரசியல் கட்சிகளும் இதனைக் கண்டித்திருக்கின்றன. வணிகர் சங்கம் ஒன்றும் அதேபோன்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
அரசியலை விடுங்கள். தொழில் முனைவோரின் பார்வையில் பேசுவோம். ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபோதே வணிகர்கள் பலரும் அதனை எதிர்த்தனர். பல்வேறு திருத்தங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுவருகின்றன. அதேபோல, ஜி.எஸ்.டி. கவுன்சிலும் நடைமுறை பிரச்சனைகளைக் கருத்தில்கொண்டு பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது.
இதனை வைத்துப்பார்க்கும் ஒரு தொழில் முனைவோர் என்ன நினைப்பார்? அரசு, நாம் சொல்வதைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும் என்றுதானே நினைப்பார்…அப்படி நம்பித்தானே சீனிவாசனும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பார்…
அப்படி அழைக்கப்பட்ட ஒருவர், தனது தொழில் துறையின் பிரச்சனைகளை உரிய அமைச்சரிடம் சொல்லி தீர்வு காணத்தானே விழைவார்! அடிப்படையிலேயே கொங்கு மண்டலத்துக்காரர்கள் மிகுந்த மரியாதையுடன் உரையாடல்களை நிகழ்த்துபவர்கள். யாருக்கும் சங்கடம் தராத சொற்களைப் பேசுபவர்கள்.
அந்த வகையில், தற்போதைய ஜி.எஸ்.டி வரிவீதத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து நகைச்சுவையான எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தி தனது வாதத்தை/கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். அமைச்சரும் இவரது நகைச்சுவை கலந்த பேச்சை எதிர்மறையாக எடுத்துக்கொண்டதுபோல தெரியவில்லை.
ஆனால், அடுத்து வெளியான மன்னிப்பு வீடியோ, தொழில் துறையை திகைக்க வைத்திருக்கிறது. தனது துறை சார்ந்த கோரிக்கையை விடுக்கும் தொழில் முனைவோர், ஆட்சியாளர்களிடம் அதற்காக மன்னிப்புக் கோர வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இதில் இன்னொரு கோணமும் உண்டு. ஒருவேளை சீனிவாசன், தானாகவே மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தாலும் அதுவும் ரசிக்கத்தக்கதல்ல. உணவகத்துறை சார்ந்து தன்னை அவர் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிராவிட்டால் (ஓட்டல்கள் சங்கத்தில் மாநிலப்பொறுப்பில் இருக்கிறார் அவர்) அதுகுறித்து யாரும் பேசப்போவதில்லை. தனக்கு நியாயம் என்று படுகின்ற விஷயத்தைப் பேசிவிட்டு, உடனடியாக வருத்தம் தெரிவிப்பதும் தொழில்துறையினருக்கு அழகன்று.
எது எப்படி இருப்பினும் இன்று ஒரு தர்மசங்கடம் நிகழ்ந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.
இன்று ஒன்றிய அரசு வெளிநாட்டுத்தொழில்முனைவோரை ஈர்ப்பதற்காகவும் புதிய உள்நாட்டுத் தொழில் முனைவோரை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் திருவிழாக்கள் இதன் ஒரு பகுதிதான். முத்ரா திட்டம், ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவையும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள திட்டங்கள்தாம்.
அவ்வாறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் தொழில் துறையினரின் கருத்துக்களை அரசிடம் எடுத்துவைக்க ஒரு சரியான தளம் இல்லாதது பெருங்குறை. இச்சூழலில்தான் இதுபோன்ற சந்திப்புகளைப் பயன்படுத்தி தொழில் துறையினர் தம் கருத்துகளைப் பகிர்கின்றனர்.
தற்போதைய நிகழ்வையடுத்து, தொழில் துறையினர் தங்களது துறை சார் பிரச்சனைகளைப் பேசவும் தயங்கும் சூழல் உருவாகக்கூடும். இது தொழில் முனைவு சூழலுக்கு பெரிய சவாலாக அமையும். திறந்த உரையாடல்கள்தாம் இன்றைய தொழில் உலகுக்குத் தேவை. இரு கை தட்டினால்தான் ஓசை.
எனவே, தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு ஒன்றிய அரசும் திரு.சீனிவாசன் அவர்களும் சேர்ந்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தொடர்ச்சியாக அரசு-தொழில்துறை-துறைசார் வல்லுநர்கள் அடங்கிய உரையாடல் குழுக்கள்/அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதில் புதிய கருத்துகளும் அனுபவங்களும் ஒன்று கூடட்டும். அதன் விளைவாகத் தொழில் துறை பிரச்சனைகள் தீர்க்கப்படட்டும். புதிய தொழில்முனைவோர் துணிந்து புத்தொழில்களை உருவாக்கட்டும்.
அதுதான் இன்றைய தேவை.
(Image by Pixabay)