இந்திய அரசியல் எப்போதும் பல்வேறு விசித்திரங்களைச் சந்தித்துத்தான் வந்திருக்கிறது. அற்புதமான படிப்பாளிகள், சிந்தனையாளர்கள், புகழ் வெளிச்சத்தின்மூலம் அரசியலுக்கு வந்தவர்கள், தனிப்பட்ட-தொழில் வாழ்க்கைக்காக அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள், புகழ் அல்லது பொருளுக்காக அரசியல் களம் கண்டவர்கள் என்று எல்லாம் கலந்த கதம்ப சாதம் அது.
இத்தகைய அரசியலில் தத்துவார்த்த அரசியலுக்கும் பெரிய பங்கு உண்டு. அவ்வாறு அரசியல் செய்வோர் இவ்வளவு பெரிய அரசியல்வாதிகளின் மக்கள் திரளில் சிறுபான்மையினராகவும் ‘பிழைக்கத் தெரியாதவர்களாகவும்’ அறியப்படுவதும் உண்டு. ஆனால், காலம் அவர்களுக்கான மரியாதையைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது.
அத்தகைய தத்துவார்த்த மரபு, இடதுசாரிகளுக்கு உண்டு. எளிமை, அரசியல் வாழ்வில் நேர்மை, தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மை என்று முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணிப்பவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட மரபில் வந்தவர் திரு.சீத்தாராம் யெச்சூரி(72) அவர்கள். அவர் நேற்று (செப் . 12, 2024) காலமாகியிருக்கிறார்.
சென்னையில் பிறந்த சீத்தாராம் யெச்சூரி, சி.பி.எஸ்.இ (12ஆம் வகுப்பு ) பொதுத்தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பெற்றார். தில்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் மூன்று முறை தலைவர் பதவியேற்று காத்திரமான போராட்டங்களை நடத்தியவர்.
இந்திராகாந்தி அரசால் கொண்டுவரப்பட்ட அவசர நிலையை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் சிறை சென்றவர். மாணவர் போராட்டத்தின் பேச்சுவார்த்தைக்கு இந்திரா காந்தி அவர்களை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்து பல்கலையின் வேந்தர் பதவியை விட்டு வெளியேறுமாறு துணிச்சலுடன் கோரிக்கை வைத்து நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.
பொதுவாக சிபிஐ, சிபிஎம் போன்ற இடதுசாரிக்கட்சிகளின் அரசியல் தலைமைக்குழுக்களில் அனுபவம் பெற்ற, பழுத்த அரசியல்வாதிகளைத்தான் அனுமதிப்பர். பெரும்பாலும் அவர்கள் 50-60 வயதுகளைக் கடந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் தனது 40 ஆவது வயதிலேயே சீத்தாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக ஆனார். இளம் தோழர்களுக்கு உத்வேகம் அளித்தது அவரது வருகை. 2015 முதல் தற்போதுவரை அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்துவந்தார்.
களப்போராட்டத்திலும் தத்துவார்த்தப் போராட்டத்திலும் தளராத போராளியாக விளங்கியவர் சீத்தாராம். அவரது கொள்கைக்கு நேர் எதிர் நிலையில் உள்ள கட்சிகளாலும் சிறந்த நாடாளுமன்றவாதி என்ற பெயர் எடுத்தவர். மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி, ஆளும் அரசுகளுக்கு கறாரான விமர்சகராகவும் ஆலோசகராகவும் தேவைப்பட்ட நேரங்களில் சித்தாந்த எதிரணி வீரராகவும் விளங்கியிருக்கிறார்.
வெளிநாடுகளின் பொதுவுடைமைக் கட்சிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை நேரில் சென்று வழங்கும் குழுவை வழிநடத்தியிருக்கிறார். இந்திய சூழலை சர்வதேச நிலைமைகளுடன் ஒப்பிட்டு தத்துவார்த்த விளக்கமளிப்பதிலும் வழிநடத்துவதிலும் அவர் வித்தகராகத் திகழ்ந்தார்.
தமிழ்மீதும் தமிழ்மக்கள்மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் யெச்சூரி. தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும் தில்லியில் வாழ்ந்தபோதும் நன்கு தமிழ் பேசுவார். மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகியவற்றில் தமிழகத்தின் நிலைபாட்டுக்கும் திராவிட சித்தாந்தத்துக்கும் மானசீக ஆதரவை வழங்கிவந்தார் யெச்சூரி. முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் அணுக்கத் தோழராகத் திகழ்ந்தார்.
யெச்சூரி அவர்களின் மறைவு, இடதுசாரிக்கட்சிகளை மட்டுமல்ல, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமதர்மம் பேசும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அனைத்துக் கட்சியினரும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
’நல்லவர்கள் தங்களுக்கென வாழ்வதில்லை, அவர்களின் எலும்பும் மற்றவர்களுக்காகத்தான் பயன்படும்’ என்கிறார் வள்ளுவர். அக்கொள்கையின்படி சீத்தாராம் யெச்சூரியின் உடல் , தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டுவிட்டது. வாழ்ந்த காலம் முழுக்க அறிவியல் பார்வைக்காகக் குரல் கொடுத்த தோழரின் உடல், மருத்துவ அறிவியல் மாணவர்களின் ஆய்வுக்காகப் பயன்பட இருக்கிறது.
அவரை இழந்துவாடும் அனைவருடனும் யெச்சூரியின் மறைவு தந்த வருத்தத்தை முனைவு பகிர்ந்துகொள்கிறது.
செவ்வணக்கம் தோழர்!