விஜய் சேதுபதிமீது கோபம் ஏன்?

விஜய் சேதுபதிமீது கோபம் ஏன்?

ஆன்லைன் மூலம் பலசரக்கு சாமான்களை விற்கும் “மண்டி” என்கிற செயலியின் விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தது சில்லரை வணிகத்தில் ஈடுபடுகின்ற வணிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறு, குறு வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தது தங்களை வருத்தமடைய வைத்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறது சில்லரை வணிகர்கள் சங்கம்.

மேலும் அவருக்கு எதிப்பு தெரிவிக்கின்ற வகையில் நவம்பர் நான்காம் தேதி (திங்கள்கிழமை) அன்று விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. அதனையடுத்து அவரது வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஜூலை 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி சுமார் 47.5 கோடி மில்லியன் இந்திய மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக அலைந்து திரியாமல், இருந்த இடத்திலேயே விலை மலிவாகப் பொருட்களை வாங்க உதவும் ஆன்லைன் வணிகத்தை இந்தியமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

அதனாலேயே இந்தியாவில் பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா,               ஸ்நாப்டீல் ஆகிய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைன் சில்லறை வணிகத்தில் ஆதிக்கம் செய்கின்றன. அதிலும் குறிப்பாக அமேசான் நிறுவனம் மற்ற நிறுவனங்களின் ஆன்லைன் வணிகத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் பெருவணிகம் செய்துவருகிறது.

ஆன்லைன் சில்லறை வணிகமானது இப்போது இந்தியாவில் மிகமிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது  18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஆன்லைன் சில்லரை வணிகம் நடந்துகொண்டிருக்கிறது.

ஆன்லைன் வணிகத்தில்  வளர்ச்சி  இப்படியே தொடர்ந்துகொண்டிருந்தால் வருகிற 2030-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஆன்லைன் சில்லரை வணிகமானது 170 பில்லியன் டாலர்களைத் தொடும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆன்லைன் சில்லறை வணிகத்தைப் பொறுத்தவரையில் ஸ்மார்ட் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களின் விற்பனையே உச்சத்தில் இருக்கிறது.

கடைகளில் இதே மின்னணு சாதனங்கள் விற்கப்படுகின்றன என்றாலும் அதிகத் தள்ளுபடி, மற்றும் கேஷ் பேக் எனப்படும் பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற சலுகைகளைத் தருவதால், கடைகள் மூலம் மின்னணு சாதங்களை விற்பவர்களைப் பின்னுக்குத் தள்ளி ஆன்லைன் வணிகர்கள் மின்னணு சாதனங்கள்  சந்தையைத் தங்களது கைகளுக்குள் வைத்திருக்கின்றனர்.

உடைகள், அணிமணிகள், செருப்பு, மின்னணு சாதனங்கள் என்று தன்னுடைய கிளைகளை பரப்ப ஆரம்பித்த ஈ-காமர்ஸ் வணிகம் கடைசியாக மளிகைப் பொருட்களையும் விட்டுவைக்கவில்லை.

அமேசான், பிளிப்கார்ட், பிக் பாஸ்கெட் என்று எண்ணற்ற நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இப்படி மளிகைப் பொருட்கள் விற்பனையிலும் ஆன்லைன் வணிகம் நுழைந்திருப்பது சில்லறை மளிகை வணிகத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது.

இந்தியா முழுக்க 1.2 கோடிக்கும் அதிகமான சிறு,குறு மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. அந்தந்த மளிகைக்கடை அமையப் பெற்றிருக்கும் பகுதியில் வசிக்கின்றவர்களே அந்தக் கடையின் வாடிக்கையாளராக இருப்பர்.

”அண்ணாச்சி”; ”ஐயா”; “அண்ணே”; “தாத்தா” என்று கடைக்காரரை அழைக்கும் அளவுக்கு அந்தக் கடைக்காரருக்கும் வாடிக்கையாளருக்குமான உறவு இருக்கும். ஒரு இரண்டு நாள் கடைப்பக்கம் வரவில்லை என்றால்கூட “என்ன அக்கா, உடம்பு சரியில்லையா? கடைப்பக்கம் காணோம்…” என்று அக்கறையோடு கடைக்காரர் விசாரிப்பார்.

ஹைப்பர் மார்க்கெட்களுக்கும் ஆன்லைன் வர்த்தகம் சவால்தான்!

மாதம் முழுக்க பொருட்களை கடனாக வாங்கிக்கொண்டு ஒன்றாம் தேதி பணத்தை பைசல் பண்ணும் வசதியும் இங்கே இருக்கும். இவ்வளவு ஏன்? தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தங்களது மளிகைக் கடைக்காரரை அழைக்கும் அளவுக்கு அன்பு ஆழமாக இருக்கும்.

ஆனால் இவை அனைத்தையும் தற்போது ஆன்லைன் சில்லரை மளிகை  வணிகம் அடியோடு புரட்டுப் போய்விட்டது. மளிகைக் கடைகள் வைத்திருக்கும் சிறு, குறு வணிகர்கள் ஆன்லைன் மளிகை வணிகத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையே ஆன்லைன் வணிகம் தனது ஆக்டோபஸ் கரங்களால் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் நடிகர் விஜய் சேதுபதியின் இந்த விளம்பரம் சில்லரை மளிகைக் கடைக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எத்தனையோ பெரிய பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை விற்றுக்கொண்டேதானே இருக்கின்றன?

அப்படி இருக்கும்பொழுது விஜய் சேதுபதியின் இந்தக் குறிப்பிட்ட விளம்பரத்தைக் கண்டு ஏன் வணிகர்கள் மத்தியில் இவ்வளவு வருத்தமும், கோபமும் ஏற்பட்டிருக்கிறது என்று சிலர் கேட்கலாம்.

இந்த விளம்பரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியை ஒரு நடிகராக மட்டுமே தமிழ்ச் சமூகம் பார்க்கவில்லை. தன்னுடைய எளிமையான அணுகுமுறை, சமூக அக்கறை கொண்ட செயல்கள் மூலம் நல்மனிதராக விஜய் சேதுபதி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருப்பதால் “இவர் ஆன்லைன் வணிகத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கலாமா?” என்கிற ஆற்றாமையே விஜய் சேதுபதி மீது வணிகர்களுக்கு எழுந்துள்ளது.

விஜய் சேதுபதிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்திருக்கும் வணிகர்கள், மளிகைக்கடைக்காரர்கள் பிக் பாஸ்கெட் நிறுவனத்திற்காக இரவு பகலாக விளம்பரம் செய்யும் நடிகர் ஷாரூக் கானை இவ்விஷயத்தில் கண்டுகொள்ளவில்லை என்பதை ஆராய்ந்துபார்த்தால் மேற்கண்ட உண்மை புரியும்.

வெளிநாடுகளில் அண்ணாச்சி கடைகள் இல்லை. எனவேதான் அங்குள்ளவர்கள் மாதம் முழுக்க காத்திருந்து மைல் கணக்கில் வரிசையில் நின்று வால்மார்ட் போன்ற பெருநிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடியில் மளிகை சாமான்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர்.

இந்தியாவின் நிலையே வேறு. சில்லரை வர்த்தகத்துறையை நம்பிப் பொதுமக்களும் கோடிக்கணக்கான சிறுதொழில் முனைவோரும் வாழ்கின்றனர்.

அவர்களைப் பாதிக்கிற எந்த தொழில்நுட்பம், வணிக மாதிரியையும் ஒன்றுக்குப் பத்துமுறை அலசி ஆராய்ந்து, தொடர்புடைய துறையினரின் கருத்துக்களையும் கேட்டபிறகே அரசுகள் அடுத்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *