அரசு ஊழியர் பகுதிநேரத்தொழில் செய்யலாமா?

இப்போதெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களிலும், சாலையில் நடந்து செல்லும்போது வழிமறித்து கொடுக்கப் படுகிற துண்டு பிரசுரங்களிலும், ‘பணியில் இருக்கும்போதே பகுதி நேரமாக தொழில் செய்யலாம்’ என்ற கவர்ச்சி கரமான வாக்கியங்களைப் பார்க்கிறோம். அது எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அரசுத்துறை முதல், தனியார் துறை வரை எதில் பணிபுரியும் ஊழியராக இருந்தாலும் அவரை அது கவரவே செய்கிறது.

 

பல தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு குறித்த ஒப்பந்தம் செய்யும் பொழுதே பகுதிநேரமாகவோ, முழு நேரமாகவோ எந்த தொழிலும் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என்று எழுத்துப்பூர்வமாக சொல்லிவிடுகின்றனர். அதை மீறும்போது வேலை இழப்பு வரை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

பொதுவாக தனியார் நிறுவனங்களில் இது அவ்வளவாக கண்காணிப்படுவது இல்லை. எனவே, எம்.எல்.எம்., சந்தைப்படுத்துதல் முதலிய பல்வேறு பகுதிநேர தொழில்களில் பல தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

wallet-946930__180

ஆனால், இதுவே அரசு ஊழியராக இருந்தால் பிரச்சனை கொஞ்சம் பெரிது தான். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973-ன் படி ஒரு தமிழக அரசு ஊழியர் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ தொழில், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஆனால், தங்களது கலைத்திறனை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கணக்கில் காட்டலாம். அதற்கு தடையில்லை.

 

எடுத்துக்காட்டாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், கவிதை எழுதும் திறனுடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது கவிதையைப் புகழ்பெற்ற ஒரு வார இதழுக்கு அனுப்பி அதற்கு சன்மானமாக ரூ.1000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது சட்டவிரோதம் ஆகாது. காரணம், அது அவரது கலைத்திறனுக்கு கிடைத்த சன்மானம். எனவே அத்தொகைக்கு விதிவிலக்கு உண்டு. மாறாக, அவர் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்தினால் அது சட்டவிரோதம்.

 

ஏனென்றால் பத்திரிகையின் உரிமையாளர்தான் பதிப்பாளர். அதன் லாபம் அனைத்தும் அவருக்கே போய்ச்சேரும். அதனால் பத்திரிகை நடத்துவது என்பது தமிழக அரசு ஊழியர் நடத்தை விதிகளை பொறுத்தவரை சட்ட விரோதமே. அரசு ஊழியர்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்யலாமே ஒழிய பங்கு வர்த்தகம் செய்யக் கூடாது. அதேநேரத்தில் பரம்பரையாக விவசாய நிலத்தை கொண்டிருக்கும் ஒரு அரசு ஊழியர் விவசாயத்தின்மூலம் வருவாய் ஈட்டுவதை சட்டம் தடுப்பதில்லை.

 

இவ்விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட அரசு ஊழியர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய மற்றும் குடும்ப உறுப்பினர்களது சொத்து விவரங்களை துறைத்தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். அதாவது அரசு ஊழியர் களின் வருவாய்  விவரங்கள் முழுக்க முழுக்க அரசால் கண்காணிக்கப்படுகின்றன. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு அரசு ஊழியர் சொத்து சேர்த்துவிடக்கூடாது என்பது தான் இந்த  விதிகளின்  நோக்கம்.

 

மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை எந்த ஒரு குடிமகனும் அரசுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

 

அப்படி என்றால் ஒரு அரசு ஊழியர் தொழில் செய்யும் திறனோடு இருந்தால் அவர் அதை  செய்வதற்கு வாய்ப்பே இல்லையா என்கிறீர்களா? பணியில் இருக்கும்போது நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பணியிலிருந்து அவர் விலகினால் மட்டுமே அவர் தொழிலோ, வணிகமோ செய்யலாம்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

18 thoughts on “அரசு ஊழியர் பகுதிநேரத்தொழில் செய்யலாமா?”

  1. நான் அரசு ப ணியில் உ ள்ளேன். அயல் நாட்டில் வேலை தேடிச் செல்லலாமா? அனுமதி எப்படி பெறுவது?

    1. அரசில் வேறு துறைக்கு வேலைக்குச் செல்வது தங்களின் சொந்த விருப்பம்தான். அரசுத்துறையாக இருந்தால் நீங்கள் உங்கள் துறைவாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் துறையில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. உங்கள் விடுமுறைக்காலத்தில் வெளிநாட்டுப்பயணம் செய்து, அங்கு நேர்காணல்களைச் சந்தித்து, வேலைக்கான அழைப்பு கிடைத்தவுடன் தற்போதைய வேலையை விடலாம். அரசுப்பணியில் இருந்துகொண்டே பணி நிமித்தம் வெளிநாடு சென்று, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் நோக்கத்தில் வேலை தேடினால் அது விதிமீறல் ஆகும்.

  2. நான் தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ளேன் ! எனக்கு ஏதேனும் ஒரு பத்திரிகையுடன் பகுதி நேர செய்தி சேகரிப்பாளராகவோஅல்லது Free Launce Reporter ஆகவோ அல்லது கவுரவ ஆலோசகராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில் தொடர்பு வைத்து கட்டுரைகள் , கவிதைகள் எழுதி இலவசமாக சமூக விழிப்புணர்வு மற்றும் சமூக சேவை செய்ய ஆசை ! இதற்கான தெளிவான , சட்ட பூர்வமான் வழி காட்டுதலை வழங்கிடுமாறும், தொடர்பு எண் வழங்கிடுமாறும் பணிவுடன் கோருகிறேன் !

    1. தாங்கள் ஊதியம் பெறும் ஊழியராகத் தனியார் துறையில் பணியாற்ற இயலாது. மாறாக, நீங்கள் கட்டுரையாளராக, கவிதை எழுதுவோராக, துணுக்கு எழுதுவோராக இயங்கலாம். அது முழுக்க முழுக்க படைப்பாற்றல் சார்ந்தது. அதற்கு கிடைக்கும் தொகை மதிப்பூதியம்தான். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளில் இதற்கு விதிவிலக்கு உண்டு. செய்தியாளராகப் பணியாற்ற இயலாது.

    1. நீங்கள் விடுப்பு எடுத்து தொழில் செய்தாலும் பணியிலிருப்பதாகவே பொருள். விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் உண்டல்லவா! ஊதியமில்லா விடுப்பைப்பற்றிக் கேட்கிறீர்கள். சட்டம், உங்களுடைய விடுப்பின் தன்மையைப் பார்ப்பதில்லை. மாறாக, பணியிலிருக்கும்போது வேறு தொழில் செய்கிறீர்களா/பணிபுரிகிறீர்களா என்றுதான் பார்க்கிறது. எனவே, ஒரு அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர், கூட்டுறவு ஊழியர் ஆகியோர் நிச்சயமாக பணியிலிருக்கும்போதும் விடுப்பில் இருக்கும்போதும் தொழில் செய்ய முடியாது.

      ஒருவேளை உங்களுக்கு சுய தொழில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது, அதை ஏன் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் கருத்து நியாயமானது. உங்களது சுய தொழில் அறிவை, ஆர்வத்தை உங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிருங்கள். அவர் பெயரில் தொழில் தொடங்குங்கள். அவர் தொழில் செய்ய நீங்கள் தாரளமாக உதவலாம். சட்டம் அதைத் தடுக்காது.

      வீட்டில் ஒருவர் நிரந்தரப் பணியில் (அரசுப்பணியில்) இருக்கும்போது இன்னொருவர் ரிஸ்க் எடுத்து சுய தொழிலில் இறங்கலாம். இருவரும் இடர் மேற்கொள்ள வேண்டியதில்லை. கையில் நிறைய வருமானம் வருகிறது, இருவரும் முழுமையாக இறங்கினால் லட்சங்களைக் குவிக்கலாம் என்ற நிலை வரும்போது அரசுப்பணியை விட்டுவிடலாம்.

      எந்த தொழில் செய்வதாக இருந்தாலும் அடுத்துவரும் 6 மாதங்களுக்கான குடும்ப பராமரிப்புக்கான தொகை உங்கள் சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது பொன்விதி. அதை மறக்காதீர்கள்.

  3. ஐயா கடந்த 2 வருடத்திற்கு முன் நான் எனது பதவி உயர்வை நிறுத்தி வைக்க கோரி மனு அளித்ததின் பேரில் எனது பதவி உயர்வு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் பதவி உயர்வு கேட்டு மனு அளித்தேன் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. நான் மீண்டும் பதவி உயர்வு கோர வழிவகை உள்ளதா எனக்கு உதவவும் எனது பெயர் பாலவிஜயன் அலைபேசி எண் 9842065016

    1. திருமிகு.பால விஜயன், உங்கள் துறை என்ன என்பதுகுறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. தங்களது விபரங்களை விரிவாகக் கூறினால் உரிய வல்லுநர்களிடம் கேட்டு விடையளிக்க இயலும்.

  4. நான் அரசு பணியாளர் எனக்கு என் தந்தை வீட்டு மனை வாங்கி தர இருக்கிறார் இதற்கு அனுமதி பெற வேண்டுமா யாரிடம் அனுமதி பெற வேண்டும்

    1. நீங்கள் மாநில அரசு ஊழியரா, மத்திய அரசு ஊழியரா என்பது தெரிவிக்கப்படவில்லை. எனினும் மாநில அரசு ஊழியர் என்றே கருதி இப்பதில் தங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்கள் தந்தையார் உங்களுக்கு வாங்கித்தரும் மனை குறித்த தகவலை உங்கள் துறைத்தலைவருக்குத் (பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர்) தெரிவிக்க வேண்டும். இது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்கீழ் கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஒன்று ஆகும்.

    1. We are sorry to say that you cannot do business if you are employed under Tamilnadu State Government rules and regulations. But, you can encourage your life partner or family member to start the business. You can support them.

  5. நான் காவல் துறையில் பணியில் உள்ளேன் எனது மனைவி பெயரில் வாகனம் வாங்கி தொழில் செய்யலாமா

    1. முனைவு

      நீங்கள் தாராளமாக உங்கள் மனைவி பெயரில் வாகனம் வாங்கித்தொழில் செய்யலாம். தற்போது அரசு ஊழியர் நடத்தை விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குடும்ப உறுப்பினர்கள்பெயரில் சொத்து வாங்க இனி துறைத்தலைவரின் அனுமதியும் தேவையில்லை. இருப்பினும் அமைச்சுப் பணியாளர்களிடம் விசாரித்துவிட்டு, தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பியுங்கள். நெஞ்சை நிமிர்த்தி, நேர்மையாகத் தொழில் நடக்கட்டும். தொழில் தொடர்பான எந்த ஆவணத்திலும் உங்கள் கையெழுத்து இருக்கக்கூடாது (கூட்டுத்தொழில் ஆவணம், உரிமங்கள், தடையின்மைச் சான்றிதழ், வாகனப் பதிவு முதலியவை)

  6. நானும் அரசு பணியாளர் தான்.. எனக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல் சம்பளம் வழங்கப்படுகிறது.. இதை வைத்து 3 வேளை சோறு திங்கலாம் முன்னேற முடியாது.. மனைவியின் பெயரில் சுய தொழில் தொடங்க போகிறேன். வெற்றியோ தோழ்வியோ அரசில் அடிமை உத்தியோகம் பார்ப்பதற்கு ஒரு முறை உழைத்து பார்க்கலாம்..

    1. முனைவு

      வருத்தம் வேண்டாம். மாத ஊதியம் பெற்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் என்று எவரும் இல்லை. எனவே, தாராளமாக உங்கள் மனைவியின் பெயரில் சுயதொழில் தொடங்கலாம். ஆனால், நம்புங்கள்… தீவிரமான உழைப்பு நிச்சயம் வெற்றிக்குத்தான் வழிவகுக்கும். அது கொடுக்கிற நம்பிக்கை, உங்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். ஒரு கட்டத்தில் தொழிலில் நல்ல வருவாய் வருகிறது, அது கூடுதலாக உங்கள் உழைப்பைக் கோருகிறது என்ற நிலையில் வேலையை விட்டுவிடலாம். இல்லாவிட்டால், உங்கள் துறையிலேயே வசதியான பிரிவுக்கு மாற முடியுமா என்று பாருங்கள். அதில் நிம்மதியான பணிச்சூழல் அமைந்தால், அதுவும் உங்கள் மனைவிக்கு உதவிகரமாகவே அமையும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளில் அண்மையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதன்படி குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சொத்து வாங்க இனி துறைத்தலைவரின் அனுமதி தேவையில்லை. எனவே, இனி எதுகுறித்தும் கவலையின்றி தொழிலைத் தொடங்குங்கள். வெற்றி உங்களுடையதுதான். ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால், முனைவைத் தொடர்பு கொள்ளுங்கள். தொழில்நுட்பக்காரணங்களால் தாமதமாக விடையளிக்கிறோம். மன்னியுங்கள்.

  7. மாரியப்பன்

    வணக்கம். நான் ஒரு அரசு அலுவத்தில் தற்காலிக பணியில் உள்ளேன் எனது தந்தையும் அதே அலுவலகத்தில் நிரந்திர பணியி்ல் பணிபாா்த்துவருகிறார் இதில் ஏதேனும் சட்ட விதிகள் உள்ளதா

    1. முனைவு

      உங்கள் தந்தை நிரந்தரப் பணி செய்யும் அலுவலகத்தில் நீங்கள் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றுவது சட்ட விரோதமன்று. ஒரே காவல் நிலையத்தில் தந்தை காவலராகவும், மகள் உயர் அலுவலராகவும் பணியாற்றும் செய்திகளை நாம் பார்க்கிறோம்தானே… நிரந்தரப்பணிக்கே அப்படியெனும்போது தற்காலிகப்பணியில் இது ஒரு பிரச்சனையே இல்லை. உங்களுக்குத் தற்காலிகப்பணியைப் பெற்ற்றுத்தர உங்கள் தந்தை முறையற்ற வகையில் உதவியிருந்தால்தான் சிக்கலே ஒழிய…மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. எந்த சஞ்சலமும் இன்றி பணியைத்தொடருங்கள். தற்காலிக ஊழியர்கள் பகுதி நேரத்தொழில் செய்யவும் தடையில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *