அலிபாபா ஜாக் மா சொல்லும் நீதி

அலிபாபா ஜாக் மா சொல்லும் நீதி

கல்வியில் உச்சம் தொட்டவர்களால்தான் தொழிலில் உச்சம் தொட முடியும் என்றில்லை. அதிகம் படிக்கும் வாய்ப்பு கிடைக்காதவர்களும்கூட (இவ்வளவு ஏன்…படிக்கிற காலத்தில் மாப்பிள்ளை பெஞ்சில் இருந்தவர்களும்) தங்களது தொழில் ஐடியாவில் மாஸ் காட்டினால் உச்சம் தொடமுடியும் என்பதற்குப் பெரிய உதாரணமாக இருக்கிறார் சீனாவைச் சேர்ந்த ஜாக் மா யுன்.

ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தின் ஜாம்பவானாகத் திகழ்கின்ற சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் இவர். இந்தத் தொழில்  37.4  பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்தினை இவருக்குத் தந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, சீனாவின் பெரிய பணக்காரர் என்கிற பெருமையும் இவருக்கு அதிகாரப்பூர்வமாகக் கிடைத்திருக்கிறது.

சீனாவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் இந்த விஸ்வரூபம் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் நம்பிக்கைப் பாடமாக இருக்கும்.

இத்தனைக்கும் படிக்கிற காலத்தில் இவர் படிப்பில் பெரிய அப்பாடக்கராக இருக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் மூன்று முறை தோல்வியடைந்து நான்காவது முறை மட்டுமே அவர் அதில் வெற்றி பெற்றார்.

அதுமட்டுமல்ல, உலகின் புகழ் பெற்ற வணிக மேலாண்மை நிறுவனமான ஹார்வர்ட் மேலாண்மைப் பள்ளியில் (HARVARD  BUSINESS  SCHOOL) சேர்ந்து படிக்கவேண்டுமென்று  ஜாக் மா யுன்னுக்கு நிறைய ஆசை.

ஆனால் ஒன்றல்ல,இரண்டல்ல…பத்து முறை அந்தப் பள்ளியில் சேர முயன்று தோற்றுப்போயிருக்கிறார் ஜாக். படிப்பைப் போலவே வேலையும் இவருக்கு சுலபமாகக் கிடைக்கவில்லை. கே.எப்.சி உட்பட பல நிறுவனங்கள் இவரை வேண்டாம் என்று நிராகரித்திருக்கின்றன.

இப்படி தொட்டது எதுவுமே ஜாக்கிற்குத் துலங்கவில்லை. இதுதான் நமது பாதை என்று அவரால் எதையும் தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் 1995-ல் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டபோதுதான் அங்கே இணையம்(INTERNET)வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டார். சீனர்கள் இந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார்.

ஊர் திரும்பியதும்  தன்னிடமிருந்த இருபதாயிரம் டாலர் பணத்தை முதலீடாகக் கொண்டு “சைனா பேஜஸ்” என்கிற பெயரில் சீன நிறுவனங்களுக்கு இணையப் பக்கங்களை உருவாக்கித் தரும் தொழிலைத் தொடங்கினார்.

நான்கு ஆண்டுகள்வரை இந்தத் தொழிலை நடத்தி வந்த இவர் அதிலேயே தேங்கி விடாமல் “அலிபாபா” என்கிற பெயரில் ஆன்லைன் சில்லரை வணிகத்தை ஆரம்பித்தார்.

இன்று உலகத்தில் இருக்கும் மிக முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த தொழில் நிறுவனங்களில்  அலிபாபா நிறுவனத்திற்கென்று தனி இடம் இருக்கிறது. இவரை தகுதியில்லை என்று ஒதுக்கிய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இன்று இவரைக் கொண்டாடுகின்றன.

“ஜாக் மா யுன்”-னிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்…காலத்திற்கேற்ற மாற்றத்தை தொழிலில் கொண்டுவந்தால் நிச்சயம் உச்சம் தொடலாம்.

-திருமாமகள்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *