சென்னை, ஏப்.24: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது அரசியல் களத்திலும் பல்வேறு துறைகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அனைவரும் அறிவர். பொறுத்துப்பார்த்த தமிழக அரசு, வேறு வழியின்றி இதனை எதிர்த்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விரிவான விசாரணைக்குப்பிறகு ஏப்.ரல் 4 அன்று உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்தது.
பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பதவி நியமனம் செய்யப்படாமல் இருந்தது. எனவே, அவற்றை நிரப்புவது, கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருப்பதை மாற்றி, முதல்வரை வேந்தராக நியமிப்பது, அரசுப்பணியாளர் தேர்வாணைய நியமனம் உள்ளிட்ட 10 பொருண்மைகள் தொடர்பான வரைவுகள் அவை. இவற்றை ரத்து செய்யாமலும், ஏற்பும் வழங்காமலும் கிடப்பிலேயே போட்டுவந்தது ஆளுநர் தரப்பு. சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றங்களிலும் முறையிட்டபிறகே இறுதியாக உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தமிழக அரசு 2023ல் தட்டியது.
pic courtesy: The wire
இவ்வழக்கின் தன்மையைப் புரிந்துகொண்டு தீவிரமாக விசாரித்த உச்ச நீதிமன்றம், 10 சட்ட வரைவுகளுக்கும் (மசோதா) தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் தந்துவிட்டது. அதன்படி 10 சட்ட முன்வரைவுகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இனி அவற்றுக்கு ஆளுநரின் ஒப்புதல் தேவையில்லை. அது மட்டுமின்றி, ஆளுநருக்குத் தனியாக அதிகாரம் ஏதுமில்லை என்றும், தமிழக அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் அவர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
காலக்கெடு
அதேபோல, தன்னிடம் வரும் சட்ட முன்வரைவுகளின்மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்கவேண்டும். குடியரசுத்தலைவருக்கு அவற்றை அனுப்ப முடிவெடுத்தால் அதனை 3 மாதங்களுக்குள் அனுப்பிவிடவேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘கிடப்பில் போடப்பட்ட மசோதா, காலாவதியானதற்குச் சமம்’ என்ற கோட்பாடு இதன்மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வரைவின்மீது எப்போதுவேண்டுமானாலும் முடிவெடுக்கலாம் என்ற ‘வானளாவிய’ அதிகாரமும் உடைக்கப்பட்டுவிட்டது.
வேந்தரான முதல்வர்
இந்த 10 சட்ட முன்வரைவுகளிலும் முக்கியமான ஒன்று என்றால், அது பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதாதான். இதற்கும் ஒப்புதல் கிடைத்திருப்பதால் தானாகவே வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் விடுவிக்கப்பட்டுவிட்டார். சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இனி தமிழக முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார். அல்லது தமிழ்நாடு அரசு யாரை நியமிக்கிறதோ, அவரே வேந்தராக ஆவார். இது, இந்தியாவுக்கே முன்மாதிரியான தீர்ப்பு எனவும், இதற்கான தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டின் வழிநின்று இந்தியா முழுக்க உள்ள அனைத்து மாநிலங்களும் (குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ) வேந்தர் பதவிகளில் ஆளுநர்களை நீக்கிவிட்டு தத்தமது முதல்வர்களையோ, மற்றவர்களையோ நியமிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அடுத்து என்ன?
ஒன்றிய-மாநில அரசுகளின் ஒத்திசைவுக்காக உருவாக்கப்பட்ட ஆளுநர் பதவிகள் அதிகாரப்போட்டி சர்ச்சையில்தான் தொடக்கம் முதலாகவே சிக்கிவருகின்றன. அதனால்தான் திராவிட இயக்கம், ‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?” என்ற முழக்கத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே கையில் எடுத்தது. அதேபோல, ஒன்றிய அரசின் அதிகாரத்தை மாநிலங்கள்மீது செலுத்தும் அதிகாரத்தை ஆளுநர் பதவிகள் கொண்டிருந்தன. அவற்றுள் ஒன்றுதான் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவிகளில் ஆளுநர்களை நியமித்து ஆளுகை செய்வது.
pic courtesy: FB page of MK Stalin
மாநில அரசைச்சேர்ந்த உயர்கல்வி அமைச்சர் இணைவேந்தராக இருந்தாலும் பல்கலைக் கழகங்களில் முழு அதிகாரம், வேந்தரான ஆளுநருக்கே உரியது. அதனால்தான் தமிழக அரசுக்கு தொடர்பே இல்லாமல் பல ஆய்வுக்கூட்டங்கள், நியமனங்கள், நிர்வாக அமைப்பு முறை செயல்பாடுகளை ஆளுநர் தரப்பு தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்துவந்தது. தற்போது அதற்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இனி, மாநில அரசே பல்கலைக்கழகங்களை ஆளுகை செய்யும் என்கிறபோது ஒற்றைத்தலைமையின்கீழ் அவை இயங்கும். இது பல்கலைக்கழகங்களுக்கு நிம்மதிப்பெருமூச்சைத்தரும்.
முற்போக்கான உரையாடல்கள்
இன்று பல்வேறு பல்கலைக்கழகப் பாடநூல்களை எடுத்துப் பார்க்கும்போது பகீரென்று இருக்கிறது. ஏகப்பட்ட எழுத்துப்பிழைகள், கருத்துப்பிழைகள், பிற்போக்கான கருத்துகள், அரதப்பழசான தரவுகள் என்று திகைப்பாக இருக்கிறது. இவற்றைக் களையவேண்டுமானால் சிறப்பான பாடத்திட்ட வரைவுக்குழு தேவை. முற்போக்காளர்களும் அறிவியல் பார்வை உடையோரும் மொழி அறிஞர்களும் கூட்டாக உழைக்க வேண்டும். ஒன்றிய அரசைச் சேர்ந்தவர் வேந்தராக இருப்பதுவும், பல்கலையை நடத்துபது மாநில அரசாக இருப்பதுவும் இதற்குப் பெரிதும் முட்டுக்கட்டையாக இருந்தது. இதனை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நீக்கிவிட்டது. இனி பாடத்திட்ட வடிவமைப்பு முதல் நிர்வாகம்வரை எல்லாவற்றையுமே மாநில அரசே முடிவு செய்யும். பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டமளிப்பு மன்றங்களாக இல்லாமல் பகுத்தறிவுக்கூடங்களாக உருவாகவேண்டும். முற்போக்கான உரையாடல்கள் வேண்டும்.
பரபரப்புத்திருப்பம்
இந்நிலையில் தமிழக ஆளுநர் அவர்களோ, நாளை (25 ஏப்ரல் 2025) உதகமண்டலத்தில் துணைவேந்தர் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார். வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்கப்பட்டபிறகு பல்கலைக்கழகங்களில் அவரது அதிகாரம் எத்தகையது என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது. இருப்பினும் தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கூட்டியிருக்கும் இம்மாநாட்டில் துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துகொள்கிறார். இது, அரசியல் களத்தையும் உயர்கல்வித்துறையையும் பரபரப்பாக்கியிருக்கிறது.
ஆளுநர் மாளிகை சொல்வதைக்கேட்பதா, உச்சநீதிமன்றத்தீர்ப்புக்குக் கீழ்படிவதா, மாநில அரசு சொல்வதைக்கேட்பதா என்று துணைவேந்தர்கள் குழம்பிப்போயிருக்கின்றனர். இதற்கான தீர்வை தமிழக அரசுதான் வழங்கவேண்டும். நாட்டிலேயே அதிகமான உயர்கல்வி மாணவர்களை உருவாக்கும் தமிழகம், இப்பிரச்சனையால் தடுமாற நாம் அனுமதிக்கலாகாது. உடனடியாக இதனைத் தீர்க்கும் செயல்பாட்டில் இறங்கியாகவேண்டும்.