நொடிப்பு நிலைக்கும் (திவால்) படிப்பு இருக்கு!

நொடிப்பு நிலைக்கும் (திவால்) படிப்பு இருக்கு!

தனி மனிதரோ, ஒரு நிறுவனமோ கடனில் மூழ்கிவிட்டால் நாம் என்ன சொல்வோம்? ‘அவர் நொடித்துப்போய்விட்டார்’ என்போம். ‘அந்நிறுவனம் திவாலாகிவிட்டது’ என்போம். ஒருவருடையை சொத்துகளை விற்றால்கூட கடன்களை அடைக்க முடியாது என்ற நிலையைத்தான் அவ்வாறு சொல்வோம். உடனே அவர் என்ன செய்வார்? தான் திவாலாகிவிட்டதாக அறிவிக்கும்படி நீதிமன்றத்தை நாடுவார். அதை ஆங்கிலத்தில்  Insolvency Petition  என்று சொல்வோம். அதாவது ‘ஐ.பி’ கொடுப்பது…மக்கள் மொழியில் சொல்வதாக இருந்தால் ‘மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது’.

இவ்வாறு நொடிப்பு நிலை அடைந்துவிட்டதாக நீதிமன்றம் ஒருவரை அறிவித்துவிட்டது என்று வையுங்கள், அவரிடம் கடன்களை எவரும் வசூலிக்கவே  முடியாது அதாவது, அவரைத் துன்புறுத்தமுடியாது. அவர் பொருளாதாரத்தில் உயர்ந்துவிட்டால் நொடிப்பு நிலையிலிருந்து வெளிவந்ததாக உத்தரவு பெற்றுக்கொள்ள முடியும். நொடிப்பு நிலை காலத்தில் அவர் சட்டப்படியான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் தகுதியை அவர் இழந்துவிடுகிறார் என்பது முக்கியம்.

இந்த நொடிப்பு நிலை குறித்துப் பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பாகத் தனியாகப் படிப்புகளும் இருந்ததில்லை. இந்தக் குறையைப் போக்குகிறது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்ப்பரேட் அஃபேர்ஸ் என்ற மத்திய அரசு கல்வி நிறுவனம். மத்திய நிறுவன விவகார அமைச்சகத்தின்கீழ் குர்கானில் இயங்கும் இக்கல்வி நிறுவனம், பல்வேறு நல்ல படிப்புகளை வழங்கிவருகிறது.

இந்நிறுவனம், தற்போது ‘நொடிப்பு நிலை தொடர்பான பட்ட மேற்படிப்பை’ ( post graduate insolvency Programme) அவ்வமைப்பு வழங்குகிறது.  முழு நேரப்படிப்பான இதில்சேருபவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பட்டயக் கணக்காயர்கள், நிறுமச் செயலர்கள், அடக்க விலைக் கணக்காளர்கள், பொறியாளர்கள், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் (பொருளியல், நிதி, வணிகவியல், மேலாண்மை, நொடிப்பு நிலை ஆகிய பாடங்களில்) இப்படிப்பில் சேரலாம்.

இதில் சேருவதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. மே 5, 2025 வரை பதிவு செய்துகொள்ளலாம். இப்படிப்பில் சேர ஜிப்செட் எனப்படும் நுழைவுத்தேர்வு உண்டு. அத்தேர்வு மே 25 அன்று நடைபெறும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூலை 1, 2025 அன்று வகுப்புகள் தொடங்கும்.

கூடுதல் தகவல்களை www.iica.nic.in/pgip என்ற இணையதளத்தில் காணலாம்.

-கா.சு.துரையரசு.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *