சென்னை, நவ.14: மாறுபட்ட யோசனைகளைக்கொண்ட தனி நபர்களின் வணிகத்திட்டங்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களை ஏஞ்செல் முதலீட்டாளர்கள் என்று சொல்கிறோம். அவ்வாறு முதலீடு செய்யும்போது மிகக்கறாரான விதிமுறைகளை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி விதிக்கிறது. இதனால், நல்ல தொழில் யோசனைகளுக்கு முதலீடு கிடைப்பது தடைபடுகிறது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சியில் செபி ஈடுபட்டுவருகிறது.

அந்த வகையில் இந்து கூட்டுக்குடும்பம், தனி நபர் வணிகர்கள், குடும்ப அறக்கட்டளைகளும் ஏஞ்செல் முதலீட்டாளர்களாக அனுமதிக்கப்படும் வகையில் விதிகள் திருத்தப்பட இருக்கின்றன. அதேபோல, அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குறித்து மூன்றாமவர் சான்றிதழும் கட்டாயமாக்கப்படவிருக்கிறது.
தற்போது ஒரு நிறுவனம், ஒரு புதிய தொழில் முனைவோரின் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக இருந்தால் குறைந்த பட்சம் ரூ.25 லட்சத்தையாவது முதலீடு செய்யவேண்டும். தற்போதைய முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டால் குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்தைக்கூட முதலீடு செய்ய முடியும். அதேபோல அதிகபட்ச முதலீடாக ரூ.25 கோடியை ஒரு ஏஞ்சல் முதலீட்டாளர் முதலீடுசெய்யலாம். தற்போது இந்த அதிக பட்ச வரம்பு, ரூ.10 கோடியாக இருக்கிறது.
புதிய தொழில் முனைவோரின் திட்டங்களில் முதலீடுகளை ஈர்க்க ஏஞ்செல் முதலீட்டு விதிகளை எளிமையாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏஞ்செல் முத்லீட்டு வரி நீக்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
(Image by Mohamed Hassan from Pixabay)





