‘ஒரு குடும்பம், ஒரு தொழில் முனைவோர்’ ஆந்திரம் அதிரடி!

‘ஒரு குடும்பம், ஒரு தொழில் முனைவோர்’ ஆந்திரம் அதிரடி!

நாட்டிலேயே முதன்முறையாக ‘ஒரு குடும்பம், ஒரு தொழில்முனைவோர்’ என்ற திட்டத்தை ஆந்திரப்பிரதேசம் தொடங்கியிருக்கிறது. அம் மாநில முதல்வர் திரு. என். சந்திரபாபு நாயுடு இத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். இதனை நடைமுறைக்குக் கொண்டுவர குடும்ப வாரியாக விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. 

ஆந்திர மாநிலத்தில், வறுமையில் வாடும் 1.4 கோடி குடும்பங்களில்  தொழில்முனைவோரை உருவாக்குவதன் மூலம், குறிப்பாக கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக வலுவடைய செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 5.32 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட ஆந்திர மாநிலத்தில் 1.4 கோடி குடும்பங்கள் வாழ்கின்றன. அதில் 12.6 லட்சம் குடும்பங்கள் வறுமையில் உள்ளன. 3.35 கோடி கிராமப்புற மக்கள் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

மாநிலத்தில் வறுமையைக் குறைப்பது, பொருளாதார வலுவடைய செய்வது, பல்வேறு துறையில் தொழில்முனைவோரை மேம்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்வதற்கு வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வேலையின்மை விகிதத்தை குறைப்பது இத்திட்டத்தின் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். மாநிலத்தில் தற்போது 15.6 லட்சத்துக்கும் மேல் வேலை தேடும் இளைஞர்கள் இருக்கின்றனர். இவர்களில் 9 லட்சம் இளைஞர்கள் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள்.

உடல் நலம், கல்வி, திறன் மேம்பாடு வேலை வாய்ப்பு உருவாக்குவது ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் துடிப்பான ஆரோக்கியமான, மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த திட்டம். 

இந்த முயற்சியில் மிக குறிப்பிடத்தக்கது – கிராமப்புற பெண்களுக்கான ஒருங்கிணைந்த கடன் உள்கட்டமைப்பை (ULI – Unified Loan Structure ) உருவாக்குவதே ஆகும்.

இந்த அமைப்பு ஆதார் இணைக்கப்பட்ட மெய்நிகர் (virtual) கடன் அட்டைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு முறையான கடன்கள் மற்றும் குழு அடிப்படையிலான கடன்களைப் பெற உதவுகிறது.   

இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள், பெண்கள் , பழங்குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வெகுவாக பயனடைவார்கள். இந்த முயற்சி ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார சூழலை மாற்றுவதற்கும், தொழில்முனைவு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பெரும் உதவியாக இருக்கும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(படம்: நன்றி: ஆந்திர முதல்வரின் முகநூல் பக்கம்)

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *