கடந்த வாரம் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெட்க்ட்ரிக், முதன்முதலாகப் பங்குச்சந்தையில் இறங்கியது. பங்குச்சந்தை 2000 புள்ளிகளுக்கு மேல் இறங்கிய சூழலில் இப்புதிய பங்கு வெளியீட்டுக்கு எத்தகைய எதிர்பார்ப்பு இருக்குமோ என்ற ஐயம் பலருக்கும் ஏற்பட்டது.
கொஞ்சம் பொறுத்திருந்து வெளிச்சந்தையில் அப்பங்குகளை வாங்கிக்கொண்டால் என்ன என்று சில்லரை முதலீட்டாலர்கள் யோசித்துக்கொண்டிருந்தனர். ’இனி வரும் காலம் புதுப்பிக்கத்தக்க எரியாற்றலுக்குத்தான். எனவே, தைரியமாக அப்பங்குகளை வாங்கலாம்’ என்று இன்னொரு தரப்பு முடிவெடுத்தது.
இரண்டாவது தரப்புக்கு நேற்று இன்ப அதிர்ச்சி. பங்கு வெளியீட்டின்போது ஓலா எலெட்க்ட்ரிக் பங்கின் விலை ரூ.76 ஆகியிருந்தது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளான நேற்று, அப்பங்கின் விலை தொடக்கத்தில் சுணக்கம் காட்டினாலும் விறுவிறுவென ஏறி 20% உயரத்தைச் சந்தித்தது. இறுதியில் ரூ.91.20 என்ற நிலையை அடைந்தது.
பங்கு வெளியீட்டின் கடைசிநாளன்று முதலீடு செய்திருந்தால்கூட ஒரே நாளில் கணிசமான லாபத்தைப் பார்த்திருக்கலாம் என்று அங்கலாய்க்கிறார்கள் கோட்டை விட்டவர்கள்.
இருப்பினும் அந்நிறுவனத்தின் தொடர் நட்டம், சந்தைப் போக்கு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்கும் முதலீட்டுப் புலிகளின் வாதத்தையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். நீண்ட கால முதலீட்டுக்கு இது உகந்த பங்கா என்ற கோணத்தில் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
–அருண்மொழி
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை இடர்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்பாக தீர விசாரித்து, ஆலோசித்து, உரிய வல்லுநர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது).