வடகிழக்குப் பருவ மழை: மக்களே, பத்திரம்!

வடகிழக்குப் பருவ மழை: மக்களே, பத்திரம்!

வடகிழக்குப்பருவமழை நேற்று தொடங்கியதிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. அதிகபட்சமாக பெரம்பூரில் மட்டும் 15 செ.மீ மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் 22 மாவட்டங்களில் (மேற்கண்ட 4 மாவட்டங்கள் உட்பட) இன்று கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுஒருபுறமிருக்க, தென்மேற்குப் பருவக்காற்றால் மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தென்மேற்குப்பருவ மழை நின்றிருக்க வேண்டும். ஆனால் இன்னும் கேரளம், அதன் எல்லை மாவட்டமான கோவையில் மழை அவ்வப்போது பெய்துகொண்டிருக்கிறது. கடந்தவாரம் மதுரையிலும் நல்ல  மழை பெய்திருக்கிறது. ஆகன் மொத்தம், இது தமிழகத்தின் மழைக்காலம்தான்.

இந்த சூழலில் நமக்கும் நமது உடைமைகளுக்கும் உறைவிடத்துக்கும் பாதுகாப்பு தேவை. அதற்கு சில ஆலோசனைகள்…

*இரண்டு நாட்களுக்கும் மேலாக வீட்டைச்சுற்றி மழைவெள்ள நீர் தேங்கிச் சூழ்ந்திருக்கிறதா? அது வீட்டின் கட்டுமானத்தைப் பாதிக்கும். எனவே, உடனடியாக வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுங்கள். அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்பைத் (சென்னையாக இருந்தால் மாநகராட்சி உதவி எண்களைத்தொடர்பு கொள்ளலாம்) தொடர்பு கொள்வது நல்லது.

pic courtesy: PIxabay

*மின்சாரம் சார்ந்த விபத்துகள் நடக்கும் காலம் என்றால் அது மழைக்காலம்தான். தெருக்களில் நடந்துசெல்லும்போது துண்டாகிக்கிடக்கும் மின்சார ஒயர்கள் கிடந்தால் உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் கொடுங்கள். அவற்றின் அருகில் செல்ல முயலவேண்டாம். அதேபோல மழை விளையாட்டுக்காக துள்ளிக்குதிக்கும் பிள்ளைகளை வீட்டிலேயே இருக்கச் செய்யுங்கள்.

*’வீட்டுக்குள்தானே முடங்கிக்கிடக்கிறோம்..ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்’ என்று எண்ணி பழைய மின்சாதனங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைப் பழுதுநீக்கம் செய்யவும் களமிறங்கவேண்டாம். மழைக்காலம் முடிவடைந்தபிறகு, தொழில்முறை பழுதுநீக்க ஊழியர்களை நாடுங்கள்.

*தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முக்கியமான ஆவணங்களை நீர்புகா காகிதத்தில் சுற்றி, உயரமான இடத்தில் வைப்பது நல்லது. இருப்பினும், வீட்டிலுள்ள எல்லா ஆவனங்களையும் ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ வைத்துக்கொண்டு கூகிள் டிரைவ் போன்ற கிளவுட் சேமிப்பகங்களில் சேமித்து வைத்துக்கொள்வது ரொம்பவே நல்லது.

*வாகனங்களின் சைலன்சர்களில் நீர் புகாவண்ணம் அவற்றின் துளைகளை அடைத்து வைப்பது வாகனங்களைப் பாதுகாக்கும். அதேபோல, இஞ்சின்களை மூடிவைக்கப் பயன்படும் மூடிகளைப் பயன்படுத்தலாம்.

*இல்லப் பயன்பாட்டுப் பொருட்கள், வாகனங்கள், மின்னணு சாதனங்கள், கணிப்பொறி ஆகியவற்றின் காப்பீட்டு ஆவணங்களை எளிதில் எடுக்கும் வகையில் எல்லோருக்கும் தெரியும் இடத்தில் வையுங்கள். மின் விபத்தோ, இதர தொழில்நுட்ப பழுதுகளோ அச்சாதனங்களை முடக்கினால் உடனடியாக பழுதுநீக்கவோ, இழப்பீடு பெறவோ இயலும்.

*மழைநீர்த் தேக்கம் காரணமாக மின்சாரம் சில இடங்களில் தடைபடக்கூடும். எனவே, பவர் பேங்க் முதலிய சாதனங்களை நன்கு சார்ஜ் செய்து வைத்துக்கொள்வது நல்லது. செல்பேசி, மடிக்கணினியின் மின்சாரத்தை ‘விளையாடி’யோ அல்லது திரைப்படங்கள் பார்த்தோ, சமூக ஊடகங்களில் செலவழித்தோ விரயம் செய்துவிடவேண்டாம்.

Image by OpenClipart-Vectors from Pixabay

*மழைக்காலங்களில் வளைகளில் நீர் புகுவதால் பாம்பு, இதர ஆபத்தான விலங்குகள் வீடுகளுக்குள் தஞ்சமடைய முயலும். எனவே, அதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். விஷம் கொண்ட உயிரினங்கள் கடித்தாலோ, வளர்ப்பு விலங்குகள் கடித்தாலோ உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிடவேண்டும். விஷம் கொண்ட உயிரினங்களை அப்புறப்படுத்த தீயணைப்புத்துறையை நாடலாம்.

* பொதுவாக  உடல் நலக்குறைவு ஏதேனும் எவருக்கேனும் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை நாடுவது சாலச்சிறந்தது. சுகாதாரம், உடல் நலனைக் கருத்தில்கொண்டு வீட்டில் சூடாக சமைத்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

ம.விஜயலட்சுமி.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *