சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழ்வோருக்கு-குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு வசதி. அதுதான் குறைந்த செலவில் பொழுதுபோக்கை நுகர்வது.
உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்றான மெரினா அல்லது எலியார்ட்ஸ் எனப்படும் பெசண்ட் நகர் கடற்கரை, சிற்பக்கலையின் நட்சத்திரமாக மின்னும் மாமல்லபுரத்தின் கடற்கரை போன்ற இடங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும். புதுச்சேரி மக்களுக்கும் இந்த வசதி உண்டு.
கேரள கிராமங்கள், நகரங்கள் இயற்கையாகவே இயற்கை எழில் மிகுந்தவை. எனவே படகு சவாரி, மீன்பிடித்தல், கடற்கரை சார்ந்த விளையாட்டுகள், திறந்தவெளி விளையாட்டுகள் என்று பொழுதைப் போக்கலாம். பூங்காக்கள் நகரமான பெங்களூருவிலும் மக்கள் இளைப்பாற, ஓய்வெடுக்க, குழந்தைகள் விளையாட அப்பூங்காக்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால், கோவை, மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் ஆறு, கடற்கரை, பெரிய அளவிலான விளையாட்டு வசதிகள் இல்லை. எனவே, குடும்பத்துடன் பொழுதுபோக்கக் கிடைக்கும் வாய்ப்புகளை இந்நகரவாசிகள் தவறவிடுவதில்லை.
அவ்வகையில் மாமதுரை – 2024 என்ற பெயரில் மதுரையில் மூன்று நாட்கள் தொழில் கண்காட்சியும் உணவுத்திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., யங் இந்தியன், மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி ஆகிய அமைப்புகள் கூட்டாக இதனை ஏற்பாடு செய்திருந்தன. 8 ஆம் தேதிமுதல் 11 ஆம் தேதிவரை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தடபுடல் வரவேற்பைக் கொடுத்தனர் மதுரை மக்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், சூரியன் பண்பலையின் கச்சேரி நிகழ்வு என்று களைகட்டியது நிகழ்ச்சி. தொழில் கண்காட்சியில் பல்வேறு நுகர்பொருள் விற்பனையாளர்கள் அரங்குகளை அமைத்திருந்தனர். அங்கும் ஏகப்பட்ட கூட்டம்.
மூன்றாம் பாலினத்தவரைப்பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக அவர்களின் வாழ்வியலைக்குறித்த நூல்களின் அரங்கை பிரியா பாபு ஏற்பாடு செய்திருந்தது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
அடிப்படையில் மதுரை, உணவைக் கொண்டாடும் ஊர் என்பதாலோ என்னவோ, எங்கு திரும்பினாலும் பிரியாணி கடைகள், தந்தூரி கடைகள், உணவகங்கள் என்று திரும்பிய திசையெல்லாம் மணம். கூட்டம். இதுபோல உணவுத்திருவிழாக்கள் வேறெங்கும் அண்மையில் நடந்ததில்லை எனலாம்.
நிறைவு நாளான சனிக்கிழமையன்று கலை அலங்கார அணிவகுப்பு நடந்தது. இதனை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கிவைத்தார். மூன்று நாள் நிகழ்ச்சியில் மதுரையின் மணிமகுடமாகத்திகழும் பிரபலங்கள் (பட்டிமன்றம் ராஜா உட்பட) கெளரவிக்கப்பட்டனர்.
ஆக மொத்தத்தில் அறிவுக்கும் பொழுதுபோக்குக்கும் நல்ல விருந்தாக அமைந்திருந்தது மாமதுரை திருவிழா.
’அதெல்லாம் சரி, தொழில் முனைவோருக்கு இதில் என்ன செய்தி இருக்கிறது?’ என்கிறீர்களா?
ஏன் இல்லாமல்? ஏராளமாக இருக்கிறது. இதோ, பிடியுங்கள்!
*பொழுதுபோக்குத்துறை சார்ந்து செலவிட மதுரை மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, குழந்தைகள் மற்றும் பெரியோருக்கான நியாயமான கட்டணத்தில் பொழுதுபோக்குப் பூங்காக்கள், அரங்குகள், அவை சார்ந்த தொழில்களுக்கு நல்ல வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.
*இளம் திறமையாளர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கும் தன்மையுடன்தான் இருப்பார்கள். அவர்களை வெளிச்சத்துக்குள் கொண்டுவரும் ஒரு மேடையை நீங்கள் உருவாக்கலாம். ஸ்டாண்ட் அப் காமெடி, ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், நிகழ்த்துகலைஞர்களுக்கான பெரிய மேடை (களம்) மதுரையில் இல்லை. நீங்கள் ஏன் அதை ஒரு தொழிலாகக் கொள்ளக்கூடாது.
*இன்றைக்கும் மதுரை, உணவின் தலைநகர்தான். திண்டுக்கல் பாணி பிரியாணி அங்கு பிரபலமாக இருக்கிறது. நீங்கள் ஏன் கேரள, பாஸ்மதி பிரியாணி கடைகளை சிறிய அளவில் முயற்சி செய்யக்கூடாது? பிடித்திருந்தால் உங்களை விடவே மாட்டார்கள் பாசக்கார மதுரை மக்கள்.
*மதுரையில் நிறைய யூ டியூபர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஸ்டுடியோக்கள் போதுமான அளவுக்கு இல்லை. நீங்கள் சுமார் ரூ.2-3 லட்சம் செலவில் யூ டியூபர்களுக்கான ஸ்டுடியோவை அமைத்து வாடகைக்கு விடலாம். வீடியோ எடிட்டிங், சமூக ஊடக சந்தைப்படுத்தலுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஒரு நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்தபோதே என்னால் இவ்வளவு வாய்ப்புகளைக் கண்டறிய முடிந்திருக்கிறது. தொடர்ச்சியாக மதுரையின்மீது கண்வைத்தால் நீங்களும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்து கலக்கலாம் இல்லையா!
-அருண்மொழி.