‘கூட்டுறவு’ செயலி அறிமுகம்!

‘கூட்டுறவு’ செயலி அறிமுகம்!

கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவைகளைப் பொது மக்களும் சங்க உறுப்பினர்களும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில்  ’கூட்டுறவு’ (Kooturavu) என்ற செயலியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அண்மையில் துவக்கி வைத்திருக்கிறார்.

இதன் மூலன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் வழியாக வழங்கப்படும் பல்வேறு வகையான கடனுதவிகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். அதுபோல, பொது மக்கள் தங்கள் கடன் தேவைகளுக்கு ஏற்ப இணையம்மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கவும் இதில் வசதிகள் உள்ளன.

இந்த கைபேசி செயலி வழியே கடன் பெறலாம் என்றாலும், நகைக் கடன் பெற நேரில் செல்லத்தான் வேண்டும். தற்போது கூட்டுறவு வங்கிகள் வாயிலாகக் கல்விக் கடன் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

பயிர்க்கடன், மீன் வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு முதலிய கடன்களைப் பெற இந்த செயலியின் ‘கடன் விண்ணப்பம்’ என்ற பகுதிக்குள் சென்று உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் அமைந்துள்ள விவரங்கள் இந்த செயலியின் தொகுப்பில் உள்ள  ‘உங்கள் சங்கம்’ என்ற பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் வேளாண் சேவை மையங்கள் பற்றிய விவரங்களையும், வேளாண் பொறியியல் இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதற்காக இயந்திரங்களின் இருப்பு நிலையையும் ‘இ -வாடகை ‘ பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

‘வங்கிச் சேவை’ பகுதியில் ஒவ்வொரு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தொடர்பு முகவரி, தொலைபேசி எண்கள்,  மின்னஞ்சல் போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமல்லாது கூட்டுறவு வங்கி வழங்கிய அனைத்து வகையான கடன்களைப் பற்றிய விவரங்கள், உயரிய கடன் தொகை, திருப்பி செலுத்த வேண்டிய கால அளவு, வட்டி வீதம், கடன் வாங்கிய நோக்கம் போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விவரத்தை ‘பணியாளர் நாள்’ என்ற பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

‘இ சேவை’ என்ற பகுதியில் பொதுமக்கள் அவர்களது மாவட்டம், வட்டம், கிராமம் போன்றவற்றைத் தெரிவு செய்து,  கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் பொதுசேவை மையங்கள் குறித்த முழு விவரங்களைத்  தெரிந்துகொண்டு பயன்பெறலாம்.

‘மருந்தகம்’ என்ற பகுதியைச் சொடுக்கி பொதுமக்கள் அவர்களது பகுதியில் உள்ள கூட்டுறவு மருந்தகங்களைத் தெரிந்துகொண்டு 20% தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை வாங்கிப் பயன் பெறலாம். தற்போது தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் மற்றும் தொழில்முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளன. இந்த மருந்தகங்களுக்கு ரூ. 3 லட்சம் மானியமும் வழங்கப்பட உள்ளது.

இந்த செயலியில் ‘கிடங்கு’ என்ற பகுதியும் உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களால் பல மெட்ரிக் டன் அளவுகளில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. கிடங்கு மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாய உறுப்பினர்களுக்கு தங்களது விளைபொருட்களைப் பத்திரமாக வைக்கவும், அவற்றின்மீது தானிய ஈட்டுக் கடன் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதுபோல், ‘நியாயவிலைக் கடை’ என்பதை சொடுக்கினால் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.  ப்ளே ஸ்டோர் வாயிலாக இந்த செயலியைக் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.

(படம்:  巻(Maki) from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *