இந்தியாவின் ‛சிலிக்கான் பள்ளத்தாக்கு’ என்று கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப உலகம் தற்போது கொதிநிலையில் இருக்கிறது.
காரணம்?
கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனப் பணியாளர்களின் தினசரி வேலை நேரத்தை என்று 14 மணி நேரமாக அதிகரிக்க இருப்பதாக வெளியான தகவல்தான்.
இதனையடுத்து அம்மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைத்துறை ஊழியர் சங்கம் (கே.ஐ.டி.யு) ஜூலை 18 அன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசிடம், இம்முடிவைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டது.
இத்துறையில் வேலை நேரத்தை உயர்த்துவது தொடர்பாக தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட், இதர துறைகளின் அலுவலர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதை அடுத்து, KITU அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் நிலவரத்தை அறிய முனைவு, KITU தொழிற்சங்கத்தின் செயலாளர் திரு சூரஜ் நிடிங்கா அவர்களுடன் அலைபேசி வாயிலாக உரையாடியது. அதிலிருந்து…
முனைவு: எதற்காக KITU அரசின் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது?
சூரஜ் நிடிங்கா: ஐடி ஊழியர்களின் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேலாகவும், காலாண்டுக்கு 125 மணிநேரம் வரை கூடுதலாகவும் நீட்டிக்க கர்நாடக அரசு முன்மொழிந்திருக்கிறது. நாலெட்ஜ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி(KCCI) நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் ஐடி ஊழியர்கள் வாரத்துக்கு 52.5 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
மற்ற நாடுகளில் ஏற்கனவே வாரத்துக்கு 36 முதல் 40 மணிநேரம் மட்டும் தான் வேலை செய்கிறார்கள். எனவே, தற்போதைய தொழிலாளர் சட்டங்களுக்கு அப்பாலும் பணிபுரியும்படி ஐடி ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது.
முனைவு: KITU யின் அறிக்கை என்ன சொல்கிறது?
சூரஜ் நிடிங்கா: கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் கர்நாடக மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள்( Karnataka State Shops and Companies Act) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது தினசரி வேலை நேரத்தை 9 மற்றும் வாரந்தோறும் 48 மணிநேரம் என்று வரையறுக்கிறது. கடை மற்றும் வணிக நிறுவனங்கள் எந்த ஒரு ஊழியரையும் தினமும் 10 மணிநேரத்துக்குமேல் அல்லது காலாண்டில் 50 மணிநேரத்துக்கு மேல் மிகை நேரம் ( ஓவர் டைம்) செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், சில விதிவிலக்குகள் ஐடி நிறுவனங்களால் கோரப்படுகின்றன.
ஜூலை 18 அன்று தொழிலாளர் அமைச்சர் கூட்டிய கூட்டத்தின் அறிக்கை, நாலெட்ஜ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (KCCI) அறிக்கை மற்றும் உலக சுகாதார அமைப்பு – சர்வதேச தொழிலாளர் அமைப்பு (WHO-ILO) இன் அறிக்கையின் அடிப்படையில் KITU தனது அறிக்கையை வெளியிட்டது. இது வாரத்துக்கு 55 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்யும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுள் 55% பேர் பக்கவாதம், இதய நோய்களுக்குஆளாகும் வாய்ப்பும் 17% பேர் இறக்கும் அபாயம் உள்ளது என்று கூறுகிறது.
ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவன (நிலை ஆணைகள்) சட்டத்தை பின்பற்றுவதில்லை. ஐடி ஊழியர்களின் சுமையை மேலும் அதிகரிக்க கர்நாடக அரசை அவர்கள் வற்புறுத்துகிறார்கள், தொழில் தகராறு சட்டம் 1946 ஐ மீறி அவர்களை சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யவும் துணிகிறார்கள்.
ஐடி ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் லாப வெறி கொண்ட முதலாளிகளுக்காக நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் வளைக்கப்படலாகாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் கென்யா போன்ற நாடுகள் ஐடி ஊழியர்களுக்கு பணியின்போது அவ்வப்போது சற்று இடைவெளி எடுத்துக்கொள்ள உரிமையைஅங்குள்ள சட்டங்களை வழங்கியுள்ளன. அதனை இங்கும் கடைபிடிக்க வேண்டுமென்று கோருகிறோம்.
முனைவு: இச்சட்டத்திருத்தத்தின்மூலம் ஐடி ஊழியர்கள் எப்படி பாதிப்புக்கு உள்ளாவார்கள் ?
சூரஜ் நிடிங்கா: 12 மணிநேரம் அலுவலகங்களில் வேலை செய்வதும், பெங்களூரின் கடுமையான போக்குவரத்து சூழ்நிலையில் மூன்று முதல் நான்கு மணி நேரம் பயணம் செய்து பணிக்குச் செல்வது, (குறிப்பாக பெண் தொழிலாளர்களுக்கு) சாத்தியமற்றது. 30 தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்துத் துறை நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்கள் உள்ளன.
ஆனால் ஐடி நிறுவனங்கள் மட்டும் அத்தகைய (crech) காப்பகங்களை நடத்துவதில்லை. இது ஒருபுறமிருக்க, குழந்தை பிறந்த பிறகு கணிசமான எண்ணிக்கையிலான பெண் ஊழியர்கள் வேலையைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
முதலாளிகளின் கோரிக்கைகளால், குடும்பத்துடன் செலவு செய்யும் நேரக்குறைவால் ஐடி ஊழியர்களின் குடும்ப வாழ்க்கையும் ஆபத்தில் உள்ளது.
முனைவு: இந்நிலையில் உங்கள் சங்கத்தின் அடுத்த கட்ட நிலைப்பாடு என்ன?
சூரஜ் நிடிங்கா: IT/ITES/BPO துறையில் வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் போராட வேண்டும் என்று கர்நாடக மாநில IT/ITeS ஊழியர் சங்கம் (KITU) அழைப்பு விடுத்துள்ளது.
14 மணி நேர வேலைக்கு வழிசெய்யும் வகையில் கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு தொழில்துறை, தொழிலாளர் துறைகளால் கூட்டாக நடத்தப்பட்ட கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் எஸ் லாட், தொழிலாளர் துறை மற்றும் ஐடி-பிடி அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர். IT/ITeS துறையில் உள்ள ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கர்நாடக மாநில IT/ITeS ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுஹாஸ் அடிகா, தலைவர் VJK மற்றும் செயலாளராக நானும் ( சூரஜ் நிடியங்கா) இக்கூட்டத்தில் கலந்து கொண்டோம்.
KITU பிரதிநிதிகள் முன்மொழிந்த திருத்தத்திற்கு ஐடி அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பை வலுவாக எழுப்பினர், இது எந்தவொரு தொழிலாளியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கான அடிப்படை உரிமையின் மீதான தாக்குதலாகவே KITU பார்க்கிறது. இதற்குப் பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட் , எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு இன்னும் ஒரு சுற்று விவாதம் நடத்தப்படும் என்றார்.
கூட்டத்தின் போது KITU, ஐடி ஊழியர்களிடையே நீட்டிக்கப்பட்ட வேலை நேரத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை சுட்டிக்காட்டியது. KCCI இன் அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளையும், 55% பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். வேலை நேரத்தை அதிகரிப்பது இந்த நிலையை மேலும் மோசமாக்கும். WHO-ILO ஆய்வின்படி, வேலை நேரம் அதிகரிப்பதன்விளைவாக, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35% அதிகரிப்பதாகவும் இஸ்கிமிக்( ischemic) இதய நோயால் ஊழியர்கள் இறக்கும் ஆபத்து 17% அதிகமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்கும் முயற்சியில் கர்நாடக அரசு, எந்தவொரு தனிநபரின் மிக அடிப்படை உரிமையான வாழும் உரிமையை முற்றிலும் புறக்கணிக்க கூடாது என்பது தான் KITUவின் நிலைப்பாடு .
வேலை நேரத்தை 14 மணி நேரமாக உயர்த்தும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக பெங்களூரு முழுவதும் கேட் மீட்டிங் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கத்தின் (கேஐடியு) பதாகையின் கீழ் ஐடி துறை ஊழியர்கள் தங்கள் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
மேலும், அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிராக மின்னஞ்சல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறோம் . அனைத்து IT/ITES/BPO ஊழியர்களையும், நீட்டிக்கப்பட்ட வேலை நேரத்தால் பாதிக்கப்படும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களையும் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு KITU கேட்டுக்கொள்கிறது.
-ஸ்ரீஜா ராதாகிருஷ்ணன்.