சென்னை, மார்ச் 6: அறிவியலில் மேற்படிப்பு படிக்க விரும்புவோருக்கு ஏற்ற கல்வி நிறுவனங்கள் இல்லாமல் ஒரு நிலை இருந்தது. தற்போது ஒன்ரிய அரசின் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் எஜுகேஷன் கல்வி நிறுவனங்கள் அக்குறையைப் போக்குகின்றன. அவற்றுக்கான சேர்க்கை அறிவிப்பு வந்திருக்கிறது. பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொஹாலி, புனே, திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள இந்நிறுவனங்களில் படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டு பி.எஸ்.எம்.எஸ் (இரட்டைப்பட்டம்), 4 ஆண்டு பி.டெக் மற்றும் பி.எஸ் படிப்புகள், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்புகளில் சேர முடியும். ஐ.ஐ.எஸ்.இ.ஆர் ஆப்டிடியூட் டெஸ்ட் (ஐஏடி) எனும் நுழைவுத்தேர்வின்மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் தகவல்களை www.iiseradmission.in என்ற இணையதளத்தில் பெறலாம். மார்ச் 10 ஆம் தேதி தேர்வுக்கான இணையதளம் திறக்கப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 15 ஆகும். ஐ.ஏ.டி தேர்வு மே 25, 2025 அன்று நடக்கவுள்ளது.
இதைப்படிக்கும் வாசகர்களுக்கு ஒரு ஐயம் எழக்கூடும். பெங்களூருவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் என்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஒன்று இருக்கிறதே…அது என்ன என்று… உண்மைதான். ஐஐடி-களுக்கு இணையான கல்வி நிறுவனம் அது. ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்ட அந்நிறுவனம் இப்போது ஒரு பல்கலைக்கழகமாகவே உயர்ந்துவிட்டது. அங்கும் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இளம் அறிவியல் முதல் பி.எச்.டி படிப்பு வரை அங்கு படிப்புகள் உள்ளன. https://iisc.ac.in/wp-content/uploads/2025/02/Detailed-Admissions-Notice-2025-26.pdf என்ற இணைப்பைச் சொடுக்கி கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
-அருண்மொழி.