இந்திய கார் சந்தையில் முக்கியமான பங்கை வகிப்பது ஹூண்டாய் நிறுவனம். முழுக்க முழுக்க இந்திய தயாரிப்புகளே கோலோச்சிவந்த நிலையில் தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய், மத்திய தர குடும்பங்களின் விருப்பமான கார்களைத் தயாரிக்கத் தொடங்கியது. உலக அளவில் கார் தயாரிப்பில் ஜாம்பான்கள் என்றால் அவை சீனாவும் அமெரிக்காவும்தான். இவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. இங்கு கார் வாங்க விரும்பும் நடுத்தர வர்க்கத்தினரின் சந்தை உயர்ந்துகொண்டேதான் இருக்கிறது என்பதே காரணம்.
டாடா, மாருதி நிறுவனங்களோடு போட்டிபோட்டும் தனது இருப்பை நிலைநிறுத்தியிருக்கிறது ஹூண்டாய். இன்றைக்கு இந்திய கார் சந்தையில் 15% பங்கு ஹூண்டாய் நிறுவனத்தினுடையதுதான். சென்னை இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் உற்பத்தியாகின்றன. உள்நாட்டு சந்தை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அவை ஏற்றுமதியாகின்றன.
இவ்வாறு ஒரு வலுவான இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஹூண்டாய், தனது அடுத்த கட்ட விரிவாக்கத்திட்டத்தை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் விரைய இருக்கிறது. அதற்காக மிகப்பெரும் அளவில் பங்குவெளியீட்டின்மூலம் மூலதனத்தைத் திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக அது செபி அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. அதனையடுத்து ஒப்புதல்கள் கிடைக்கப்பெற்றதாகத் தெரியவருகிறது.
ஆக, விரைவில் ’ஹூண்டாய் மோட்டார்ஸ் பங்கு வெளியீடு’ என்ற செய்தியை தலைப்புச் செய்திகளில் பார்க்கலாம். இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலேயே மிகப்பெரிய பங்கு வெளியீடாக இது இருக்கும் என்கின்றனர் துறைசார் வல்லுநர்கள். முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
(சட்டப்பூர்வ எச்சரிக்கை: பங்குச்சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும்முன்பு வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து, வழங்கு பத்திரத்தை கவனமாகப் படித்தபின் முடிவெடுங்கள்).
-தமிழ்.
(படம்: நன்றி: ஹூண்டாய் இந்தியா நிறுவனம்)