கோயம்புத்தூர், ஜூன் 5: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில் சங்கம் (கொடிசியா) இணைந்து ஒன்பதாவது ஆண்டாக நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 வருகின்ற ஜூலை பதினெட்டாம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி, இன்று(ஜூன் -3) மாலை 5 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மினி மீட்டிங் ஹாலில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவர், கோயம்பத்தூர் புத்தக திருவிழா – 2025 -க்கான இலச்சினையை (லோகோ) வெளியிட்டார்.
கோயம்பத்தூர் புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ் , துணைத் தலைவர் முத்துக்குமார், ‘கொடிசியா’தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: “மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலகத்துறை, கொடிசியா தொழில் அமைப்பு இணைந்து கோயமுத்தூர் புத்தக திருவிழா-2025 நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு புத்தக திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. 74,000-க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர். இந்த ஆண்டு கோயம்புத்தூர் புத்தக திருவிழா-2025, வரும் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது.
இந்த புத்தக கண்காட்சிக்கு அனுமதி இலவசம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த புத்தகத் திருவிழாவில் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், பிரபுல தலைவர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற உள்ளன.
இந்த புத்தக திருவிழா மூலம் புதிய தலைமுறையினரின் படைப்பாற்றலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் உண்டு. மாணவர்களும், வாசகர்களும், எழுத்தாளர்களும் கலந்து கொண்டு பயனடையும் வகையில் இவ்விழா பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளதாகவும், அது தவிர விருதுகள் மற்றும் போட்டிகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டன.
வாழ்நாள் சாதனையாளர் விருது
இந்த புத்தகத் திருவிழாவின் சிறப்பு அம்சமாக ‘கொடிசியா’ வழங்குகின்ற வாழ்நாள் சாதனையாளர் விருது அமைகிறது. இந்த விருது ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டு மடலும் கொண்டதாகும். இலக்கியம் சார்ந்து சாதனை படைத்துள்ள சான்றோர்களில் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இளம் எழுத்தாளர் விருதுகள்
வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இளம் எழுத்தாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இது கவிதை புனைவு, புனைவு சாராதவை என்று மூன்று பிரிவுகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இது விருது தொகையான ரூ.25,000/- ரூபாயும் பாராட்டு மடலும் உள்ளடக்கியதாகும். நூலை வெளியீடும் பதிப்பாளருக்கு ரூ.5,000/- வழங்கப்பட உள்ளது.
படைப்புகளை சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.06.2025
குறும்படப் போட்டி
கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகத் திருவிழாவை பிரபலப்படுத்தும் விதமாக ஒரு குறும்படப் போட்டி கீழ்க்கண்ட தலைப்புகளின்கீழ் நடைபெற உள்ளது.
*மனிதத் தன்மையை வெளிப்படுத்துதல்
*இயற்கையைக் காப்பாற்றுதல்
*முதியோர்கள் பெருமையைப் பறைசாற்றுதல்
*ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்தல்
*நன்றி மற்றும் பச்சாதாபம்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்கள் குறும்படப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்குவார்கள்.
முதல் பரிசு ரூ.25,000/, இராண்டாம் பரிசு ரூ.16,000/- மூன்றாம் பரிசு ரூ.10,000/-
குறும்படப் போட்டி சமர்ப்பிக்க கடைசி தேதி : 30.06.2025
மகளிர் தின நிகழ்வுகள்
இப்பகுதியில் உள்ள மகளிர் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 பெருமளவு பங்குபெறும் வகையின் ஒரு நாள் முழுவதும் மகளிர் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் முன்னணி பெண் சாதனையாளர்கள் பங்குபெறுகிறார்கள்.
கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்காக பல்சுவை நிகழ்ச்சிகளும், இன்னிசை, பட்டிமன்றம், இசை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளின் உரை உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இவையல்லாமல், நாள் முழுதும், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளாக கவியரங்கங்கள். பட்டிமன்றங்கள் புத்தக வெளியீடுகள் ஆகியனவும் நடைபெற உள்ளன.
அறிவுக்கேணி நிகழ்ச்சிகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் இலக்கிய நிகழ்வுகள், கவியரங்கங்கள், கதை சொல்லும் நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள் சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியனவும் நடைபெற உள்ளன. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.





