புகழ்பெற்ற கல்வி சார்ந்த தனிப்பயிற்சி நிறுவனமான பைஜூஸ், தற்போது நிதி நெருக்கடியில் தவித்து வருவது யாவரும் அறிந்ததே. அந்நிறுவனம் பெற்றுள்ள அமெரிக்க கடன்கள் அதனைக் கடுமையான சூழலுக்குத் தள்ளியிருக்கின்றன. அமெரிக்காவைச்சேர்ந்த க்ளாஸ் டிரஸ்ட் அமைப்புக்கு மட்டும் 1 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் பட்டிருக்கிறது. இது தவிர, நொடிப்பு நிலையை (insolvency) அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் ஒரு பக்கம் சூழலைக் கடுமையாக்கியிருன்றன.
ஏற்கனவே டிலாய்ட் நிறுவனம், பைஜூஸின் தணிக்கைப் பணிகளை மேற்கொண்டு வந்தது. அது, விலகிக்கொண்டதை அடுத்து பிடிஓ குளோபல் என்ற நிறுவனம் அந்த இடத்துக்கு வந்தது. ஆனால், தற்போது அந்நிறுவனமும் தணிக்கைப்பணியில் ஈடுபடப்போவதில்லை என்று சொல்லிவிட்டது.
மார்ச் 2023 -உடன் முடிவடையும் நிதியாண்டுக்கான தணிக்கைக்கு ஆவணங்களை பைஜூஸிடமிருந்து பெறுவது பெரும் சவாலாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பிவிட்டு விலகியிருக்கிறது பிடிஓ. நிறுவனத்தின் இயக்குநர்கள் போதுமான ஒத்துழைப்பு தராத சூழலில் வரித்தாக்கல், தணிக்கைப் பணிகளை மேற்கொள்வது கடினம் என்று அந்நிறுவனம் சொல்லியிருக்கிறது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தணிக்கை நிறுவனம் விலகியதை அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தொழில்துறையும் நிதித்துறை வல்லுநர்களும் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளுக்கு கணக்கு சொல்லித்தரும் நிறுவனத்தில் கணக்கு வழக்கைப் பெறுவது இவ்வளவு சிக்கலாக இருக்கலாமோ!?
-அருண்மொழி.
(படம்: நன்றி: பைஜூஸின் முகநூல் பக்கம்)