நூலின் பெயர்: வெற்றிதரும் நேர நிர்வாகம்
பொருள் : நேர நிர்வாகம்
மொழி : தமிழ் (மூலம் ஆங்கிலத்தில் வெளிவந்தது)
ஆசிரியர் : ஃப்ராங்க் அட்கின்ஸன் (தமிழில்:வெ.ராஜகோபால்)
வெளியீடு : ஜெய்கோ புக்ஸ், மும்பை.
பக்கங்கள் : 249 விலை: ரூ.214
தொழில் முனைவோருக்கு நேர நிர்வாகம் என்பது மிக மிக முக்கியமானது. ஏனென்றால், அவர்களைக் கேள்வி கேட்க யாருமே இருக்க மாட்டார்கள். மேலாளர், நிறுவன உரிமையாளர், உயர் அலுவலர், சக ஊழியர் என்று எந்தப் பிக்கல் பிடுங்கலும் கிடையாது. இது எந்த அளவுக்கு சுதந்திர உணர்வைக் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு கட்டுப்பாடற்ற தன்மையையும் கொடுக்கிறது. இதனால், நம்மை அறியாமல் ஒரு சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது. நேர நிர்வாகத்தில் ஒரு அசட்டை வந்துவிடுகிறது. ஆனால், அப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்கிறது தொழில் முனைவியல்.
நீங்களும் ஒரு தொழில் முனைவோராக ஆக விரும்பினால் நேர நிர்வாகக் கலையைக் கற்றுக்கொண்டு அதனைப் பின்பற்றியே ஆகவேண்டும். அதற்கு உதவும் ஒரு நூல்தான் ‘வெற்றி தரும் நேர நிர்வாகம்’. ஆங்கிலத்தில் ஃப்ராங்க் அட்கின்ஸன் எழுதிய இந்நூலைத் தமிழில் வெ.ராஜகோபால் மொழியாக்கம் செய்திருக்கிறார். மும்பையைச் சேர்ந்த ஜெய்கோ புக்ஸ் நிறுவனம், இதனை வெளியிட்டிருக்கிறது.
நூலின் ஆங்காங்கே வாசகருக்கான செயற் பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வெறுமனே வாசிப்பு சுகத்துக்காகப் படித்துவிட்டுக் கடந்துபோக முடியாதபடி வாசகரை உள்ளிழுக்கும் முயற்சி இது. அதேபோல சிறப்பு ஆலோசனைகள் தனித்தனியாகப் பெட்டிச் செய்திகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில சுவையான ஆலோசனைகள் இதோ:
’உங்களுக்கான இலக்குகளை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
பெரும்பாலானோர் நேரத்தைச் சேமித்துவிட்டு அதை வீணாக்கிவிடுகின்றனர். நீங்கள் உண்மையில் என்ன செய்து முடிக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படுங்கள்.
நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் நிர்வகிக்க முயலாதீர்கள். அது வேலை செய்யாது.
உங்கள் நேரத்தை நிர்வகிப்பது: பணி, குடும்பம் மற்றும் நண்பர்கள் நீங்கள்-என்று மூன்றுக்காகவும் நீங்கள் நேரத்தை நிர்வகிக்க வேண்டும்.
உங்கள் இலக்குகளை அளந்து பார்க்கும் அளவில் (measurable) இருக்கின்றனவா என்று பாருங்கள்.
உங்கள் நேர நிர்வாகப் பிரச்சனைக்கு ஒரே காரணம் நீங்கள்தான். ’
இந்நூலில் பக்கம் 59ல் உங்கள் பணிகளை எப்படி முக்கியமானவை, எவை முக்கியமற்றவை, எவற்றை எப்போது செய்ய வேண்டும் என்பதுகுறித்த அற்புதமான சூத்திரம் இருக்கிறது. அதனை உங்கள் வீட்டில்/அலுவலகத்தில் பெரிதாக எழுதித் தொங்கவிடுங்கள். நிச்சயம் பயனளிக்கும். அதேபோல, பணிகளின்போது வரும் குறுக்கீடுகளை எப்படிச் சமாளிப்பது என்ற ஆலோசனையும் ஒரு அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூட்டங்களில் நேர நிர்வாகம், உங்களுக்கான சொந்த நேரத்தை நிர்வகிப்பது எப்படி, கொண்ட நோக்கில் உறுதிப்பாட்டுடன் இருப்பது எப்படி ?-என்றெல்லாம் விரிவாக விளக்குகிறது இந்நூல்.
இந்நூலைப் படிக்கும்போது அவசியம் ஒரு நாட்குறிப்பை/குறிப்பேட்டை வைத்துக்கொள்ளுங்கள். படிக்கப் படிக்க உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள், முக்கியக் குறிப்புகளைக் குறித்துக்கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்நூலில் ஆங்காங்கே உள்ள சில மொழியாக்கப் பிழைகள், இலக்கணப்பிழைகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இது மிகவும் பயனுள்ள நூல் என்றே சொல்லலாம்.
-தூரிகை.


