சென்னை, டிச.7: சென்னை ஐஐடி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி ஊதியத்தில் வளாக நேர்காணலில் பணி கிடைத்துள்ளது. நாட்டின் முக்கியமான தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுள் முதன்மை இடம் பிடிப்பவை இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் (ஐஐடி). இங்கு படிக்க இடம் கிடைப்பதற்கே தேசிய அளவிலான போட்டித்தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெற வேண்டியிருக்கும்.
உயர்தரமான கல்வி, வெளிநாட்டுக்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஆய்வுக்கு தாராள செலவிடுவது, ஒன்றிய அரசின் நிதியுதவி, முன்னாள் மாணவர்களின் நிதியுதவி என்று பலமான பின்னணியுடன் இக்கல்வி நிறுவனங்கள் மிளிர்கின்றன. படிப்பை முடிக்கும் நிலையில் வளாக நேர்காணலில் மிக அதிக ஊதியத்துடன் புகழ்பெற்ற நிறுவனங்கள் இவற்றின் மாணவர்களை அள்ளிக்கொண்டு சென்றுவிடுகின்றன. ஒவ்வொரு முறை வளாக நேர்காணல் நடக்கும்போதும் ஊதியம் ஒரு பேசுபொருளாகிவிடும்.
அந்த வகையில் தற்போதைய வளாக நேர்காணல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆப்பிள், குவாண்ட் பாக்ஸ், மைக்ரோசாப்ட் முதலிய பல்வேறு உலகப்புகழ்பெற்ற நிறுவனங்கள் இந்நேர்காணல்களில் இடம்பெற்றிருக்கின்றன. சென்னை ஐஐடியின் நேர்காணலில் பொறியியல் மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.4.30 கோடி ஊதியத்தில் பணியை ஜேன் ஸ்ட்ரீட் என்ற பங்குச்சந்தை வர்த்தக நிறுவனம் வழங்கியிருக்கிறது. அந்நிறுவனத்தில் பணியிடைப்பயிற்சியை அம்மாணவர் ஏற்கனவே பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், ஹாங்காங்கில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையில் பணியமர்த்தப்பட இருக்கிறார். இந்த ஊதியம் ஐஐடியின் வளாக நேர்காணல் வரலாற்றிலேயே முதன்முறை ஆகும்.
சென்னை ஐஐடி தவிர மற்ற ஐஐடிகளின் வளாக நேர்காணல்களும் நடைபெற்றுவருகின்றன. கரக்பூர் ஐஐடியில் 700பேருக்கும் மேல் உயர் ஊதியத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றிருக்கின்றனர். மும்பை ஐஐடியில் முதல்நாள் நேர்காணலிலேயே 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டிருக்கின்றன.
டாவின்ஸி என்ற பங்குத்தரகு நிறுவனம் ரூ.2.2 கோடிக்கு மேல் ஊதியத்தில் மும்பை ஐஐடி மாணவருக்குப் பணிவழங்கிய செய்தியும் வெளியாகியிருக்கிறது. இவைதவிர கான்பூர், தில்லி, கவுஹாத்தி ஐஐடிகளிலும் வளாக நேர்காணல்கள் கடந்த 1 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன.
(pic courtesy: IIT Madras’ FB page)