சென்னை, டிச.6: இந்திய ராணுவ அலுவலர் (மறைந்த) மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைச் சொல்லும் ‘அமரன்’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக உலகமெங்கும் திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரும் வசூலைக்குவித்துவரும் நிலையில் வழக்கு ஒன்றில் இப்படக்குழு சிக்கிக்கொண்டுவிட்டது.
இப்படத்தின் காட்சி ஒன்றில் நாயகி சாய் பல்லவி, தனது செல்பேசி எண் என்று ஒரு எண்ணைச் சொல்வார். அந்த எண் உண்மையில் சென்னையைச்சேர்ந்த மாணவர் வாசீகன் என்பவருடையது. படம் வெற்றிபெற்றாலும் வாசீகனுக்கு புதிய தொந்தரவு வந்துவிட்டது. தினசரி நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை அவர் எதிர்கொள்ளவேண்டிவந்தது. இதனால் நொந்துபோன அவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ’அமரன்’ திரைப்படத் தயாரிப்பாளர்களான ராஜ்கமல் பிலிம்ஸுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்தார். அந்தரங்க உரிமையை மீறியமைக்காக ரூ.1.10 கோடியை நட்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரியிருந்தார்.
இதனையடுத்து இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேர்நிலையான ராஜ்கமல் நிறுவனத்தின் வழக்குரைஞர், ‘குறிப்பிட்ட காட்சியைப் படத்திலிருந்து நீக்கிவிட்டோம். புதிதாக தணிக்கைச் சான்றிதழும் பெற்றுவிட்டோம்’ என்று தெரிவித்தார். இருப்பினும் அழைப்புகள் வருவதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து, “தனியுரிமை மீறப்பட்டது உண்மைதான், இருப்பினும் நீதிப்பேராணை மனுவாக இதனைத் தாக்கல் செய்ய முடியாது. எனவே பொதுச்சட்டத்தின்கீழ்தான் நிவாரணம் கோர முடியும்” என்று கூறிய நீதிபதி, இவ்வழக்கை இம்மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
எவ்வளவோ கடும் உழைப்பைச் செலுத்தி ஒரு படைப்பை உருவாக்கும் படைப்பாளிகள் இதுபோன்ற சிறிய தவறுகளை செய்துவிடுவதால் இரு தரப்புக்கும் தேவையற்ற சங்கடங்கள் உருவாகிவிடுகின்றன. இவற்றைத்தவிர்க்க, குறித்த அடையாளங்களைத் திரைப்படங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அது எல்லோருக்குமே நல்லது.
(படம்: நன்றி: ராஜ்கம்ல் பிலிம்ஸின் எக்ஸ் பக்கம்)