வீடியோ ஆன் டிமாண்ட் என்ற துறை இவ்வளவு பெரிய வளர்ச்சியைச் சந்திக்கும் என்று பொழுதுபோக்குத்துறையைச் சார்ந்த எவருமே நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். வீடியோ கேசட், விசிஆர், விசிபி, சிடி பிளேயர், டிஷ் ஆண்டெனா, கேபிள் டிவி என்று மட்டும் இருந்த பொழுதுபோக்குத்துறையின் மிகப்பெரிய சூறாவளி வீடியோ ஆன் டிமாண்ட்-தான்.
அதாவது உங்களுக்குப் பிடித்த உள்ளடக்கத்துக்குப் பணம் செலுத்தி, பிடித்தவற்றை மட்டும் பார்க்கும் வசதி. இதுபோல ஒரு முயற்சியை இயக்குநர் சேரன் முயன்றார். ஆனால், இத்துறை மிகப்பெரிய முதலீட்டைக் கோருவது. எனவேதான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தபிறகு டைரக்ட் டூ ஹோம் (டிடிஎச்) துறை வளரத்தொடங்கியது.
இன்று நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம், சன் டிடிஎச், டிஸ்னி ஹாட் ஸ்டார் உள்ளிட்ட 57 ஓடிடி தளங்கள் இருப்பதாக மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்க்கும் செலவோடு ஒப்பிடுகையில் நல்ல லாபத்தைத் தருவது ஓடிடி வசதிதான். வேண்டும் என்கிறபோதெல்லாம் படங்கள், ஆவணப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றைப் பார்க்கும் வசதி, ஒரே சந்தாவில் குடும்பத்தில் அனைவருக்கும் திரைப்படம் பார்க்க ஏற்பாடு என்று இதில் உள்ள வசதிகளால் மக்கள் வெகுவிரைவில் ஓ.டி.டி. சந்தாதாரர் எண்ணிக்கையை உயர்த்திவிட்டனர். கடந்த ஆண்டு நிலவரப்படி 6 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது நெட்பிளிக்ஸ்.
இந்தியாவைச்சேர்ந்த நிறுவனங்கள் ஒருபக்கம் லாபத்தைக் குவித்தாலும் பனனாட்டு நிறுவனங்கள் டி.டி.எச் துறையின்மீது வெகுகாலமாகக் கண்வைத்துவருகின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகள். குறிப்பாக, நெட்பிளிக்ஸ் தொடர்ச்சியாக நல்ல வளர்ச்சி கண்டுவருகிறது. கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் ரூ.52 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டில் அது ரூ.35 கோடியாக இருந்தது.
அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2845 கோடியாக கடந்த ஆண்டில் உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டில் இது ரூ.2214 கோடியாக இருந்தது. அந்த வகையில் இது 29% வளர்ச்சி ஆகும். இன்றைய நிலையில் நாட்டின் முன்னணி ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் உருவெடுத்திருக்கிறது.
மென்மேலும் புதிய நிறுவனங்களின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் போட்டியின்காரணமாக விலைக்குறைவு, சலுகைகள் ஆகியவை வழங்கப்பட வாய்ப்புண்டு. வெறும் திரைப்படங்களோடு எந்த நிறுவனமும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. தனது சொந்த உள்ளடக்கம் (வெப் சீரிஸ், ஆவணப்படங்கள் முதலிவயவை) முதலியவற்றின்மூலமே பார்வையாளர்கள் மனங்களில் தொடர்ந்து வீற்றிருக்க முடியும்.
-ம.விஜயலட்சுமி.