கட்டுமானத்தொழிலாளர் நிதி பயன்பாடு: கேரளம் கலக்கல்

கட்டுமானத்தொழிலாளர் நிதி பயன்பாடு: கேரளம் கலக்கல்

சென்னை, அக்.31, 2024: முறைசாராத்தொழிலாளர்களின் நலனைப் பேணுவது அரசுகளுக்கு பெரிய சவாலான காரியம்தான். ஏனென்றால், எந்தத்தொழிலில் எவ்வளவு பேர் ஈடுபட்டிருக்கின்றனர் என்ற புள்ளி விபரம்கூட ஒழுங்குபடுத்தப்பட்டிருக்காது.

எனவே, அத்தகைய தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு, வேலையிடத்தில் அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு, குடும்பத்துக்கு சமூகப்பாதுகாப்பு என்று அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினமான பணியாக ஆகிவிடுகிறது. இதனைத் தவிர்க்கவே பல்வேறு வாரியங்களை மத்திய, மாநில அரசுகள் அமைத்து செயல்படுத்திவருகின்றன.

அந்த வகையில் கடந்த 1996 ஆம் ஆண்டில் கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி கட்டுமானத் தொழிலாளர் வாரியங்களை மாநிலங்கள் உருவாக்குவது கட்டாயம் ஆகும். அதனைப்பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாரியங்கள் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.

மேற்கண்ட சட்டத்தின்படி ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்ட மதிப்பீட்டில் ஒரு கட்டுமானப்பணி நடக்கிறது என்றால் அதன் மதிப்பீட்டில் 1%ஐ மேல் வரியாக வசூலித்து, அதனை வாரியத்தின் கணக்கில் வரவு வைத்துவிடவேண்டும். அவ்வாறு திரளும் தொகை, கட்டுமானத்தொழிலாளர்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் வெறும் 57% அளவுக்கே இது (ரூ.64,193 கோடி மட்டுமே) செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகம் 39% நிதியைப் பயன்படுத்தியிருக்கிறது.

இவ்விஷயத்தில் மற்ற மாநிலங்களை கேரளம் முந்திவிட்டது. அங்கு ரூ.3457 கோடி அளவுக்கு வரி வசூலிக்கப்பட்டது. அத்தொகையை முழுவதுமாகத் தொழிலாளர் நலனுக்காக அம்மாநில அரசு செலவிட்டுவிட்டது. அதாவது நாட்டிலேயே முதல் இடம் கேரளத்துக்கு. இரண்டாவது, மூன்றாவது இடம் ஒடிஸா மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட மாநிலமாக கேரளம் தொடர்ந்து தன்னை நிரூபித்துவருகிறது. மற்ற மாநிலங்களுக்கும் அது ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துவருகிறது.

-தமிழ்.

(Image by Tung Lam from Pixabay)

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *